தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்



கண்டதும் காதல் என்பதுதான் படத்தின் ஒன் லைன். விஜய் வசந்த், ரஸ்னா இருவரும் பார்த்த நாள் முதல் காதல் வயப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் ரஸ்னாவுக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அந்த சமயத்தில் காதலர்கள் வீட்டை வீட்டு எஸ்கேப் ஆகிறார்கள். ஊட்டி மலைப்பகுதியில் தஞ்சம் அடையும் நெஞ்சங்கள் குடும்பம் நடத்த படாத பாடு படுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் இந்தப் பையன் வேண்டாம் என்று அந்தப் பெண்ணும், இந்தப் பொண்ணு வேண்டாம் என்று அந்தப் பையனும் முடிவெடுத்து புறப்பட்ட இடத்துக்கே வந்து சேருகிறார்கள். இப்போது ரஸ்னா வீட்டில் மீண்டும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அதே சமயம் காதலர்களிடையே மீண்டும் காதல் துளிர் விட ஆரம்பிக்கிறது. காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பது பரபர க்ளைமாக்ஸ்.

திகட்டத் திகட்ட காதலிக்கும் போதும் சரி, காதலியின் வெகுளித்தனத்தைக் கண்டு பரிதவிக்கும் காட்சியிலும் சரி விஜய் வசந்த் மிரட்டியிருக்கிறார். காதலி பண்ணும் ஏடாகூட செயலைக் கண்டு பொறுக்க முடியாமல் பாத்ரூமில் குமுறும் காட்சியில் ஒட்டு மொத்த ஆடியன்ஸையும் தன் பக்கம் இழுக்கிறார்.

நிறைய குறும்பு, கொஞ்சம் நடிப்பு என கலந்துகட்டி அடித்திருக்கும் ரஸ்னா, நானும் சமைக்கிறேன் என்று சமைக்கும் காட்சியிலும் சரி, கேரட் தோட்டத்துக்கே வந்து விஜய் வசந்தின் வேலைக்கே உலை வைக்கும் காட்சியாகட்டும் சரி, வசீகரிக்கிறார்.

பவனுக்கு நல்லவனா, கெட்டவனா என்று புரிந்து கொள்ள முடியாத கேரக்டர். ஆனால் இடம், பொருள், ஏவல் அறிந்து அடக்கி வாசித்திருக்கிறார். பி.ஆர்.ஸ்ரீநார்த் இசையில் பாடல்கள் எட்டுத்திக்கும் எதிரொலிக்குமளவுக்கு இனிமை. வீடாக இருந்தாலும் சரி, ஊட்டி மலை ரோடாக இருந்தாலும் சரி எல்லா இடங்களிலும் கண்களை பதம் பார்க்காத ஒளிப்பதிவு. வாழ்த்துகள் எல்.கே.விஜய்.

வித்தியாசமான கதை, வித்தியாசமான வசனங்கள், வித்தியாசமான காட்சிகள் என காட்சிக்கு காட்சி அதகளப்படுத்தியிருக்கும் அறிமுக இயக்குனர் கே.ராமு கோடம்பாக்கத்துக்கு கிடைத்திருக்கும் இன்னொரு பொக்கிஷம்.