யாவும் வசப்படும்



கதாநாயகி தில்மிகா மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகள். தில்மிகாவை கடத்தினால் பெரும் பணம் கிடைக்கும். நீயும் செட்டில் ஆகலாம். நானும் செட்டிலாகலாம் என்று நாயகன் விஜித்துக்கு ஐடியா கொடுக்கிறார் வில்லன்.

திட்டம் போட்டு ஒரு நாள் நாயகியை கடத்துகிறார்கள். பிளான்படி பணமும் வந்து சேருகிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல பணத்தைப் பங்கு போடும் போது நாயகனும், வில்லனும் முட்டிக் கொள்கிறார்கள். வில்லனிடமிருந்து நாயகியையும், பணத்தையும் நாயகன் காப்பாற்றினாரா, இல்லையா என்பது மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜித் புதுமுகம் என்றாலும் பல காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார். ஆரம்பத்திலேயே தில்மிகாவைக் கடத்தி கட்டி வைத்துவிடுவதால் நடிக்க வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. பாடல் காட்சியில் மட்டும் கிளாமர் காண்பித்து கொஞ்சம் பேர் வாங்குகிறார். நாயகனைவிட வில்லனாக நடித்திருக்கும் பாலாவுக்குத்தான் பெரிய ரோல். அதை அவரும் கச்சிதமாக நடித்து காப்பாற்றுகிறார்.

சஸ்பென்ஸ் ஆக்ஷன் கதையின் மூடுக்கு நம்மை சுலபமாக அழைத்துச் செல்கிறது பின்னணி இசை. கதையின் முன்பகுதியாகட்டும், கதையின் பின்பகுதியாகட்டும், எந்த இடத்திலும் யூகிக்க முடியாதளவுக்கு விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார் புதியவன் ராசைய்யா.