ஒரு ஊர்ல ரெண்டு ராஜா



இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்ற பழமொழியையொட்டிய கதை.  மிகப் பெரிய இரும்புத் தொழிற்சாலைக்குச் சொந்தக்காரர் நாசர். ஆனால் இரும்புத் தொழிற்சாலையின் தரம் காயலான் கடைக்கு விற்க வேண்டிய நிலையில் ரொம்பப் பழசு.

சவுண்ட் பொலூஷன் எனப்படும் அளவுக்கதிகமான சத்தம் எழுப்பும் அந்தத் தொழிற்சாலை ப்ரியா ஆனந்தின் தோழி விசாகாவை காவு வாங்குகிறது. தோழிக்கு ஆதரவாகவும், தொழிற்சாலைக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறார் ப்ரியா ஆனந்த். வெற்றி யார் பக்கம் என்பது மீதிக்கதை.

இந்தப் படத்துக்கு ஒரு ஊர்ல ஒரு ராணி என்றுதான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். அந்தளவுக்கு ப்ரியா ஆனந்த் படம் முழுக்க ஆளுமைச் செலுத்துகிறார். குவார்ட்டர் வாங்குவதில் ஆரம்பிக்கும் அதிரடி படம் முழுக்க நெத்தியடியாக எதிரொலிக்கிறது.

நீதிக்காக குரல் கொடுக்கும் ப்ரியா ஆனந்த் காதலுக்காகவும் கொஞ்சம் குரல் கொடுத்திருக்கலாம். வேலை இல்லாத இளைஞர் வேடத்துக்கு விமல் கச்சிதம். காதலைச் சொல்லாமல் காதல் வளர்க்கும் அவருடைய கேரக்டரும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் சூரி. நாசரின் கெட்டப்பும் மிடுக்கும் கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறது. இமான் இசையில் பாடல்கள் இனிமை. பி.ஜி.முத்தையாவின் கேமரா கதைக்கு வலு சேர்க்கிறது. அளவுக்கதிகமான சத்தம் மனிதர் களை எப்படி பாதிக்கிறது என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆர். கண்ணன்.