முத்தத்துக்கு சத்தம் தந்தவர்!



தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் வேலு - மாரியம்மாள் பெற்றோரின் மகனாகப் பிறந்தார் கிஷோர் குமார். அப்பா-அம்மா பாடும் கிராமியப் பாடல்களும், சுருளியாறு வட்டாரத்தின் இயற்கை வனப்பும் இவரை இசையின் பக்கம் திருப்பியது. எட்டாவது படிக்கும்போதே பாட்டுப் பாடி, தாளம் போட்டு சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் கவர்ந்தார்.

மகனின் ஆர்வத்தில் நம்பிக்கை வைத்த அப்பா, ஆர்மோனியம் வாங்கிக் கொடுத்தார். புத்தக வழிகாட்டுதலின்படி வாசிக்க ஆரம்பித்த இவரது இசையை அக்கம் பக்கம் நேசித்தது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து இசைக்கான வழிகாட்டுதலையும் வாய்ப்பையும் தேட ஆரம்பித்தார்.

விளம்பரப்பட உலகில் பிரபலமாக இருந்த கிரிஷ் கய்மல் இவரை தன்னுடன் இணைத்துக் கொண்டார். மூன்று ஆண்டுகள் அவருடன் இருந்து விளம்பரப்படங்களுக்கு இசையமைக்கும் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டார் கிஷோர்.

சூர்யா ஆடியோ கார்த்திக் தயாரிப்பில் மாலதி லக்ஷ்மன் பாடிய ‘சண்முகனே சரணம்’ ஆல்பத்துக்கு இசையமைத்து தனித்துவம் காட்டினார் கிஷோர். ‘தீர்த்தம்’ பக்தி ஆல்பம் இவருக்கு முகவரி தந்தது. எஸ்.பி.பாலசுப்ரமண்யம், கிருஷ்ணராஜ், மாலதி, ராமு (லக்ஷ்மன் ஸ்ருதி), கோவை கமலா, உன்னிகிருஷ்ணன் ஆகியோர் குரல்களில் அந்த ஆல்பம் ஆன்மிக இல்லங்களின் அன்பைப் பெற்றது.

நார்வே ‘கார்மேகம்’ நந்தா மூலம் ‘அதற்கும் மேலே’ என்கிற வீடியோ ஆல்பத்துக்கு இசையமைத்துள்ளார் இவர். விஜய் மியூசிக்கல், அனுஷ் ஆடியோ, சூர்யா ஆடியோ, ஆரோ மியூசிக் ஆகிய இசை நிறுவனங்கள் இவரது திறமைக்குத் தீனி போட்டிருக்கின்றன. விளம்பரப்படங்களில் அஞ்சால் அலுப்பு மருந்து மற்றும் ஸ்டார் டேட்ஸ் ஆகியவை இவரை அடையாளம் காட்டியவை. ‘வெண்ணிலா வீடு’ வெற்றிவீரன் இயக்கிய ‘பென்சில் கனவு’ குறும்படத்துக்கு இவர் அமைத்த இசை பாராட்டுகளை அள்ளியது.

நண்பர் சரவணன் மூலமாக ‘டிஷ்யூம்’ சோமன் அறிமுகம் கிடைத்ததில், அவர் இயக்கிய ‘கடற்கரை’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘முத்தம் தந்தால் சத்தம் வரலாம்...’ என்கிற செங்கதிர்வாணன் வரிகளை ரோஷிணி பாட, கோடம்பாக்கம் பி.ஆர்.வோ ஒலிப்பதிவுக்கூடத்தில் கிஷோரின் பாட்டுச்சாலைப் பயணம் துவங்கியது. 

இவரது இசையமைப்பில் ‘நாடோடி பறவை’ படத்தில் கானா பாலா பாடிய ‘ஆறேழு மாசமா பாத்தாளே மோசமா...’ பாடல் வரவேற்பைப் பெற்றது. வள்ளல் பாபா, வரணும் பாபா,  சாயி சரணம், அன்னையின் திருவடி,  பொக்கிஷ கோட்டை காளியம்மன், சிவன், சபரி பீடம் ஆகிய இவரது இசையாக்க ஆல்பங்களில் எஸ்.பி.பாலசுப்ரமண்யம், மனோ, ஜானகி, உன்னிகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், வீரமணிதாசன், மாலதி, கோவை கமலா, பத்மலதா, வினயா, ரீட்டா, சத்ய ப்ரகாஷ், புஷ்பவனம் குப்புசாமி, கார்த்திக், பிரசன்னா, மதுபாலகிருஷ்ணன், சீர்காழி சிவசிதம்பரம், வேல்முருகன், சின்னப்பொண்ணு ஆகிய முன்னணி பின்னணிப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்.

சென்னைக்கு வந்ததும் காரைக்குடி புத்திசிகாமணியிடம் ஆர்மோனியம் கற்றுக்கொண்ட கிஷோர், எழும்பூர் பி.ஆர்.வோ மியூசிக் சென்டரில் வெஸ்டர்ன் கற்றார். கிருஷ்ணமூர்த்தி ஐயரிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். அந்த நாட்களில் தனக்கு இருக்க இடமும் உண்ண உணவும் கொடுத்த சாரதா கிருஷ்ண மூர்த்தி ஐயர் குடும்பத்திடம், இசையமைப்பாளர் அந்தஸ்து கிடைத்ததும் ஆசி வாங்கி நெகிழ்ந்திருக்கிறார் கிஷோர்.

‘ஜெனிபர் கருப்பையா’ படத்தில் அண்ணாமலை வரிகளில் இவரது இசையமைப்பு வரவேற்பைப் பெற்றது. சேரன் உதவியாளர் பா.வெங்கட் இயக்கத்தில் ‘புரவி 150 சி.சி’ படத்திலும் இவரது இசையமைப்பில் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது ‘மேல்நாட்டு மருமகள்’, ‘ஓலைச்சுவடி’, ‘சாகாவரம்’, ‘பள்ளிக்கூடம் சாட்சி’ படங்களுக்கு இசையமைத்து வருகிறார் கிஷோர்.மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸரசய்யா’ நெடுந்தொடருக்கு இசையமைத்துள்ளார்  இவர்.

அடுத்த இதழில்

இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல்

நெல்லைபாரதி