வீரத்தைப் பேச பயப்படும் சித்ரா




இடியாப்பச் சிக்கல்களில் இருந்து மீள முடியாத நிலையில் ‘தாண்டவக்கோனே’, ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ படங்கள் இருக்கிறது. என்றாலும், மனோசித்ரா வுக்கு புதுப்படங்கள் ஒப்பந்தமாகிக் கொண்டே இருக்கும் மர்மம் என்னவென்று புரியவில்லை என, சக போட்டி நடிகைகள் புலம்புகிறார்கள்.



தமிழில் ‘நேற்று இன்று’, ‘வீரம்’, ‘ஒரு வானவில் போலே’, தெலுங்கில் ‘மல்லிகாடு மேரேஜ் பீரோ’, மலையாளத்தில் ‘பியானிஸ்ட்’ படங்களில் நடித்து வரும் மனோசித்ரா, சொந்தப் பெயருக்கு மாறியதால் மட்டுமே இவ்வளவு படங்கள் தனக்கு சாத்தியம் என்று நம்புகிறாராம். இடையிடையே அவர் தனக்கு ‘நந்தகி’ என்றும், ‘மனுமிகா’ என்றும் புதுப்பெயர்கள் சூட்டிக் கொண் டாலும், அவை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள அவர், அதிக படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு செல்போனில் பேசுவதைக் குறைத்து விட்டாராம்.



வளரும் நடிகைகளும் சரி, வளர்ந்து விட்ட நடிகைகளும் சரி, புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாவது குறித்து வெளியே சொல்ல அஞ்சுகிறார்கள். காரணம், ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதே நேரத்தில், அதை தட்டிப் பறிக்க சில நடிகைகள் கண்சிமிட்டாமல் காத்திருக்கிறார்களாம்.




அதனால்கூட தங்களைப் பற்றி மீடியாவிடம் பேச சிலர் அஞ்சுகிறார்களாம். எனவேதான் ‘வீரம்’ படத்தைப் பற்றியோ, தன் கேரக்டர் என்ன என்பதைப் பற்றியோ மனோசித்ரா வாயே திறப்பது இல்லையாம். ஒருநாள் ஐதராபாத் ஷூட்டிங்கில், யூனிட்டாருக்கு அஜீத் சமைத்துக் கொடுத்த பொங்கலை மட்டும் ரசித்து, ருசித்து சாப்பிட்டதை மட்டும் எப்படியோ சொல்லிவிட்டார்.
- தேவராஜ்