‘முத்தின கத்திரிக்கா'



அம்மாவை காதலித்தவர் மகளை கைப்பிடிக்கும் கதை!

எத்தனை காலமாயிற்று இப்படி வயிறு வலிக்க சிரித்து? சந்தேகமேயில்லை. உங்கள் அத்தனை கவலைகளுக்கும், மனச்சோர்வுக்கும் சர்வரோக நிவாரணி, ‘முத்தின கத்திரிக்கா’தான். நீங்கள் நரசிம்மராவாக தியேட்டருக்குள் நுழைந்தால், மதன்பாபுவாகத்தான் வெளியே வருவீர்கள் என்பதற்கு டபுள் கேரன்டி கொடுக்கிறோம்.

 லாஜிக், லொட்டு லொசுக்கையெல்லாம் தூக்கி குப்பையில் கடாசுங்கள். தீவிர விமர்சகர்கள் ஏதேதோ எழுதுவார்கள். புறந்தள்ளுங்கள். சுந்தர்.சி கும்பல் இம்முறையும் கொடுத்திருப்பது அக்மார்க் ஐ.எஸ்.ஓ. 9001 சான்றிதழ் பெற்ற பக்கா சிரிப்பு மேஜிக். ரெண்டேகால் மணி நேரம் இடைவிடாமல் சிரிக்க விரும்புபவர்கள் மட்டுமே தியேட்டருக்கு வாருங்கள்.

சுந்தர்.சி-யின் அப்பா, தாத்தா இருவருமே அரசியல் கட்சிகளில் தொண்டர்களாக இருந்து வாழ்க்கையைக் கரைத்தவர்கள். இவருக்கும் ஓர் எகனைமொகனையான சந்தர்ப்பத்தில் கரைவேட்டி கை கொடுக்கிறது. ஆனால், முன்னோர்களைப் போல இல்லாமல் அரசியலில் நாலு காசு பார்க்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவராக இருக்கிறார். பிரதான கட்சிகளில் இவருக்கு பதவி கிடைக்காது என்பதால், ஊர் பேர் தெரியாத ஒரு தேசியக் கட்சியில் இணைந்து மாவட்டச் செயலாளராக தொண்டர் பலம் இன்றியே பந்தாவாக வலம் வருகிறார்.

அரசியல், மக்கள் சேவை என்று காலம் கரைந்து கொண்டே போகிறது. தம்பி, தங்கைக்கெல்லாம் திருமணம் செய்துவிட்டாலும் இவர் மட்டுமே ‘முத்தின கத்திரிக்கா’வாக பேச்சுலர் லைஃபையே நீடித்துக் கோண்டு போகிறார். இவருக்கு ஒரு கல்யாணம், காட்சி செய்துவைக்க வேண்டும் என்பது அவரது அம்மா சுமித்ராவின் ஆசை.

“நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது பொண்ணு கிடைக்காம இல்லை; பிடிச்ச பொண்ணு கிடைக்கணுங்கிறதுக்குத்தான்” என்று பந்தாவாக சொன்னாலும், நாற்பதைக் கடந்தவருக்கு பொண்ணு கிடைப்பது ஏகத்துக்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட பெண்ணைத்தான் கட்டுவேன் என்கிற கொள்கையில் வேறு உறுதியாக இருக்கிறார்.

அவரது நிபந்தனைகளுக்கு ஏற்ப இருபத்து நான்கு வயது இளமை பூங்கொத்தாக பூனம் பாஜ்வா கிடைக்கிறார். பெண் கேட்டுச் செல்லும்போதுதான் ட்விஸ்ட். பள்ளிப் பருவத்தில் தன்னைக் காதலித்த கிரணின் மகள்தான் பாஜ்வா. கிரணின் கணவரான ரவிமரியாவுக்கும், சுந்தர்.சிக்கும் சமவயதுதான். இருவருக்கும் சிறுவயதில் கிரண்ட் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ரவிமரியாவை செம மொத்து மொத்தியவர் சுந்தர்.சி. பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டிருக்கும் ரவிமரியா, சுந்தர்.சியை அவமானப்படுத்துகிறார். “கவுன்சிலரா ஆவறதுக்குக் கூட துப்பில்லாத உனக்கு கல்யாணம் கேட்குதா?” என்று சூடாகக் கேட்கிறார்.

ரவிமரியாவின் சவாலை ஏற்கிறார் சுந்தர்.சி. உள்ளூர் அரசியல் முதலைகளான விடிவி கணேஷ், சிங்கம்புலி வகையறாக்களின் காமெடி எதிர்ப்புகளை சமாளித்து அரசியலில் வளர்ந்து, பூனம் பாஜ்வாவை எப்படி கைப்பிடிக்கிறார் என்பதே மீதிக் கதை.

சுந்தர்.சிக்கு என்றே அளவெடுத்து தைக்கப்பட்ட சட்டை மாதிரி இருக்கிறது முத்துப்பாண்டி கதாபாத்திரம். மனிதர், அலட்டலின்றி செய்திருக்கிறார். இவரைக் கண்டதுமே பழைய ஞாபகத்தில் வெட்கப்படும் கிரணின் ரியாக்‌ஷன்கள் அள்ளு அள்ளுவென்று அள்ளுகிறது. புசுபுசுவென்ற உடல்வாகில் புடவை, தாவணியில் அளவான கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா வரும் காட்சியில் எல்லாம் இளசுகளின் விசில் விண்ணை எட்டுகிறது.

சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி, ரவிமரியா, யோகிபாபு உள்ளிட்ட அத்தனை நடிக நடிகையருமே அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள். சித்தார்த் விபினின் இசை காமெடியின் வீரியத்தைக் கூட்டுகிறது. பாட்டுகளும் பிரமாதம். பானுமுருகனின் ஒளிப்பதிவும் அபாரம். எழுதி, இயக்கியிருக்கும் வேங்கடராகவன் படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொன்னால் மிகையில்லை.முத்தின கத்திரிக்காயா இருந்தாலும் டேஸ்ட் செம.