மயிலாடும்பாறையில் மன்சூர் சுமந்த உப் புமூட்டை!



அதிரடிப் படங்களை எடுத்து அவ்வப்போது புயலைக் கிளப்புகிறவர் மன்சூரலிகான். இப்போது 'அதி ரடி' என்ற தலைப்பிலேயே ஒரு படத்தைத் தயாரித்து, நடித்துக் கொண்டிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அத்தனை அவதாரமும் அவர்தான். இயக்குகிற பொறுப்பை மட்டும் பாலு ஆனந்திடம் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றாலும், "ஜனநாயகத்துல இதெல்லாம் சகஜமப்பா"ன்னு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஷூட்டிங் கிளம்பிவிட்டார்.

"பொள்ளாச்சி பக்கம் ஷூட்டிங் வச்சிருக்கேன். வாங்க, ஜமாய்ச்சிடலாம்" என்று அவர் பாணியில் அழைத்தார். போகலைன்னா "என்னை மாதிரி சின்ன ஆர்ட்டிஸ்டுங்களையெல்லாம் பத்திரிகைக்காரங்க திரும்பிப் பார்க்க மாட்டேங்குறாங்க. நாங்களும் பணம் போட்டுத்தானே படம் புடிக்கிறோம்"னு அடுத்த மீட்டிங்குல பேசிடுவார். அடுத்த நாளே பொள்ளாச்சியில் இறங்கினோம். வயலும், மலையும் கொஞ்சி விளையாடும் மயிலாடும்பாறையில் ஷூட்டிங்.

நாம் போய் சேர்ந்தபோது ஹீரோயின் புவிஷாவை உப்பு மூட்டை தூக்கி விளையாடிக் கொண்டிருந்தார் மன்சூர். உப்புமூட்டை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் இயக்குனர் பாலுஆனந்த். நம்மைப் பார்த்ததும் ஹீரோயினை இறக்கி விட்டுவிட்டு, "அங்கே போயி உட்கார்ந்து சாப்புடுமா. சாரு சென்னையிலேருந்து வந்திருக்காரு. பார்த்து பேசிட்டு வந்துடுறேன்" என்றார். குறுக்கிட்ட இயக்குனர் "இந்த ஒரு ஷாட்டை முடிச்சிருவோம்" என்றார். "என்ன டைரக்டர் சார் பத்திரிகைக்காரர் வந்திருக்கிற நேரத்துல இந்த சீனை எடுக்குறீங்க. எதையாச்சும் எழுதிடப்போறாரு" என்றவர், "சரி..சரி.. சீக்கிரம் முடிங்க" என்றார்.

மீண்டும் ஹீரோயின் உப்புமூட்டை ஏற, பின்னால் நின்று வேடிக்கை பார்த்த கூட்டம் கொல்லென்று சிரித்தது. அவ்வளவுதான். அதற்கு மேல் உப்புமூட்டை ஏற தயக்கம் காட்டினார் புவிஷா. "சரி சரி டைரக்டர் சார்! அந்த ரெண்டாவது ஷாட்டை ஓகே பண்ணிடுங்க. பாப்பா பயப்படுது" என்றார். அடுத்து வயல் வரப்பில் இருவரும் ஓடிவருகிற சீன். "ஏதோ பார்க்க லட்சணமா இருக்க...மூக்கும் முழியுமா பட்சணமா இருக்க.." என பாடல் ஓட.. புவிஷா ஓட.. மன்சூர் ஓட... கேமரா ஓட... திடீரென ஹைஹீல்ஸ் தடுக்க.. புவிஷா விழ... அவரைத் தாங்கிப் பிடிக்கப் பாய்ந்த மன்சூர் விழ... சகதிக் கபடி நடந்தது. உழவு முடித்து விட்டு வந்த விவசாயி மாதிரி சேறு சகதியோடு வந்தார் மன்சூர்.

"பாத்தீங்களா, விவசாயி உடம்புலகூட இத்தன சேறு பார்க்க முடியாது. நாங்க எப்படி உழைக்கிறோம். ஆனா இந்த திருட்டு விசிடி திருடனுங்க எங்க உழைப்பை திருடி பிழைக்குறானுங்க. இவனுங்களையெல்லாம் நிக்க வச்சு உதைக்கணும். அட பாருங்க எதையோ பேசுறேன். நம்ம படத்தைப் பற்றி பேசுவோம். என்னோட சொந்தப் படம். நிறைய வேலை பார்க்குறேன். இதுல புதுசா பாட்டும் பாடியிருக்கேன். மவ்மிதா சட்டர்ஜி, புவிஷா, ஷகானான்னு மூணு ஹீரோயினுங்க. சில நல்ல விஷயங்களை சொல்றேன். மீதி விபரத்தை டைரக்டர்கிட்ட கேளுங்க. எனக்கு வயல்வேலை பாக்கி இருக்கு" என்று வந்த வேகத்தில் கிளம்பிப் போனார்.

"எதிர்காலம் இளைஞர்கள் கையில். அவர்களை நல்லவர்களாக உருவாக்க வேண்டியது நம் கடமை. இதுதான் படத்தோட நாட். மன்சூர் நம் பாரம்பரியக் கலைகள், மொழி இவற்றை குழந்தைகளுக்கும், மதுவின் தீமையைப் பெரியங்களுக்கும் கற்றுக் கொடுக்கிற மாஸ்டர். ஒரு கும்பல் அவரிடம் வந்து உங்க கருத்தையெல்லாம் மக்கள்கிட்ட கொண்டு சேர்க்குற மாதிரி ஒரு சினிமா எடுக்கலாமுன்னு ஆசை காட்டுது.

இருக்கிற சொத்தையெல்லாம் வித்து படம் எடுக்கிறார், நடிக்கிறார். படத்துல வர்ற மன்சூரும், ஹீரோயினும் ஆடுற டூயட்டைத்தான் இப்போ எடுக்கிறோம். படம் எடுத்து முடிச்சாரா மக்கள்கிட்ட அவர் கருத்து போய் சேர்ந்துச்சாங்கறது க்ளைமாக்ஸ். எப்படி கதை அதிரடியா இருக்குல்ல..." என்றார் இயக்குனர் பாலு ஆனந்த்.

-மீரான்