தன்னம்பிக்கை வளர்க்கும் பாவலர் விஜய்



பாட்டுச்சாலை  51

கும்பகோணம் அருகிலுள்ள உட்கோட்டை கிராமம்தான் பா.விஜய்க்கு சொந்த ஊர். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில். புதுக்கவிதைக்கு முகவரி தந்த 'வானம்பாடி' ஊர் என்பதால் இவருக்குள்ளும் பத்தாவது படிக்கும்போதே கவிதைப்பழக்கம் வந்துவிட்டது.

 தினமும் ஒரு புது காதணி அணிந்து வரும் சக மாணவியைப் பார்த்து 'காதணியை மாற்றும் காதையின் கதைதான்...' என்று முதன்முதலில் இவர் எழுதிய கவிதை, சகாக்களால் நேரடியாகவும், ஆசிரியர்களால் மறைமுகமாகவும் பாராட்டுப் பெற்றது.

அதன்பிறகு கவிதைகளின் எண்ணிக்கை கூடியது. புலவர் பாலசுப்ரமணியன் மற்றும் பெரும்புலவர் அறிந்தார்க்கினியனார் ஆகியோரிடம் தமிழ் இலக்கணம் பயின்று, தகுதியை வளர்த்தார் பா.விஜய். அப்பா பாலகிருஷ்ணனும் அம்மா சரஸ்வதியும்தான் இவர் எழுதும் கவிதைகளுக்கு முதல் வாசகர்களாக இருந்து, வாழ்த்தி வளர்த்திருக்கிறார்கள். 'இலக்கிய பாசறை' அமைப்பில் இணைந்து, பல கவியரங்குகளில் கவனத்தை ஈர்த்தார்.

படிப்பைவிட கவிதையில் அதிக கவனம் வந்துவிட்டதால், அதையே முழுநேரத் தொழில் ஆக்குவதே சாலச்சிறந்தது என்று சகாக்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்பாவின் நண்பர் மருதாசலத்தின் உதவியுடன் தன்ராஜை சந்தித்திருக்கிறார்கள்.

அவர், கே.பாக்யராஜின் சகோதரர். கோபிசெட்டிபாளையத்தில் நடந்த 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' படப்பிடிப்பில் பாக்யராஜை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார் தன்ராஜ். அப்பாவின் ஆலோசனைப்படி, பழைய பாடல்களின் மெட்டுக்கு புதிய வரிகளை எழுதிக்கொண்டு போயிருந்தார் விஜய். இவரது அணுகுமுறை பாக்யராஜ்க்கு பிடித்துவிட்டது.

வாய்ப்பு தருகிறேன் என்று வாக்குக் கொடுத்தார். 'ஞானப்பழம்' படத்தில் 'உன்னைப்போல ஒருத்தி...' என்ற பாடல் மூலம் இவரைப் பாடலாசிரியராகப் பதிவுசெய்தார் பாக்யராஜ். ஒலித்தட்டுவரைக்கும் இடம்பிடித்த அந்தப் பாடல், திரைப்படத்தில் இடம்பெறவில்லை. பாக்யராஜின் அடுத்தடுத்த படங்களில் பாடல் எழுதிக்கொண்டே, 'பாக்யா' இதழில் 'உடைந்த நிலாக்கள்' என்ற தொடரை எழுதினார். பெரும் வரவேற்பைப்பெற்ற அந்தத்தொடர், தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு இவரை அடையாளம் காட்டும் முகவரிச்சீட்டாக அமைந்தது.

ஒளிப்பதிவாளர் அண்ணாதுரை இவரை இயக்குனர் விக்ரமனிடம் அறிமுகப்படுத்தினார். 'வானத்தைப்போல' படத்தில் 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...', 'காதல் வெண்ணிலா...', 'நதியே நைல் நதியே...' என மூன்று பாடல் களை எழுதும் வாய்ப்பைப் பெற்றார் விஜய். 'காதல் வெண்ணிலா...' பாடலுக்காக 50 சரணங்கள் எழுதியிருக்கிறார்.  'எளிமையும் கவிதையும் இணையும் பாடல்களை எப்படி உருவாக்குவது என்பதை விக்ரமனிடம் கற்றுக்கொண்டேன்' என்கிறார் கவிஞர்.

அடுத்து விக்ரமனின் 'பிரியமான தோழி' படத்தில் 'மான் குட்டியே...', 'பெண்ணே நீயும் பெண்ணா...' உள்பட அனைத்துப் பாடல்களையும் எழுதினார். ராஜகுமாரன் இயக்கிய 'நீ வருவாயென' படத்தில் எழுதிய 'பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன்...' காதலர்களின் கச்சேரியாக களைகட்டியது.சேரன் இயக்கிய 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் இவர் எழுதிய 'கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு...' பாடல் காது உள்ள இடங்களை எல்லாம் களவாடிச்சென்றது.

எழுதிய பாடல்களில் மிகவும் பிடித்தது என்று 'தெனாலி' படத்தின் 'சுவாசமே...' பாடலைக் குறிப்பிடுகிறார் கவிஞர். அறிவியல்- நிலவியல் சிந்தனைகளால் சிருஷ்டிக்கப்பட்ட பாடல் அது. விக்ரமன் இயக்கிய 'உன்னை நினைத்து' படத்தின் 'என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா...' பாடல்தான் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு இவர் எழுதியது.

'சார்லி சாப்ளின்' படத்தில் ‘முதலாம் சந்திப்பில்’, ‘ரன்’ படத்தில் ‘இச்சுத்தா இச்சுத்தா’, ‘பாய்ஸ்’ படத்தில் ‘எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா’, ‘போக்கிரி’ படத்தில் ‘டோலு டோலுதான்’, ‘நீ முத்தம் ஒன்று கொடுத்தால்’, ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’, ‘சிவாஜி’யில் ‘ஒருகூடை சன்லைட்’, ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் ‘மதுரைக்குப் போகாதடி’, ‘குருவி’ படத்தில் ‘பலானது’,

‘மொழ மொழன்னு’, ‘ஆதவன்’ படத்தில் ‘ஹசிலி பிசிலி’, ‘எந்திரன்’ படத்தில் ‘கிளிமாஞ்சாரோ’, ‘ஏழாம் அறிவு’ படத்தில் ‘ரிங்கா ரிங்கா’ மற்றும் ‘இன்னும் என்ன தோழா’, ‘நண்பன்’ படத்தில் ‘இருக்கானா இல்லையானா’, ‘மாற்றான்’ படத்தில் ‘தீயே தீயே’, ‘துப்பாக்கி'யில் ‘அலைக்கா’ லைக்கா, என பா.விஜய்யின் வெற்றிப்பாடல்களின் வரிசை விரிந்து கொண்டே இருக்கிறது.

2004ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது, இவர் எழுதிய 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடலுக்காகக் கிடைத் தது. சேரன் இயக்கிய 'ஆட்டோகிராப்' படத்தில் சித்ரா பாடிய அந்தப்பாடல் தமிழர் வாழும் பூமியெங்கும் தலை யில் வைத்துக் கொண்டாடப்பட்டது. தற்கொலைக்கு முயற்சிசெய்யும்போது, அசரீரியாக ஒலித்த 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடலைக் கேட்க நேர்ந்ததால், பலபேர் மனம் மாறி, புதிய வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

கோவை ஆல்பா மெட்ரிகுலேசன் பள்ளியிலும், ஜி.எம்.பஞ்சாலையிலும் 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடல், கடவுள் வாழ்த்துப் பாடல் போல தினந்தோறும் இசைக்கப்படுகிறது. சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடமாக இடம்பெற்றிருப்பதும் பாட்டுக்குக் கிடைத்த பெருமைகள்.

வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்' படத்தில் அனைத்துப்பாடல்களையும் வாலி எழுதுவதாக இருந்தது. இரண்டு பாடல்கள் எழுதிய நிலையில், அவரை மரணம் அணைத்துக் கொண்டதால், அவரைப்போல எழுதத் தகுதியானவர் இவர்தான் என்று வசந்தபாலனும் ஏ.ஆர்.ரஹ்மானும் முடிவுசெய்து, ஐந்து பாடல்களை எழுத வைத்தனர்.இளையராஜா இசையில்' மாயக்கண்னாடி' படத்துக்கு பாட்டெழுதியிருக்கிறார் விஜய். தனது இசையில் புராணம் கலந்த 'ருத்ரமாதேவி' படத்துக்கு வசனம் எழுதுவதற்கு பா.விஜய்யைப் பரிந்துரைத்திருக்கிறார் இளையராஜா.

இவர் எழுதிய 12 நூல்களை வெளியிடும் விழாவில், 'வித்தகக் கவிஞர்' என்று பட்டம் வழங்கிப் பாராட்டியிருக்கிறார் கலைஞர். 'எனது பாட்டுலக வாரிசு பா.விஜய்' என்று தமிழ்ச்சபைக்கு தகவல் சொன்னார் காப்பியக்கவிஞர் வாலி. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த சந்திப்பில், இவரிடம் 'ஒவ்வொரு பூக்க ளுமே...' பாடலைப் பாடச் சொல்லி, பரவசப்பட்டுப் பாராட்டியிருக்கிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

 தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் 'கண்ணதாசன் விருது'கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அறியப்பட்ட விருதுகள், இவரது எழுத்துப்பணிக்கு கவுரவம் சேர்த்திருக்கின்றன. 'நீங்கள் எங்களைத்தொட்டால் அது ஆசீர்வாதம்/ நாங்கள் உங்களைத்தொட்டால் அது அபச்சாரமா?' என்கிற இவரது கவிதையைப் படித்துவிட்டு, 'நான் இரண்டரை மணி நேரத்தில் சொன்ன 'இது நம்ம ஆளு' கதையை இரண்டே வரியில் சொல்லிவிட்டாயே' என்று பாராட்டியிருக்கிறார் பாக்யராஜ். 'தோல்வி கண்டு தயங்கவேண்டாம்.

தொடர்ந்து நடிக்க முயற்சி செய்யுங்கள். கவிஞன் தோற்றுவிடக்கூடாது' என்று இவருக்கு நம்பிக்கை டானிக் ஊற்றியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. ‘மீட்டருக்குள் மேட்டரைத்தரும் கவிஞன்’ என புகழ்மாலை சூட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

பாட்டுத்துறையில் ஓடிக்கொண்டே இருந்தாலும், இலக்கியத்தின் பக்கம் சாய்ந்து இளைப்பாறுவது பா.விஜய்க்கு பிடித்தமான ஒன்று. பிளஸ் டூ படிக்கும்போது அப்பாவின் சொந்த செலவில் பதிப்பித்த 'இந்த சிப்பிக்குள்' தொடங்கி, 50ஆவது புத்தகமாக 'புலிகளின் புதல்வர்கள்' வெளிவந்திருக்கிறது. கல்லூரிக்குப்போய் படிக்க இயலவில்லையே என்று கவலைப்படும் இவரது கவிதைகளை ஆய்வுசெய்து இதுவரை 300 பேர் எம்.ஃபில் பட்டமும், 20 பேர் டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இது தமிழாய்ந்த பா.விஜய்யின் சொல்லறிவுக்குக் கிடைத்த வெற்றி.

‘ஞாபகங்கள்’ மற்றும் கலைஞரின் எழுத்தோவியத்தில் உருவான 'இளைஞன்' படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார் விஜய். வணிக ரீதியாக அந்தப்படங்கள் வெற்றிபெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் இவர், அடுத்து நிச்சய வெற்றி என்கிற நோக்கில் இயக்குனராக களமிறங்கி, நாயகனாக நடிக்க உள்ளார்.

அடுத்த இதழில்...
பின்னணிப்பாடகர் மலேசியா வாசுதேவன்

நெல்லைபாரதி