பரபரப்பான ஜீப் விபத்து!



‘மைனா’, ‘சாட்டை’ படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ் தயாரிக்கும் படம் ‘மொசக்குட்டி’. புதுமுகம் வீரா இதன் நாயகன். மகிமா நாயகி.  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எம்.ஜீவன்.“இது ஆக்ஷன் கலந்த காதல் கதை. இதில் டைட்டில் ரோலில் நடிக்கிறேன்.

என் கேரக்டர் பேர் மொசக்கி என்ற மொசக்குட்டி. என்னுடைய கேரக்டர் ‘ரஃப் அண்ட் டஃப்’பாக இருந்தாலும் அன்பு, காதல் என ஜனரஞ்சகமும் கலந்திருக்கும். இந்தப் படத்துக்காக என்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்தேன்.

 டார்க் ஸ்கின் வேண்டும் என்பதற்காக இரண்டு மாதம் வெயிலில் காய்ந்தேன். இது மதுரை நேட்டி விட்டி கதை என்பதால் அங்கேயே  தங்கி கேரக்டருக்காக தயாரானேன். இந்தப் படத்துல என் கேரக்டரிடம் நிறைய மெனக்கெடல் தெரியும். அத்தனைக்கும் காரணம் இயக்குனர் ஜீவன்.

கயல் என்ற கேரக்டரில் மகிமா நடிக்கிறார். எங்கள் இருவருக்குமான ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்அவுட்ஆகியுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் ஆபாசம் இருக்காது. எங்கள் இருவருக்கு மிடையே நல்ல புரிதல் இருந்ததால் காதல் காட்சிகளை ஒரே டேக்கில் ஓ.கே. பண்ண முடிந்தது. சீனியர் ஆர்ட்டிஸ்ட் பசுபதியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். அவரிடம் சினிமாவைப் பற்றிய நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. சென்றாயனுக்கு இதில் மிகப் பெரிய கேரக்டர். படம் முழுக்க வர்றார்.

கேமராமேன் சுகுமார் ஒர்க் பற்றி எல்லாருக்கும் தெரியும். ‘மைனா’ படத்துல பஸ் ஆக்சிடென்ட் காட்சி எப்படி பரபரப்பாகப் பேசப்பட்டதோ அதே மாதிரி இதில் ஜீப் ஆக்சிடென்ட் காட்சி பரபரப்பாகப் பேசப்படும்.  ரமேஷ் விநாயகம் இசையில் ‘கள்ளப் பயலே’ என்ற பாடல் ஹைலைட்டாக இருக்கும்.  இயக்குனர் ஜீவனைப் பற்றி சொல்வதாக இருந்தால் அவர் ஒரு பிடிவாதக்காரர். அதிகமாக பெர்ஃபக்ஷன் எதிர்பார்ப்பார். அவர் அப்படி எதிர்பார்த்ததால்தான் படம் பிரமாதமாக வந்துள்ளது’’ என்கிறார் வீரா.

சுரேஷ்ராஜா