தனுஷ் வைத்த கோரிக்கை!



கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘அனேகன்’. தனுஷ் ஜோடி அமைரா தஸ்தூர். ஏ.ஜி.எஸ்.என்டர்டைன்மென்ட் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்திருக்கிறார்கள்.

“முதன் முறையாக இந்தப் படத்தில் காதலை மையமாக வைத்து இயக்கியிருக்கிறேன். இந்தக் கதைக்கு ஏன் தனுஷ் என்ற கேள்வி இருக்கும்? அதுக்கு காரணம் தனுஷ்தான். காதலில் அவர் சந்திக்காத தோல்வியும் இல்லை.

வெற்றியும் இல்லை. நான் அவர் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’ போன்ற படங்களை அடிப்படையாக வைத்து சொல்கிறேன். காதலில் அதிக அனுபவம் உள்ள அவரை விட இந்தப் படத்துக்கு வேறு யாரும் எனக்கு பொருத்தமாகத் தெரியவில்லை.

அவரைச் சந்தித்து கதை சொல்ல ஆரம்பித்தபோதே ‘நான் இந்தப் படம் பண்றேன். ஏன் கதை சொல்றீங்க’ என்ற ரீதியில் என் மீது முழு நம்பிக்கை வைத்தார். நானும் அவர் மீது நம்பிக்கை வைத்தேன். அவருடைய பாடிலேங்வேஜ், காஸ்ட்யூம்,  கெட்டப்பில் டோட்டல் சேஞ்ச் தெரியும்.

எங்கள் இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்ததால் நிறைய புதுமைகளை படைக்க முடிந்தது. அவர் என்னிடம் சைவ உணவு கிடைக்குமா, அசைவ உணவு கிடைக்குமா என்று சிறியளவில்தான்  கோரிக்கைகள் வைப்பார். ஆனால் நான் ‘3 நிமிடம் தண்ணீருக் கடியில் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும். 60 அடி உயரத்திலிருந்து குதிக்க வேண்டும்’ என்று சவாலான கோரிக்கைகளை வைப்பேன்.

கார்த்திக் சாருடன் பணிபுரிந்தது நல்ல அனுபவம். அவருடன் ‘சின்ன ஜமீன்’ படத்துல வேலை செய்திருக்கிறேன்.  இந்தப் படத்துக்காக அவரைச் சந்தித்தபோது நிச்சயமாக அவர் இந்தப் படம் பண்ணமாட்டார் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் படப்பிடிப்பில் அவர் கொடுத்த உழைப்பு என்னை மிரள வைத்தது. ஒரு முறை கேரவனுக்குள் இருந்து மேக்கப்புடன் வெளியே வந்தால் மறுபடியும் மேக்கப் கலைக்கத்தான் கேரவனுக்குள் செல்வார். அந்தளவுக்கு தன்னுடைய போர்ஷன் முடிந்த பிறகும் முழு  இன்வால்வ்மென்ட்டுடன் நடித்தார். 

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி நிறைய சொல்ல வேண்டும். படத்துல வர்ற கேரக்டருக்கு ஏற்பதான் இதில் இசையமைத்திருக்கிறார். ‘கங்கா மாரி’ என்ற குத்துப் பாடலுக்கும் இசையமைத்திருக்கிறார். ‘தொடு வானம்’ என்ற மெலடி பாடலுக்கும் இசையமைத்திருக்கிறார். ஹாரிஸ் எப்படி என்று என்னிடம் கேட்பவர்களிடம், அவர் தரைக்கு தரை, துரைக்கு துரை என்றுதான் சொல்வேன்.

மற்றபடி என்னுடைய படங்களில் தொடர்ந்து வேலை செய்யும் எடிட்டர் ஆண்டனி, வசனகர்த்தா சுபா இந்தப் படத்திலும் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு ‘வாகை சூடவா’ ஓம்பிரகாஷ்.

எனக்கு பக்கத்தில் எப்போதும் ஜால்ராக்களை வைத்துக் கொள்வதில்லை. அந்த வகையில் என்னுடைய டெக்னீஷியன்கள் அனைவரும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று வெளிப்படையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள். அதே சமயம் என்டர்டெயின்மென்ட்டை விரும்புபவர்கள். அந்த வகையில் இது முழுமையான பொழுதுபோக்குப் படமாக இருக்கும்’’ என்கிறார் கே.வி.ஆனந்த்.

எஸ்