சூர்யாவின் பங்களா! அஜீத்தின் வீடு!



திருவான்மியூர் வால்மீகி நகரிலுள்ள தன் வீட்டுப் பணியாளர்கள் பன்னிரெண்டு பேருக்கு, கேளம்பாக்கத்திலுள்ள குமுளி பகுதியில் சொந்த வீடு கட்டிக் கொடுத்த அஜீத், அனைவரும் மூன்று ஷிஃப்ட்டாக வேலைக்கு வந்து செல்வதற்காக வேன் ஒன்றும் வாங்கிக் கொடுத்துள்ளார். எல்லா பணியாளர்களுக்கும் எல்.ஐ.சி பாலிசி எடுத்துக் கொடுத்திருக்கும் அவர், மருத்துவச் செலவுக்கு முன்தொகையையும் வங்கியில் முதலீடு செய்துள்ளார்.

 பணியாளர்களின் வாரிசுகள் மேற்படிப்பு படிப்பதற்காக பண உதவி செய்து வருகிறார். முக்கியமாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அதாவது, பணியாளர்கள் ஒருவரைப் பற்றி இன்னொருவரிடமோ அல்லது தன்னிடமோ தவறாக போட்டுக் கொடுக்கக் கூடாது என்று.

மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அதற்காக அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார் விக்ரம். இப்போது ‘ஐ’ படத்துக்காக தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் அவரே டப்பிங் பேசியிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் அவர் மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் பேசிய அனுபவம் இருப்பதால், தனக்குப் பேசும்போது தெளிவாகவும், பிரமிக்கும் வகையிலும் பேசி விடுகிறார். சமீபத்தில் அவரது கடுமையான உழைப்பை மனம் திறந்து பாராட்டிய ஷங்கர், ‘அந்நியன்’, ‘ஐ’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் விக்ரமுடன் பணியாற்ற ஆர்வத்துடன் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

தியாகராய நகரில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு எதிரில், எட்டு கிரவுண்டு பரப்பளவில் பிரமாண்டமான பங்களா கட்டிக் கொண்டிருக்கிறார் சூர்யா. இரண்டு வருடங்களுக்கு மேல் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. என்றாலும், இறுதி வடிவம் கிடைக்கவில்லை. உலகிலுள்ள அதிநவீன நுட்பங்கள் இந்த பங்களாவில் அமைக்கப்படுகின்றன.

இதில் சிவகுமார், கார்த்தி ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ ஆவலுடன் காத்திருக்கும் சூர்யா, தன் காதல் மனைவி ஜோதிகா நடிக்கும் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சொந்தக் குரலில் பாடவும், கவுரவ வேடத்தில் நடிக்கவும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

 -தேவராஜ்