வார்த்தையால் வசியப்படுத்தும் வைரமுத்து



பாட்டுச்சாலை

விவசாயக் குடும்பத்தி லிருந்து வந்து விஞ்ஞான வார்த்தைகளை வெள்ளித் திரையில் விதைத்துக் கொண்டிருக்கும் பாடலாசிரியர் வைரமுத்து. 'வானமகள் நாணுகிறாள் / வேறு உடை பூணுகிறாள்' என்று நிழல்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியவர், அந்த வீரியம் குறையாமல் இன்னமும் வெற்றி நடை போடுகிறார்.

இந்திய திரைப்பாடலாசிரியர்களில் ஆறுமுறை தேசிய விருது பெற்ற ஒரே கவிஞர் என்பது சிரத்தையுடன் சிந்திக்கும் இவரது சிரத்துக்கு சூட்டப்பட்ட மகுடம். தமிழக அரசும் ஆறுமுறை சிறந்த பாடலாசிரியர் விருது கொடுத்து, இவரது தமிழுக்கு மரியாதை செய்திருக்கிறது.

இளங்கலை மாணவராக இருந்தபோது இவர் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பான 'வைகறை மேகங்கள்' ஒரு மகளிர் கல்லூரியில் துணைப் பாடமாக வைக்கப்பட்டபோது பல்கலைக்கழகங்களே வியந்து பாராட்டின.

 சுலபத்தில் சாத்தியப்படாத 'சாகித்ய அகாடமி' இவரது 'கள்ளிக்காட்டு இதிகாசம்' வாழ்விலக்கியத்துக்கு வணக்கம் சொன்னது. 'பத்மஸ்ரீ' மற்றும் 'பத்மபூஷண்' விருதுகள் இவரது தொடுவிரலும் பெருவிரலும் இணைந்து செய்த சேவைக்காக சலாம் போட்டன.

வைரமுத்துவின் படைப்புகளை ஆராய்ச்சி செய்து 90 பேராசிரியர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் எம்.பில் பட்டம் வாங்கி இவரது எழுத்துகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இப்படி எழுதியிருக்கிறார் என்று எடுத்துக் காட்டியவர்களுக்கே டாக்டர் பட்டம் என்றால், அப்படி அப்படி எழுதிய இவருக்குக் கிடைக்காமலா இருக்கும்? மதுரைக் காமராசர், கோவை பாரதியார், தமிழ்நாடு திறந்தநிலை என மூன்று பல்கலைக்கழகங்கள் இவரது மூத்த தமிழை முத்தமிட்டுப் பாராட்டின.

''வைரமுத்துவின் சிந்தனைகளை இந்தி யில் மொழிபெயர்ப்பது கடினமான ஒன்று. அவ்வளவு உயரத்தில் வைரமுத்து சிந்திக்கிறார்'' என்கிறார் இந்திப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர். இவர் சாதாரண கவிஞர் அல்ல; தேசிய விருதுப் போட்டியில் நமது கவிஞருக்கு நெருக்கத்தில் இருப்பவர். ''வைரமுத்து என்னைவிடச் சிறப்பாக எழுதுகிறார்.

 வசியப்படுத்தும் வார்த்தை களால் திரையுலகை வைரமுத்து ஆட்டி வைக்கிறார். அவர் இந்தியில் எழுத வந்தால் என்னவாகும் என்ற கற்பனையே எனக்கு அச்சத்தைத் தருகிறது'' என்கிறார் எழுத்தாளர், இயக்குனர், திரைப்பாடலாசிரியர் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதை தலையில் சூடியிருக்கும் குல்சார்.

அந்நாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இவரை 'கவி சாம்ராட்' என்று கவுரவப்படுத்தினார்.  அந்நாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், 'காப்பியக் கவிஞர்' என கவியாரம் சூட்டினார். முத்தமிழறிஞர் கலைஞர், 'கவிப்பேரரசு' என்று உச்சத்தில் வைத்தார். கொல்கத்தாவிலுள்ள பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு 'சாதனா சம்மன்' என்று சான்று வழங்கியிருக்கிறது.

 அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் இவரது கவிதைகளை இவரது குரலிலேயே பதிவுசெய்து ஆவணப் படுத்தி அழகுபார்க்கிறது. தனியார் அமைப்பு ஒன்று கனடா அரசாங்கத்துடன் இணைந்து டொரண்டோவில் இவருக்கு தபால்தலை வெளியிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், ரஷ்யன் மற்றும் நார்வேஜியன் மொழிகளில் வடுகப்பட்டிக்காரரின் கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு ரசிக்கப்படுகின்றன. இவரது 'சின்னச் சின்ன ஆசை...' பாடல்வரிகளை பள்ளிக்கூடத்தில் பாடமாக வைத்து சிறப்பு செய்திருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் உயிரை மாய்த்துக் கொண்ட 11 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 11 லட்ச ரூபாயை உதவித் தொகையாக வழங்கியிருக்கிறார் வைரமுத்து. இவர் கண்ணீர் வடித்து எழுதிய 'மூன்றாம் உலகப்போர்' காவியம்தான் அந்தக் குடும்பங்களின் கண்ணீர் துடைக்க காசுகொடுத்து உதவியது.

இதுவரை 7000 பாடல்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியிருக்கும் கவிப் பேரரசு வசனகர்த்தாவாகவும் வாகை சூடியவர். 'நட்பு', ஓடங்கள்', 'வண்ணக் கனவுகள்', 'அன்று பெய்த மழையில்', 'துளசி' ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். சின்னப்படம், பெரிய படம் என்று இனம் பிரித்துப் பார்க்காமல், 'எனது எழுத்து சிறப்பாக இடம்பெற வேண்டும்' என்பதை மட்டும் இலக்காக வைத்திருப்பதே இவரது பெரிய வெற்றியின் எளிய ரகசியம்.

'ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது...' - இது 'செல்லமே' படத்துக்காக ஒரு கறுப்புக் காதலன் சிவப்புக் காதலியைப் பார்த்துப் பாடும் சிங்காரத்தமிழ். 'வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி...' -இது நம்பிக்கை இழந்தோரின் நாடி பிடித்து மருந்து கொடுக்கும்  'யூத்' படப் பாடல்.'சிக்குப்பட்ட எள்போலே

நொக்குப்பட்டேன் உன்னாலே...'- இந்தப் புதுச் சிந்தனை 'முத்து' படத்தின் 'தில்லானா...' பாடலுக்குள் உட்கார்ந்திருக்கிறது. 'தலை முதல் கால் வரை தவிக்கின்ற தூரத்தைஇதழ்களில் கடந்துவிடு...' - இது உச்சி முதல் பாதம் வரை உம்மா கொடு என்கிற பொருளுக்கான உயர் தமிழ்ச் சொல்லாடல். பாடல்:  சஹானா, படம்:  'சிவாஜி'. 'குருக்குச் சிறுத்தவளே...' என்று இடுப்பின் கிராமத்து வார்த்தையால் கிறங்க வைக்கிறார் 'முதல்வன்' படத்தில் பாட்டு முதல்வன்.

'சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்


சின்ன பார்வை மோட்சம் ஆகும்...' -இது அஞ்சுக்கு அடுத்து ஆறு என்று காதலி சொன்னால்கூட வியந்து பாராட்டும் விளையாட்டுக் 'காதலன்'களின் வேதப்பாட்டு.'அடி கச்சைக்கனியே பந்தி நடத்து கட்டில் இலை போட்டு...'- இது   'அரிமா அரிமா....' பாடலில் வரும் அசைவச்சுவை வரிகள்.மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது - இதை மனம்தான் உணர மறுக்கிறது - இது ‘முத்து’ படத்தில் வைரமுத்து பதித்த வைரம்.

மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம் மலர்மீது துயில் கொள்ளட்டும் - இது ‘பம்பாய்’ படத்துக்கு பாடப்பட்ட மனித கீதம்.
இனி தேன்வரும் என்பதும் பால்வரும் என்பதும்
ஜோசியம் ஆனதடா - அட
சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது
சூசகமானதடா - இது ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தில்கவிஞரின்
கண் சிவந்ததால் எடுக்கப்பட்ட சாட்டை.

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்
தாயின் காலடியே உலகம் முடியுமிடம் - இது ‘வரலாறு’
படத்தில் பாடப்பட்ட தொப்புள் கொடி நேசம்.
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை - இது ‘மொழி’
படத்தில் இடம்பெற்ற பாடல் மொழி.
மனைவி மாதா மட்டும் இல்ல
மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்ட தோண்டிப்பாத்தா

செம்மண் ஊத்து ரெத்தம்தான் - இது ‘ராவணன்’
 படத்தில் வந்த வீர முழக்கம்.
பிறக்கின்ற போதே
இறக்கின்ற தேதி

இருக்கின்றதென்பது மெய்தானே - இது ‘நீங்கள் கேட்டவை’ படத்தில் சொல்லப்பட்ட வாழ்வியல்.
எழுதியபடிதான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு
இளமை உன் தோள்களில் இருக்கும்போதே

எது நிசம் என்பதை எட்டிவிடு - இது ‘சிவப்புமல்லி’யில், தூங்கும் இளமையைத் தட்டும் பாட்டு.
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ - இது ‘பயணங்கள் முடிவதில்லை’
படத்தில் மேகமாய் வந்து மழையாய் விழுந்த கவிதை.
வாணிகம் நடத்த வந்தவர் அன்று
அரசியல் கொண்டது வரலாறு
அரசியல் நடத்த வந்தவர் இன்று

வாணிகம் செய்வது கோளாறு - இது ‘ஜாதிமல்லி’ படத்தில் சொல்லப்பட்ட சமகால அரசியல். நூறு ஆண்டு திரைப்பட வரலாற்றில் வாழும் காலத்திலேயே இவரைப் போல உச்சம் தொட்ட கவிஞர் யாரும் இல்லை என்பதை தமிழின் எதிரிகள்கூட தயக்கமில்லாமல் ஒப்புக் கொள்வார்கள். மொழியை ரசித்து ருசிப்பவனை உலகம் கொண்டாடும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் வைரமுத்துவின் வாரிசுகள் மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும் தொட்டுத் தொடரும் பாட்டுப் பாரம்பரியமாய் முன்னணி இடம் நோக்கி பாட்டுச்சாலையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நெல்லைபாரதி

அடுத்த இதழில்... இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு