தமிழ் சினிமாவுக்கு புது அப்பா ரெடி



‘ஒரு நாள் கூத்து’ படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவரான நிவேதா பெத்துராஜுக்கு அப்பாவாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் செந்தில். “பொண்ணைவிட அவங்க அப்பா செமையா இருக்காருல்லே?” என்று படத்திலேயே இவரை வர்ணித்து ஒரு வசனம் கூட உண்டு. இவர் நடிகராகத்தான் ஆசைப்பட்டார்.

ஆனால், அது நிறைவேறாது என்று உணர்ந்து வேறு வேறு துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டார். திடீரென இப்படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது யதேச்சையாக நடந்த விஷயம் என்று கூறும் செந்தில், தன்னுடைய சினிமா அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“1995ல் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஆக்டிங் கோர்ஸ் படிச்சேன். வெள்ளித்திரை கனவோடு வெளியே வந்தவனுக்கு சின்னத்திரை வாய்ப்புகள்தான் கிடைச்சுது. எப்படியாவது சினிமாவுக்குள்ளே நுழைஞ்சிடணும்னு முடிவெடுத்து ஏதேதோ முயற்சிகள் செய்தேன். புரொடக்‌ஷன் மேனேஜரா வேலை பார்க்க வாய்ப்பு கிடைச்சுது. உள்ளே வந்துட்டா போதும், அப்புறம் நமக்கு சான்ஸ் கிடைச்சுடும்னுதான் நெனைச்சேன்.

முதலில் நான் வேலை பார்த்த படம் கார்த்திக் நடிச்ச ‘முதலாம் சந்திப்பு’. கார்த்திக் சரியா படப்பிடிப்புக்கு வரமாட்டார், அவரைக் கூட்டிக்கிட்டு வர்றது சாத்தியமே இல்லைன்னு சொன்னாங்க. அதனாலே படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்தால் புரொடக்‌ஷன் மேனேஜருக்குத்தான் பேரு கெடும். ஆனால், கார்த்திக் சார் படப்பிடிப்பு நடந்த நூறு நாளும் எந்தவித தாமதமும் இல்லாம சரியான நேரத்தில் வந்து கலந்துக்கிட்டாரு. எல்லாரும் இதுக்காக என்னைத்தான் பாராட்டினாங்க.

அப்புறம் வரிசையா ‘மழை’, ‘சென்னை 600028’, ‘குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்’, ‘ஆரண்ய காண்டம்’னு நிறைய படங்களில் எக்ஸிக்யூட்டிவ் மேனேஜரா வேலை பார்த்தேன். தயாரிப்பாளர் செல்வகுமார் என்னோட நண்பர். அவர் தயாரிச்ச ‘திருடன் போலீஸ்’ உள்ளிட்ட எல்லாப் படங்களிலும் நான் நிர்வாகத் தயாரிப்பாளரா இருந்துக்கிட்டு வர்றேன்.

ஒருமுறை ஷூட்டிங்கில் பிஸியா ஏதோ வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். ‘ஒரு நாள் கூத்து’ இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் என்னை கேஷுவலா போட்டோ எடுத்துக்கிட்டிருந்தார். மறுநாள் “நீங்கதான் என்னோட படத்துலே ஹீரோயினுக்கு அப்பாவா இருக்கீங்க” என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி. எதுக்காக இந்தத் துறைக்கு வந்தோமோ, அந்த ஆசை இருபது வருஷம் கழிச்சிதான் நிறைவேறியிருக்கு. இடையிலே நமக்கு எங்கேருந்து நடிக்கவெல்லாம் வாய்ப்பு கிடைக்கப் போவுதுன்னு அந்த ஆசையையே துறந்துட்டேன்.

எல்லாரைப் போலவும் ஹீரோவா நடிக்கணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். அதுக்காகத்தான் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தும் படிச்சேன். ஆனா, காலம் வேற மாதிரி கணக்கு போட்டிருக்கு. இப்போ எனக்கு கிடைச்சிருப்பது அப்பா ரோல்தான். இதை நான் முழுமையா பயன்படுத்திக்கணும்னு நெனைக்கிறேன். என் தோற்றத்துக்கு என்னமாதிரி ரோல் கொடுக்க விரும்புறாங்களோ, அதை ஒழுங்கா செய்வேன்.

இப்போ ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ப்ரூஸ்லீ’ படத்தில் வக்கீல் கேரக்டர் பண்ணிக்கிட்டிருக்கேன். அப்புறம் சந்தானம் நடிக்கிற ‘சர்வர் சுந்தரம்’ படத்திலும் அப்பா ரோல்தான். ஆக்சுவலா சொல்லணும்னா அப்பா ரோலில் நடிக்கிற வயசெல்லாம் எனக்கு ஆயிடலை.

ஆனா, அதுக்குதான்னு என்னை முடிவு பண்ணிட்டாங்கன்னா நானென்ன பண்ண முடியும். விஜய், அஜீத், திரிஷா, நயன்தாரான்னு எல்லா ஸ்டார்ஸுக்கும் அப்பாவா நடிக்க ரெடி ஆயிட வேண்டியதுதான். என்னோட நடிப்பில் விஜயகுமார் சாயல் இருப்பதா நிறைய பேர் சொல்றாங்க. அவர் நடிச்ச படங்கள் நிறைய பார்த்து ரசிச்சிருக்கேன். ஒருவேளை அதனாலே இருக்கலாம்.”

- எஸ்ஸார்