வீரியமாய்ப் பிறந்த விவேகா!



பாட்டுச்சாலை

திருவண்ணாமலை வேடங்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் விவேகா. இனிமேல் குழந்தை வேண்டாம் என்று இவரது அம்மா கிராமத்து முறையில் கர்ப்பப்பையில் சிகிச்சை எடுத்ததையும் மீறி பிறந்திருக்கிறார் இவர்.

அதனால் இந்த வீரியம் மிகுந்த குழந்தைக்கு விவேகானந்த வீர வைரமுத்து என்று பெயர் வைத்திருக்கிறார் அப்பா முனுசாமி.  மாரியம்மன் திருவிழாவின்போது இவர் வீட்டுத் திண்ணையில் தெருக்கூத்து நடக்கும். முக்கிய வேடமேற்று அப்பா நடிப்பதைப் பார்த்து இவருக்கும் நடிப்பு ஆர்வம் வந்திருக்கிறது.

நான்காம் வகுப்பு படிக்கும்போதே கவிதை இவருக்கு கை வந்திருக்கிறது. பள்ளி நாட்களில் நாடகங்களில் நடித்திருக்கிறார். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதம் பயின்றவர். கிருஷ்ணகிரியில் நடந்த மாங்கனி கண்காட்சியில், அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் இவரது வார்த்தை நடனம் முதல் பரிசை அள்ளியது.  கவிதை, பேச்சு, கட்டுரை என மூன்றிலும் சிறந்து விளங்கும் மாணவரை 'மாணவர் நாவலர்' என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது இவர் படித்த கல்லூரி. அந்தப் பட்டத்தை மூன்று முறை கைப்பற்றியிருக்கிறார் கவிஞர்.

'சிறப்பாக எழுதுகிறாயே, ஏன் சினிமாவுக்கு பாட்டு எழுதக்கூடாது' என்று இவரது எழுத்தைப் படித்தவர்கள் எல்லாம் ஒருமனதாக கொளுத்திப் போட்ட திரியை எடுத்துக் கொண்டு திரைவலத்துக்கு தயாராகியிருக்கிறார். ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சித் தொடர்களில் பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

 இயக்குனர் ராஜகுமாரனிடம் வாய்ப்புக் கேட்பதற்காக ஆர்.பி.சவுத்ரியின் அலுவலகத்துக்குப்போன நண்பர் சம்பத்குமார், இவரையும் உடன் அழைத்துப்போயிருக் கிறார். அங்கே ராஜகுமாரனிடம் சில கவிதை வரிகளைச் சொல்லியிருக்கிறார் விவேகா. கேட்டு ரசித்த அவர் அடுத்த சில நாட்களிலேயே இவரது அறைக்கு உதவி இயக்குனர்களை அனுப்பி, வரவழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

 'நீ வருவாய் என' படத்தில் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா...' என இவர் கேட்டதற்கு எல்லாப் பக்கத்தி லிருந்தும் 'பிடிச்சிருக்கு' என்ற பதில் வந்தது. அந்தப்பாட்டை தனது குருநாதர் விக்ரமனுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் ராஜகுமாரன். அடுத்த சில நாட்களில் விக்ரமனிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. 'வானத்தைப்போல' படத்தில் 'தாவணியே என்னை மயக்குறியே...' என்று இவர் எழுதிய பாடல் காது கேட்கும் அத்தனை பேரையும் மயக்கியது.

பெரிய பேனரில் முதன்முதலாக அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு ‘கந்தசாமி’ படம் மூலமாகக் கிடைத்தது. அந்தப் படத்தில் நான்கு பாடல்களை விக்ரம் பாடியிருந்தது ரசிகர்களிடம் சிறப்பு கவனம் பெற்றது. ஒரே வாரத்தில் ஒரு லட்சம் குறுந்தகடுகள் விற்று சாதனை படைத்தது 'கந்தசாமி' படப்பாடல்கள். அந்தப்படத்துக்குப் பின் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் எல்லாப் படங்களிலும் விவேகாவுக்கு பாடல் வாய்ப்பு கிடைத்தது.

'ரன்' படத்தில் இவர் எழுதிய 'மின்சாரம் என்மீது பாய்கின்றதே...' பாடலைக் கேட்டு இயக்குனர் லிங்குசாமியிடம் பாராட்டு தெரிவித்த ஷங்கர் 'நண்பன்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதில் இடம்பெற்ற 'என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சான்...' பாடல் லட்சக் கணக்கான பேரின் காலர் ட்யூனாக காற்றில் கலந்தது.

'வீரம்' படத்துக்கு எல்லாப் பாடல்களையும் விவேகா எழுதியிருந்தார். அவற்றில் 'ரத கஜ துரக...' என்கிற வீரம் கொப்பளிக்கும் பாடலைக் கேட்டு, இவரைக் கட்டிப்பிடித்து பாராட்டியிருக்கிறார் அஜித்.
விஜய்க்கு 'வில்லு' படத்தில் இவர் எழுதிய 'டாடி மம்மி வீட்டில் இல்லை...' பாடலின் அர்த்தம் புரியாமல் பள்ளிக் குழந்தைகள் ஆண்டுவிழாக்களில் ஆட்டம் போட்டனர். 'காஞ்சனா' படத்தில் இவர் எழுதிய 'கொடியவனின்...' என்ற பாடலை 'இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ' என்று பாராட்டியிருக்கிறார்  டான்ஸ் மாஸ்டரும் இயக்குனருமான லாரன்ஸ். அடுத்து லாரன்ஸ் இயக்கும் 'கருப்புத்துரை கிழவன்' படத்துக்கு பாடல்களுடன் வசனமும் எழுதுகிறார் விவேகா.

இவரது 'மேலும் கீழும்' என்கிற கவிதையை பத்தாயிரம் பிரதிகள் அச்சடித்து தங்களது மாநாட்டில் விநியோகித்திருக்கிறார்கள் கடைநிலை ஊழியர்கள். இவர் எழுதிய 'உயரங்களின் வேர்' கவிதைத் தொகுப்பை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்.

தமிழ்நாடு பண்பாட்டு ஆராய்ச்சிக் கழகத்தின் 'சிந்தனைச்செம்மல்' மற்றும் எம்.ஜி.ஆர்  செவாலியே விருதுகளைப் பெற்றிருக்கும் விவேகாவுக்கு கண்ணதாசன் விருது ஐந்துமுறை கிடைத்திருக்கிறது. 'காதல் சுகமானது' படத்தில் 'சொல்லத்தான் நினைக்கிறேன்...', ' உனக்கும் எனக்கும்' (சம்திங் சம்திங்) படத்தில் 'கோழி வெடக்கோழி...',

'சந்தோஷ் சுப்ரமண்யம்' படத்தில் 'எப்படி இருந்த என் மனசு...', 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் 'விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்...', 'வேட்டைக்காரன்' படத்தில் 'ஒரு சின்னத்தாமரை...', 'சிறுத்தை' படத்தில் 'அழகா பொறந்துபுட்ட ஆறடி சந்தனக்கட்ட...' என இரண்டாயிரம் பாடல்களைத் தாண்டி விவேகாவின் பாட்டுச்சாலைப் பயணம் தொடர்கிறது. முன்னணி இயக்குனர்கள் மற்றும் முன்னணி இசையமைப்பாளர்கள் விரும்பும் பாடலாசிரியர்களில் இவருக்கு முன்வரிசையில் இடம் இருக்கிறது.

அடுத்த இதழில்...
‘பின்னணிப் பாடகி’ பி.லீலா