அமர்க்கள பூஜை!



விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘பூஜை’. முதன் முறையாக விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கிறார்.  முக்கிய வேடத்தில் ராதிகா, சூரி, இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, தலைவாசல் விஜய், சித்தாரா, கௌசல்யா நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு பாட்டுக்கு ஆண்ட்ரியா ஆட்டம் போட்டிருக்கிறார்.

கோயமுத்தூரில் நண்பர்கள், காதலி, குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் விஷாலை ‘போக்கிரி’ முகேஷ் திவாரி சீண்டிப் பார்க்கிறார். ஆரம்பத்தில் பதுங்கும் விஷால், பூனேயில் இருக்கும் முகேஷ் திவாரி மீது எப்படி பாய்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்திருக்கும் ஹரி, இதில் தன்னுடைய வழக்கமான ஒர்க்கிங் ஸ்டைலில் இருந்து வெளியே வந்து படமாக்கியிருப்பதைக் குறித்து சிலாகிக்கிறது படக்குழு.

விஷால்தான் தயாரிப்பாளர் என்பதால் படப்பிடிப்புக்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உடனுக்குடன் செய்து தரப்பட்டதாம். ஹரியுடன் சுமார் 12 படங்கள் இணைந்து வேலை செய்த ஒளிப்பதிவாளர் ப்ரியன், ஆர்ட் டைரக்டர் கதிர் தங்கள் கூட்டணியை இந்தப் படத்திலும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு கோயமுத்தூரிலும் க்ளைமாக்ஸ் பூனேயிலும் படமாக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா மாடர்ன் கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு பேங்காக், சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட  பல இடங்களிலிருந்து காஸ்ட்யூம்ஸ் வாங்கினார்களாம். யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

கோயமுத்தூர் மார்க்கெட்டை தத்ரூபமாக செட் போட்டு படமாக்கியுள்ளார்கள். அதே போல் ஹீரோவின் பழமையும் புதுமையும் கலந்த ஆபீஸ் செட், பாடல் காட்சிகளுக்கான செட் என படத்தில் நிறைய செட் ஒர்க் இருந்தாலும் கண்களை உறுத்தாத அளவுக்கு நேச்சுரலாக இருக்குமாம். மலைப் பிரதேசம் போன்ற லொகேஷனுக்காக 10 லாரி லோடு கொரியன் புற்கள் வாங்கி படமாக்கினார்களாம். புல்வெளி அமைக்கும் பணியில் மட்டும் சுமார் 300 ஊழியர்கள் வேலை செய்தார்களாம்.

- எஸ்