பசங்களின் வர்க்கச் சண்டை!



‘புதியவன்’ உட்பட ஏழு குறும்படங்களை இயக்கிய அனுபவசாலி என்ற அடையாளத்தோடு வெள்ளித்திரையில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்திருக்கிறார் எஸ்.கல்யாண். படத்தின் பெயர் ‘கத சொல்லப் போறோம்’. “அனாதை ஆசிரமத்து மாணவர்களுக்கும், வசதியான மாணவர்களுக்கும் இடையே சண்டை நடக்கிறது. மாணவர்களின் மோதலை சீரியஸாக சொல்லாமல் சென்டிமென்ட், காமெடி கலந்து சொல்லியிருக்கிறேன். அனாதை ஆசிரம மாணவர்களாக அரவிந்த், அர்ஜுன், ஷிபானா, ரவீணா நடித்திருக்கிறார்கள்.

வசதியான மாணவர்களாக டீனு, சாமு, ராகுல் நடித்திருக்கிறார்கள். பிறந்த குழந்தையை கடத்தல்காரர்களிடம் பறிகொடுத்த தம்பதியாக ‘ஆடுகளம்’ நரேன், விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். ஹாஸ்டல் வார்டனாக ‘முண்டாசுப்பட்டி’ காளி நடித்திருக்கிறார். காளிக்கு இந்தப் படம் பெரிய திருப்புமுனையாக இருக்கும்.

அந்தளவுக்கு அவருடைய நடிப்பு தத்ரூபமாக இருக்கும். அதே போல் பசங்க நடிப்பும் யதார்த்தமாக இருக்கும். கண்ணெதிரில் சண்டை நடந்தால் எப்படியிருக்குமோ அதுபோல பசங்க மோதிக்கொள்ளும் காட்சி இயல்பாக இருக்கும். பசங்க நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சுமார் 1000 பசங்களிடம் ஆடிஷன் நடத்தினோம்.

அந்த வகையில் எங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணனுக்கு திரையிட்டோம். படத்தைப் பார்த்தவுடன் நெகிழ்ந்து போன அவர், தன்னுடைய ‘ஈ5 என்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா’ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்கிறார். இதை எங்க டீமுக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்” என்கிறார் எஸ்.கல்யாண்.

-எஸ்