சொக்க வைக்கும் சோனியா





கிட்டத்தட்ட மோனாலிசா ஓவியம் மாதிரிதான். சோனியா அகர்வாலைப் பார்த்தால் எல்லோருக்கும் ஏற்படும் வியப்பு. காரணம், அவரது மென்சோகம் ததும்பிய முகம்... சிரிப்பு... வாளிப்பான தேகம். செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’, ‘7/ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், முதலில் தெலுங்கில் நடித்தார். பிறகு கன்னடத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் ‘சக்சஸ்’ படத்தில் அறிமுகமானார். செல்வராகவனுடன் காதல் மலர்ந்த பிறகு அவருக்கு ப்ரீ பப்ளிசிட்டி கிடைத்தது. பிறகு திருமணம் நடந்தது. ஜெட் வேகத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிறகு சட்டப்படி அவர்கள் விவாகரத்து பெற்றனர்.

இதனையடுத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ‘வானம்’ அவருக்கு கைகொடுக்கவில்லை. காரணம், சின்ன வேடம். பிறகு ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படம் அவரை பரபரப்புக்குள்ளாக்கியது.



இதையடுத்து சென்னையில் தன் சகோதரருக்கு மியூஸிக் ஸ்கூல் திறந்து கொடுத்த சோனியா, கடுமையாக உடற்பயிற்சி செய்து, பழையபடி சிக்கென்று தன் உடற்கட்டை மாற்றியிருக்கிறார். அதன் பலனாக, மலையாளத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்தார். இதையடுத்து விவேக் ஜோடியாக ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் நடித்து வருகிறார். தவிர, ‘அம்மா நானா ஊரிலிதே’ தெலுங்குப் படத்தில், ஒரு குத்துப்பாடலுக்கு கிளுகிளு ஆட்டம் போட்டுள்ளார் சோனியா. இரண்டாவது இன்னிங்சில் ஜெயிக்க வாழ்த்துகள்.
 - தேவராஜ்