கொக்கு வேட்டை த்ரில்லர்!



“உறுமீனுக்கும் கொக்குக்குமான வேட்டை சுவாரஸ்யமானது. அதைப்பற்றி ஔவை ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ என்று பாடியிருக்கிறார். தான் வேட்டையாடப்படுவது தெரியாமலேயே உறுமீன் கொக்கிடம் ஏமாறும்.

 அந்த சீக்குவன்ஸ்தான் டில்லிபாபு தயாரிக்கும் ‘உறுமீன்’ படத்தோட கதை” - கேஷுவலாகப் பேசுகிறார் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி.‘‘இது ஃபேன்டஸி த்ரில்லர் படம். இந்த மாதிரி கதைகளில் பாபி சிம்ஹா ஏற்கெனவே நடித்திருந்தாலும் அதில் வில்லனாகவோ அல்லது ஏதாவது ஒரு கேரக்டரிலோ நடித்திருப்பார்.

ஆனால் இதில் அவர்தான் எல்லாம். ஒரு முழு கமர்சியல் ஹீரோவுக்கான அறிமுகம் இந்தப் படத்தில் இருக்கும். அதுக்காக ஓப்பனிங் சாங், க்ளைமாக்ஸ் ஃபைட் என்று மசாலாவாக இல்லாமல் இயல்பாக இருக்கும். நாயகியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார். சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறவராக வருகிறார். ஹீரோ அளவுக்கு இல்லையென்றாலும் இவருடைய ரோலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஏன்னா, ஹீரோவுக்கும், வில்லனுக்கும் சண்டை பிறக்க காரணமே ஹீரோயின்தான்.

வில்லனாக ‘மெட்ராஸ்’ கலையரசன் நடித்திருக்கிறார். இவர்களோடு மனோபாலா, சார்லி, காளி, அப்புக்குட்டி என நிறைய பேர் இருக்கிறார்கள். தெலுங்கில் சுமார் இரண்டு டஜன் படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு தமிழில் கால் பதிக்கிறார். நேஷனல் அவார்ட் வின்னர் பாபு சிம்ஹா கேரியரில் இது மற்றும் ஒரு மகுடமாக இருக்கும்” - தன் ஹீரோவை புகழ்ந்து தள்ளுகிறார் சக்திவேல் பெருமாள்சாமி.

-ரா