ரயில் பயணத்தில் திகில்!



மக்கள் பாசறை சார்பில் தயாராகும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. ஆர்.கே. நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். இருவரையும் மூன்றாவது முறையாக இணைத்திருக்கிறார் வசனகர்த்தா வி.பிரபாகர். ஹாட்ரிக் அடித்த சந்தோஷத்தில் படம் குறித்து பேசுகிறார் வசனகர்த்தா.‘‘இது ஹிட்ச்காக் படம் போல் ஒரு மர்மக் கதை. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசிக் காட்சிவரை திரைக்கதை ஒருவித டென்ஷன் ஃபீலில் இருக்கும். பொதுவாக இந்த மாதிரி விறுவிறுப்பான கதைகளில் காமெடியைக் கலப்பது கஷ்டம்.

ஆனால் இதில் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், டி.பி.கஜேந்திரன், சிங்கமுத்து, ரமேஷ் கண்ணா, காமெடி டைம் அர்ச்சனா ஆகியோர் காமெடிக்கான பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். நாசர் கேரக்டரும் காமெடியாக இருக்கும். ஆர்.கே.ஜோடியாக நீதுசந்திரா நடித்திருக்கிறார். இவர்களோடு சுமன், ஜான் விஜய், அனுப் சந்திரன், சித்திக் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்கள்.

வழக்கமாக த்ரில் படங்களில் டயலாக் கம்மியாக இருக்கும். ஆனால், இது டயலாக் ஓரியன்டட் படம். தமன் இசை அதிரடியாக இருக்கும். இது ரயில் பயணத்தில் நடக்கிற கதை என்பதால் மிகப் பெரிய ரயில் செட் போட்டு படமாக்கியுள்ளோம். ‘திருமலை தென்குமரி’ என்றதும் பஸ் ஞாபகத்துக்கு வருவது போல், ‘பையா’ படம் என்றதும் ரோடு டிராவல் ஞாபகத்துக்கு வருவது போல், ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்றதும் ரயில் ஞாபகத்துக்கு வரும்!” என்கிறார் வி.பிரபாகர்.

-எஸ்.ஆர்