விடிய விடிய இரவினை வடித்து...



'தடையற தாக்க' படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர் மகிழ் திருமேனி. கவுதம் வாசுதேவ்மேனன் பட்டறையிலிருந்து வந்தவர். இப்போது அவர் மீகாமனோடு அடுத்த பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். லவ்வர் பாய் ஆர்யாவை ஆக்ஷன் ஹீரோவாகவும், அழகுப் பதுமை ஹன்சிகாவை இன்னும் அழகியாகவும் மாற்றி படமெடுத்துக் கொண்டிருக்கிறார்.

உங்க ஷூட்டிங் பார்க்கணுமே என்றதுமே "இப்போ ஆக்ஷன் சீன்ஸ் போயிட்டிருக்கு. உங்க டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி சீன் எடுக்கும்போது சொல்றேன்" என்றவர் சரியாக ஒரு வாரம் கழித்து போன் பண்ணினார். "கிழக்கு கடற்கரை சாலையில இருக்குற TTகே ஹவுஸ்ல நாளை ஷூட்டிங் வச்சிருக்கேன் வந்திடுங்க" என்றார் மறக்காமல்.

ஆர்வத்துடன் சென்றோம்... "சார் செம சாங் எடுக்குறோம். சூப்பரான மூட் சாங்... ஹன்சிகாவும், ஆர்யாவும் செம மூட்ல இருக்கிற மாதிரி டான்ஸ் மாஸ்டர் விஜி ஸ்டெப்ஸ் போட்டிருக்கிறார். நேர்ல பார்க்க கொடுத்து வச்சிருக்கணும்" என்று அழைத்துப் போன உதவியாளர் அருள் லீடு கொடுத்தார். ஹவுசின் கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததுமே அருள் சொன்னது உண்மைதான் என்று தெரிந்தது. காதில் விழுந்த பாட்டு வரிகள்...

ஏன் இங்கு வந்தான்? / பேசாதே என்றான் / செல் என்று சொன்னேன் / என்னுள்ளே சென்றான்.
உறங்கிக் கிடந்த / புலன்களை எல்லாம் / எழுப்பி விடுகின்றான்.
சிறிது சிறிதாய்  / கிரகங்கள் எல்லாம் / கிளப்பி விடுகின்றான்.

பூவும் திறக்கும் / நொடியின் முன்னே / தேனை எடுக்கின்றான்... ஓ... ஓ... / காதல் பிறக்கும் / நொடியின் முன்னே / காமம் கொடுக்கின்றான்!
என் அழகை ரசிக்கிறான்... ஓ... ஓ... / என் இளமை ருசிக்கிறான்... ஓ... ஓ... / என் இடையின் சரிவிலே / மழைத் துளியென  / உருள்கின்றான்!

என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான் / என் கோபத்தை மதுவாய் சுவைத்தான் / என் கண்களின் சிவப்பை / அலகினில் ஏந்தி / கன்னத்தில் பூசுகின்றான்!
விடிய விடிய  / இரவினை வடித்து / குடிக்கச் செய்தானே ஓ... ஓ... / கொடிய கொடிய / வலிகளைக் கூட / பிடிக்கச் செய்தானே!

நான் ஒளியில் நடக்கிறேன்... ஓ... ஓ... / என் நிழலாய் தொடர்கிறான்... ஓ... ஓ... / என் விளக்கை அணைக்கிறேன் / ஏன் இருளெனப் படர்கின்றான்!
முன் அனுமதியின்றி நுழைந்தான் / என் அறையினில் எங்கும் நிறைந்தான் / இது முறையில்லை என்றேன் / வரையறை இன்றி  / எனை அவன் சிறைப் பிடித்தான்!
சிறையின் உள்ளே / சிறகுகள் தந்து / பறக்கச் செய்தானே ஓ... ஓ... / கனவும் நனவும் / தொடும் ஒரு இடத்தில் / இருக்கச் செய்தானே!

கொஞ்சம் ஆழமாக யோசித்தால் "நேத்து ராத்திரி யம்மா.. தூக்கம் போச்சுடி  யம்மா...." பாடலை கவித்துவமாகவும், நயமாகவும் பாடுவது மாதிரி இருந்தது. தமன் இசையில் பூஜா பாடியிருக்கிறார். பாடல் வரிகளுக்கான அபிநயங்களை கற்பனை செய்தபோதே கிளுகிளுப்பாக இருந்தது. "கொடிய கொடிய வலிகளைக்கூட பிடிக்கச் செய்தானே..." என்ற வரிகள் ரசனை இல்லாதவனையும் கற்பனை உலகில் மிதக்க விடும்.

ஹீரோ ஹீரோயின் நெருக்கமான பாடல் என்பதால் அனுமதி வரையறுக்கப்பட்டிருந்தது. கட்டுக் காவல்களை மீறிச் சென்று பார்த்தோம். நம் மனதில் உதித்த கற்பனைகள் எல்லாம் அங்கே காட்சியாகிக் கொண்டிருந்தது. நம்ம ஹன்சிகாவா என்று மிரளும்படி ஆடிக்கொண்டிருந்தார். விளக்கமாகச் சொன்னால் படம் பார்க்கும்போது கிக் போய்விடும். அதனால்  இத்தோடு கப்சிப்.

 ஷாட்டை முடித்துவிட்டு  வந்த மகிழ்திருமேனியிடம் பேசினோம். பாட்டு... என்று ஆரம்பிக்கும் முன்னே... “காதலின் தேகவலியை உணர்த்தும் பாடல் இது. கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்று மதன் கார்க்கி யிடம் சொன்னேன். மனுஷன் எழுதித் தள்ளிவிட்டார். அவர் எழுதினதுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா? ஆர்யாவிடமும், ஹன்சிகாவிடமும் பாட்டு வரிகளையும், சூழ்நிலையையும் சொல்லி புரிய வைத்தேன். நல்ல ஈடுபாட்டுடன் நடிக்கிறார்கள்” என்றார். அப்புறம் படம் பற்றிய கேள்வியை முடிப்பதற்குள் அவரே தொடர்கிறார்...

“மீகாமன் என்றால் கப்பல் தலைவன் என்று பொருள். கப்பல் தலைவனுக்கு கடலைப் பற்றி அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். ஆபத்தை சமாளிக்கவும் தெரிய வேண்டும். மற்றவர்களைக் காப்பாற்றும் துணிச்சல் வேண்டும். சமயோசித அறிவு வேண்டும். இந்த குணங்களைக் கொண்டவன் ஹீரோ என்பதால் இந்த தலைப்பு. இது கப்பல் கேப்டன் பற்றிய கதை அல்ல. ஆனால் கடல் சார்ந்த கதை” என்றார்.

‘ஹன்சிகா இதிலும் கிளாமர் ஹீரோயின்தானா?’ என்றால் வேகமாக மறுக்கிறார். “இந்த பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு எடை போடாதீங்க. படத்தில் ஹன்சிகாவுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கு. அவரோட கேரக்டர் பேசப்படுகிற மாதிரி இருக்கும்” என்றார். பேசிக்கொண்டிருக்கும் போதே அருகில் வந்தார் ஹன்சிகா. அவரது முகத்தில் சின்ன கலக்கம் இருந்தது. சந்தேக ரேகை படர்ந்திருந்தது. மெதுவாக நுனி நாக்கு ஆங்கிலத்தில் “சார் எனக்குன்னு ஒரு நல்ல இமேஜ் இருக்கு. இந்த பாட்டு வரியும், சீனும் என்னோட இமேஜை பாதிக்காதே...” என்றார்.

ஹன்சிகாவின் சந்தேகம் கேட்டு டக்கென்று எழுந்த மகிழ் திருமேனி, “ஒரு துளிகூட உங்க இமேஜ் பாதிக்காது. அதுக்கு நான் கியாரண்டி. படத்தோட பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்” என்றார். அந்த பதிலில் திருப்தி அடைந்தவராக திரும்பினார் ஹன்சிகா. நீங்களெல்லாம் திரையில் பார்க்க இருக்கும் விஷயத்தை நேரில் பார்த்த திருப்தியுடன் நாமும் திரும்பினோம்.

-மீரான்