அம்மா கணக்கு



தமிழின் முக்கியமான படங்களுள் ஒன்று

திருமணத்துக்குப் பிறகு அமலாபால், தேடி வந்த பல்வேறு வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு நாடிவந்து நடிக்க ஒப்புக்கொண்ட படம். ரிஸ்க் எடுத்ததற்கு பலன் உண்டா என்று பார்க்கலாம்.நடுத்தர வயது அம்மாவாக அமலாபால் நடித்திருக்கிறார்.

டீனேஜ் மகளை நன்றாக வளர்த்தெடுக்க வீட்டு வேலை, மாவுக்கடை, மீன் கடை என்று பல்வேறு இடங்களில் உழைத்து வேலை பார்க்கிறார். அம்மாவின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளாத மகளோ, திடீரென தனக்கு படிப்பில் நாட்டமில்லை என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

மகளுக்கு மீண்டும் படிப்பின் மீது ஆர்வம் வருவதற்காக அவள் படிக்கும் பள்ளியிலேயே தானும் மாணவியாக சேர்கிறார் அமலாபால். ஒரு தேர்வில் மகளைவிட கூடுதல் மதிப்பெண் வாங்கிக் காட்டுகிறார். அம்மாவை ஜெயிக்க ஆர்வமாகப் படிக்கும் மகள், அடுத்த தேர்வில் முந்துகிறார். இந்தப் போட்டியில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. தன் அம்மாவையே தவறாக நினைக்குமளவுக்கு மகள் போகக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. மகளை கலெக்டர் ஆக்கிப் பார்க்க நினைத்த அமலாபாலின் ஆசை நிறைவேறுமா என்பதே அம்மா கணக்கு.

அமலாபாலின் ரீ-என்ட்ரி அட்டகாசமாகத் துவங்கியிருக்கிறது. இவ்வளவு நடிப்பாற்றலை இத்தனை நாட்களாக எங்கேதான் மறைத்து வைத்திருந்தாரோ தெரியவில்லை. மகளாக நடித்திருக்கும் யுவயும், அமலாபாலோடு கதையில் படிப்பிலும், படத்தில் நடிப்பிலும் போட்டி போட்டிருக்கிறார். ரேவதி, சமுத்திரக்கனி போன்றோர் நிறைவான பாத்திரங்கள்.

இளையராஜாவின் இசை கதைக்கு வலுச் சேர்க்கிறது. பாடல்கள் பிரமாதம். கேவ்மிக்யூ ஆரியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். கமர்ஷியல் எதையும் கலக்காமல் கதையை மட்டுமே நம்பி களமிறங்கிய இயக்குநர் அஸ்வினி ஐயர், தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையான புதுவரவு. ஏற்கனவே இதே படத்தை அவர் இந்தியிலும் இயக்கியிருந்தாலும், தமிழுக்கு ஏற்ப செய்திருக்கும் மாற்றங்கள் சிறப்பு.

குழந்தைகளின் உளவியலை ஆராய்ந்திருக்கும் மிக முக்கியமான, இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான படைப்பு இது. பெற்றோர் குழந்தைகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாடமெடுக்காமல், நண்பன் நம் தோளைத் தொட்டுப் பேசுவதைப் போல இயல்பாக எடுத்துச் சொல்கிறது படம்.தமிழின் மிக முக்கியமான படங்களுள் ஒன்றான இதை தயாரித்ததற்காக நடிகர் தனுஷுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.