கவிதைக்குக் கிடைத்த பாடல் வாய்ப்பு!



பொதுவுடைமைக் கட்சியில் பொறுப்பிலிருந்த அப்பா த.கா.பரமசிவம் வழிகாட்டுதலில் சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கம் வாய்க்கப்பெற்றார் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரேம்குமார். ஈழப்போராட்டம் குறித்து 13 வயதில் இவர் எழுதிய கவிதை 'தமிழர் கண்ணோட்டம்' பத்திரிகையில் வெளியாகி, அக்கம் பக்கத்தினருக்கு அடையாளம் காட்டியது. அம்மா வசந்த குமாரியின் பாராட்டு, பிரேம்குமாரை நிறைய கவிதைகள் எழுத வைத்தது. அவர்தான் 'யுகபாரதி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

அப்பாவின் நண்பர் தமிழ்ப்பேராசிரியர் செல்வகணேசன் வழிகாட்டுதலில் மரபுக்கவிதை இவருக்கு கைவந்தது. அறந்தாங்கியில் பட்டய பொறியாளர் படிப்பு முடித்ததும் சென்னைக்கு வந்தார். வித்யாஷங்கர் என்கிற துரை ஆசிரியராக இருந்த 'ராஜரிஷி' பத்திரிகையில் பணி கிடைத்தது. அப்புறம் சிலகாலம் 'கணையாழி'யில் பணியாற்றினார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'மனப்பத்தாயம்', இயக்குனர் என்.லிங்குசாமியின் பார்வையிலும் மனதிலும் பட்டது. 'ஆனந்தம்' படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், ஹரிணி, உன்னிகிருஷ்ணன் குரல்களில் 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்...' பாடல் பெருவெற்றி பெற்றது. தினா இசையில் 'திருடா திருடி' படத்தில் எழுதிய 'மன்மத ராசா...' பாடல் அடைந்த வீச்சு இவரை உச்சத்தில் உட்கார வைத்தது.

புதிதாக பாட்டெழுத வருகிறவர்கள், சரியாக எழுதுவதில்லை என்ற கருத்துடைய இசையமைப்பாளர் வித்யாசாகர், இவரையும் அதே தராசில் நிறுத்தப் பார்த்தார். 'ரன்' படத்தில் யுகபாரதி எழுதிய 'காதல் பிசாசே...' பாடலுக்கு இசையமைத்தபோது, அந்தத் தராசைத் தூக்கி தூரத்தில் எறிந்துவிட்டார். பின்னாளில் 'சந்தப்பாடல் எழுதுவதில் யுகபாரதிக்கு நிகர் இங்கே யாருமில்லை' என்று அவரே பாராட்டும் அளவுக்கு தனது கவிதைகளை கவனமாக கட்டமைத்துக்கொண்டார் யுகபாரதி.

எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இசையமைப்பாளர்களுக்கு இவரை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை என்.லிங்குசாமிக்கு உண்டு.
இவரது 'மனப்பத்தாயம்', 'பஞ்சாரம்' ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும் தமிழக அரசின் விருது பெற்றவை. 'தெப்பக்கட்டை' நூலுக்கு மாநில வங்கி யின் விருது கிடைத்திருக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் 'ஐந்தமிழ்' விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது ஆகியவை இவரது தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கின்றன.

'கும்கி' படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு யுகபாரதிக்குக் கிடைத்தது. இமான் இசையில் அதிதி பால், கார்த்திக் பாடிய 'அய்யய்யய்யோ ஆனந்தமே...', அல்போன்ஸ் ஜோசப் பாடிய 'நீ எப்போ புள்ள சொல்லப் போற...’, இமான் குரலில் 'ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல...’, மகிழினி மணிமாறன் பாடிய 'சொய் சொய்...', ஸ்ரேயா கோஷல் பாடிய 'சொல்லிட்டாளே அவ காதல...' என அத்தனை பாடல்களும் அமோக வரவேற்பைப் பெற்றன.

'மைனா' படப் பாடல்களாலும் மனதைக் கவர்ந்தார் யுகபாரதி. 'பார்த்திபன் கனவு' படத்தில் மது பாலகிருஷ்ணன் குரலில் 'கனா கண்டேனடி தோழி...' பாட்டு ரசிகர் களை வசீகரித்தது. சிற்பி இசை யில், உன்னி மேனன் குரலில், 'உன்னை நினைத்து' படத்தின் 'யார் இந்த தேவதை...' பாடல் காதுகளுக்கு கவுரவம் சேர்த்தது.

 ரஜினியின் 'சந்திரமுகி' படத்தில் வித்யாசாகர் இசையில் இவர் எழுதிய 'கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்...' பாடல் கே.ஜே. ஜேசுதாஸ், ஆஷா போன்ஸ்லே குரல்களில் ரசிகர்களால் கொஞ்சிக் கொண்டாடப்பட்டது. இளையராஜா இசையில் 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் எழுதிய 'பூவக் கேளு' பாடல் இதயத்தை வருடியது. கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு அந்தாதியை திரைக்குக் கொண்டுவந்த கவிஞர் என்ற பெருமை யுகபாரதிக்குக் கிடைத்திருக்கிறது.

'பிரிவோம் சந்திப்போம்' படத்தில் கார்த்திக், ஸ்வேதா மேனன் பாடிய 'கண்டேன் கண்டேன்...', 'ஜெயராம், ஸ்ரேயா கோஷல் பாடிய 'நெஞ்சத்திலே நெஞ்சத்திலே...', சாதனா சர்கம் குரலில் 'கண்டும் காணாமல்...', சைந்தவி, வினீத் ஸ்ரீனிவாசன் பாடிய 'இருவிழியோ சிறகடிக்கும்...' என வித்யாசாகர் இசையில் அத்தனை பாடல்களிலும் புதுவடிவம் பதித்திருக்கிறார் யுகபாரதி. 'வந்தான் வென்றான்' படத்தில் இவர் எழுதி தமன் இசையில் ஆலப் ராஜு பாடிய 'அஞ்சனா அஞ்சனா...' பாடல், அந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. இமான் இசையில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் எழுதிய 'இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்...'

ஜெயமூர்த்தி குரலிலும், 'ஊதா கலரு ரிப்பன்...' ஹரிகரசுதன் குரலிலும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்...' சிவகார்த்திகேயன், அந்தோணிதாசன், கோவில்பட்டி அமலி குரல்களிலும், 'பாக்காதே பாக்காதே...' விஜய் ஜேசுதாஸ்- பூஜா குரல்களிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. என்.ஆர். ரகுநந்தன் இசையில் 'மஞ்ச பை' படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய 'ஆகாச நிலவு தான்...' இசைத் தாலாட்டாக இனித்த பாடல்.

'குக்கூ' படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், பிரதீப் குமார், கல்யாணி நாயர் பாடிய 'ஆகாசத்த நான் பாக்கறேன்...' காற்றில் தவழ்ந்து, காதுகளை வருடிய மெல்லிசை.  விஜய்யின் 'ஜில்லா' படத்தில் இமான் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணி யம்-சங்கர் மகாதேவன் பாடிய 'பாட்டு ஒண்ணு கட்டு கட்டு தோழா...', 'கயல்' படத்தில் ஸ்ரேயா கோஷல், ரஞ்சித் பாடிய 'உன்ன இப்போ பாக்கணும்...', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் லட்சுமி மேனன் குரலில் ஒலித்த 'குக்குரு குக்குரு குர்ரா...',

'ரம்மி'யில் வி.வி.பிரசன்னா- வந்தனா ஸ்ரீனிவாசன் பாடிய 'கூட மேல கூட வச்சு...', 'குருவி'யில் உதித் நாராயணன்-ஸ்ரேயா கோஷல் பாடிய 'தேன் தேன் தேன்...' என யுகபாரதியின் பாட்டுச் சாலைப் பயணம்  பாதுகாப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஏழு கவிதைத் தொகுப்புகளை யும், ஒன்பது கட்டுரைத் தொகுப்பு களையும் வெளியிட்டிருக்கும் யுகபாரதி, 'கவிதை என்பது செயலாற்றுதல்; பாடல் என்பது பணியாற்றுதல்' என்று சொல்கிறார்.

அடுத்த இதழில்...
இசையமைப்பாளர் தேவா

நெல்லைபாரதி