‘லவ்’வண்யா!



டோலிவுட் கோங்குரா

சடசடவென்று அதிவிரைவில் ஒரு நடிகை நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருவது தெலுங்கில் மட்டுமே சாத்தியம். அழகில் ராட்சஸி (‘அந்தால ராக்சஷி’) என்கிற பொருள்படும் டைட்டில் ரோலில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா அறிமுகமானபோதே பரவலாக கவனிக்கப்பட்டார்.

ஆனாலும் அம்மணிக்கு தமிழ் மீதுதான் மோகம். சசிகுமாருக்கு ஜோடியாக ‘பிரம்மன்’ படம் வாயிலாக தமிழுக்கு வந்தார். ‘நானும் ரவுடிதான்’ படத்திலும் நயன்தாரா நடித்த வேடத்துக்கு முன்பு இவர்தான் பேசப்பட்டார்.

எனினும் தமிழ் அவ்வளவாக வேலைக்கு ஆகாததால் மீண்டும் தெலுங்கிலேயே கவனம் செலுத்தினார். நானிக்கு ஜோடியாக கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த ‘பலே பலே மகாதிவோ’ சூப்பர்ஹிட். நாகார்ஜுனா குடும்பத்தினரின் கவுரவத்துக்குரிய தயாரிப்பான ‘மனம்’ படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றியதற்கு பரிசாக ‘சொக்கடே சின்னி நாயனா’ வாய்ப்பு கிடைத்தது.

கடந்த பொங்கலுக்கு வெளியான இப்படம் லாவண்யாவை டோலிவுட்டின் ‘லவ்’வண்யா ஆக்கியிருக்கிறது. நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக வேண்டிய அளவுக்கு கவர்ச்சியும், குடும்பப் பாங்கான நடிப்பையும் வெளிப்படுத்தியவர் அங்கே கோலோச்சிக் கொண்டிருக்கும் பஞ்சாபி லஸ்ஸி ரகுல் ப்ரீத் சிங்குக்கு கடும் போட்டியாளராக உருவெடுத்திருக்கிறார்.