அரசியலில் தமன்னா





சில தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமன்னாவை தொடர்புகொண்டு தங்கள் கட்சிக்கு பணியாற்ற வரமுடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். இதனால் விரைவில் தமன்னா அரசியலில் குதிக்கலாம். வரும் பாராளுமன்றத் தேர்தலிலேயே போட்டியிடலாம் என்கிற அளவுக்கு வடநாட்டு மீடியாக்கள் தமன்னாவை அரசியலில் தள்ளாத குறையாக எழுதித் தள்ளிவிட்டன.

இதுகுறித்து தமன்னா தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல் எல்லோருக்கும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

சமீபத்தில் ‘வீரம்’ படத்தில் அஜீத்துடன் நடிப்பதற்காக மும்பையிலிருந்து ஐதராபாத் ஏர்போர்ட்டுக்கு வந்தார் தமன்னா. அப்போது தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் சிலர் ஒரு அமைச்சரை கெரோ செய்வதற்காக விமான நிலைய வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே வந்த தமன்னாவை அவர்கள் சுற்றி வளைத்து தெலுங்கானாவுக்கு எதிராக கோஷம் போடச் சொல்லியிருக்கிறார்கள்.



‘நான் அரசியல்வாதி அல்ல... அப்படிச் செய்ய முடியாது’ என்று தமன்னா கூறியிருக்கிறார். இதற்குள் சில நூறுபேர் கூடிவிட்டார்கள். ‘ஜெய் சமாய்க்கி ஆந்திரா’ (ஒன்றுபட்ட ஆந்திரா வாழ்க) என்று கோஷமிடச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த தமன்னா ‘நான் இந்தியன், ஜெய் இந்தியா’ என்று கோஷமிட்டபடி வீரமங்கைபோல் நடந்து கார் ஏறிச் சென்றிருக்கிறார்.

தங்கப்பதுமை என்று நினைத்திருந்த தமன்னாவின் இந்த துணிச்சல் அகில இந்திய கட்சிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தங்கள் கட்சியில் உள்ள நடிகர்களை வைத்து தமன்னாவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்திருக்கிறது. குறைந்த பட்சம் பிரச்சாரத்துக்கு வரமுடியுமா என்று கேட்டிருக்கிறது. பத்து படத்தில் கிடைக்கும் சம்பளத்தை ஒரே பேமண்டில் தரவும் கட்சிகள் தயாராக இருந்ததாம். ‘இப்போதைக்கு சினிமாதான். காதோரம் முடி நரைக்கும்போது அரசியல் பற்றி யோசிக்கலாம்’ என்று அங்கேயும் துணிச்சலாகச் சொல்லிவிட்டாராம் தமன்னா.
- சினிமா பாண்ட் 007