அன்றே இடா போக்கும் அருளாளள் கருந்திட்டைக்குடியான்



கல்வெட்டு  சொல்லும் கோயில் கதைகள் -  கரந்தை

சோழ மண்டலத்தின் தலைநகராக விளங்கியதஞ்சாவூர் நகரத்தின் புறம்படியே கருந்திட்டைக்குடி என்னும் பேரூராகும். தற்காலத்தில் இவ்வூரினைக் கரந்தை என்றே அழைக்கின்றனர். அடைவு திருத்தாண்டகம் பாடிய திருநாவுக்கரசு பெருமானார் குடி என்ற பெயரில் திகழும் சிவத்தலங்களின் பட்டியலைக் கூறி அத்தலங்களை வழிபட்டால் இடர் அனைத்தும் நீங்கும் என்று கூறியுள்ளார்.

‘‘நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி, நல்லக்குடி, நளி நாட்டியத் தாண்குடி, கற்குடி, தென்களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, காணுங்கால் விற்குடி, வேள்விக்குடி, நல்வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே” - என்பது அப்பர் பெருமானின் திருவாக்காகும். இடர் போக்குகின்ற சிவபெருமான் கருந்திட்டைக்குடியில் மகாதேவர் என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கின்றார். அவர் உறையும் திருக்கோயிலைத் தற்காலத்தில் வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் எனக் குறிப்பிடுகின்றனர்.

முற்காலச் சோழர்களின் கோயில்கள் வரிசையில் பராந்தகசோழன் காலத்தியதாக உள்ள கட்டிடக்கலைச் சிறப்புகளுடன் திகழும் இக்கற்றளியை செம்பியன் மாதேவியாரின் திருமகன் மதுராந்தக உத்தம சோழன் புதுப்பித்தான் எனச் சான்றுகள் அடிப்படையில் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். காவிரியின் கிளை நதியான வீரசோழ வடவாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.

கோயிலின் கீழ்ப்புறம் அழகிய திருக்குளம் விளங்க இரண்டு திருச்சுற்றுகள், திருமதில்கள், சிறிய கோபுரங்கள், அழகிய ஒரு தள விமானங்கள், திருமண்டபங்கள் ஆகியவற்றுடன் மூலவர் கிழக்கு நோக்கியும், உமையம்மை தெற்கு நோக்கியும் காட்சி நல்குமாறு இவ்வாலயம் விளங்குகின்றது. வெளித் திருச்சுற்றில் நான்கு திசைகளிலும் திருவாயில்கள் உள்ளன. வெளிச்சுற்றின் நான்கு திசைகளிலும் ஆனைமுகப்பெருமான் அமர்ந்துள்ளார். மேற்கு வாயிலில் தண்டபாணி கோயில் கொண்டுள்ளார். இரண்டாம் திருச்சுற்றில் கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் உள்ளன.

திருவுண்ணாழி (கர்ப்பக்கிரஹம்) 18 அடி சதுரமானது. தேவகோஷ்டங்கள் முன்பக்கம் பிதுங்கி இரு குட்டையான அரைத்தூண்களையும், இரண்டு உயரமான அரைத்தூண்களையும் பெற்று விளங்குகின்றன. கொடுங்கையின் கீழே பூதகணவரியும், மேலே யாளிவரியும் காணப்பெறுகின்றன. சோழர் காலத்தில் இவ்வாலயம் இரண்டாம் முறை புதுப்பிக்கப் பெற்றபோது சில புதிய மாடங்களும், சிற்பங்களும் அங்கு இடம் பெற்றன.

கருவறை அர்த்தமண்டபம் ஆகியவற்றின் புறச்சுவர்களில் லிங்கத்தை வணங்கும் கோலத்தில் திருஞானசம்பந்தர், நடராஜர், திருநாவுக்கரசர், பிட்சாடனர், விநாயகர், தென்முகக்கடவுள், அகத்தியர், மாதொருபாகர், பிரம்மன், திருமால் ஆகியோருடன் லிங்கோத்பவர், கங்காளமூர்த்தி, வீணாதாரர், காலகாலர், துர்க்கை, கந்தவேள் ஆகிய தெய்வத் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. சோழர்கால சிற்பக் கலையின் உன்னதத்தை இக்கோஷ்ட சிற்பங்களில் கண்டு ரசிக்கலாம்.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் திருச்சுற்று மண்டபங்களில்தான் நால்வர் எனப்பெரும் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நான்கு அருளாளர்களின் திருவுருவங்கள் காணப்பெறும். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில ஆலயங்களில் மட்டுமே கருவறையின் புறச்சுவர்களில் நாயன்மார்களின் சிற்பங்களைக் காண முடிகின்றது.

அவ்வகையில் இடம் பெற்ற கரந்தை ஆலயத்தில் கோவணம் தரித்து கையில் தாளங்களைத் தட்டிய வண்ணம் எதிரே இருக்கும் சிவலிங்கத்தை வணங்கும் நிலையில் திருஞானசம்பந்தர் காணப்பெறுகின்றார். அப்பரடிகளும் கையில் உழவாரத்தை ஏந்தியவாறு கோவணம் தரித்த நிலையில் மரக்கிளைகளுக்கு கீழே நின்றவாறு அங்கு திகழும் சிவலிங்கத்தைப் போற்றுகின்றவராகக் காணப்பெறுகின்றார்.

கோஷ்ட தெய்வங்களில் ரிஷி பத்தினி ஒருத்தி இடும் பிச்சையை ஏந்தியவராகக் காணப்பெறும் கங்காளமூர்த்தியும் (பிட்சாடனர்), ஆடவல்ல பெருமானும், கங்காதரரும், காலகாலரும், உமையொருபங்கனும் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்பங்களாகக் காணப்பெறுகின்றனர். பொதுவாக அர்த்தநாரி சிற்பங்களில் பெருமானாரின் இடப்பாகத்தில்தான் உமைபாகம் காணப்பெறும். இங்கு வலப்பாகத்தில் உமாதேவி ஒரு பாதிவுடலுடன் காட்சி நல்குகின்றாள்.

கருவறையின் நுழைவு வாயிலை ஒட்டி நந்தி, மகாகாளன் என்னும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சிற்பங்கள் 10ம் நூற்றாண்டின் சோழர் காலப்பாணியில் அமைந்தனவாகும். மதுராந்தக உத்தம சோழனின் பத்தாம் ஆட்சியாண்டாகிய கி.பி. 980ல் அருணிலிமலைப்பிராட்டி என்னும் நங்கை ஒருத்தி இந்த துவாரபாலகர் சிற்பங்களைத் தன் கொடையாக அமைத்தாள் என்பதை இவ்வாலயத்து கல்வெட்டுச் சாசனமொன்று கூறுகின்றது.

மதுராந்தக உத்தமசோழனின் மகனான மதுராந்தகன் கண்டராதித்தன் இத்திருக்கோயில் இறைவன் முன்பு திருவிளக்கு எரிப்பதற்காக தொண்ணூற்றாறு ஆடுகளை முதலீடாக அளித்ததை ஒரு சாசனம் விவரிக்கின்றது.

கிழவன் ஆனைக்காவன் என்பவனின் தாயார் தன் பெயரில் கோயில் திருப்பணிகளுக்காக இரு பெரிய கற்களை அளித்தாள் என்பதை இவ்வாலயத்து கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது. ஆலயக் கட்டுமானப்பணியில் எளியவர்களும், பெண்களும் தங்களால் இயன்றவற்றை அளித்து பங்கேற்றனர் என்பதை இதனால் அறியலாம்.

மாமன்னன் ராஜராஜசோழனின் தமக்கையார், குந்தவைபிராட்டியார். நல்லூர் நாட்டு ராஜகேசரி என்னும் ஊரிலிருந்து இக்கோயிலுக்காக மன்னரின் ஆணைப்படி நிலமொன்றினை விற்றுக் கொடுத்தது பற்றி விவரிக்கப் பெற்றுள்ளது.

ராஜராஜசோழனின் குதிரைப்படை வீரர்களான விச்சாதர முத்தரையன் என்பவனும் காரிகுளிர்வாகை என்ற மற்றொரு போர் வீரனும் விற்போர் புரிந்தபோது காரிகுளிர்வாகை என்பவனின் தோளில் வில் பாய்ந்து இறந்துபட்டான் என்றும், அவன் ஆன்மசாந்திக்காக அவன் உறவினர்கள் கருந்திட்டைக்குடி மகாதேவர் முன்பு நந்தா விளக்கு எரிப்பதற்காக அறக்கொடை ஒன்றினை முதலீடு செய்தனர் என்ற தகவலை இக்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு சாசனம் கூறுகின்றது.

கங்கைகொண்ட முதலாம் ராஜேந்திர சோழன் பெயரால் ‘‘ராஜேந்திர சோழன் பட்டம்” என்று மன்னன் பெயரில் அணிகலன் ஒன்றும், பல்வேறு விதமான அணிகலன்களும் இக்கோயில் ஈசனுக்காக வழங்கப் பெற்றமையை ஒரு சாசனம் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு இவ்வாலயத்து சுவர்களில் காணப்பெறும் கல்வெட்டுகள் அனைத்தும் ஆயிரத்து நூறு ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளைச் சுமந்து கொண்டு நிற்கின்றன.

தஞ்சாவூருக்குச் செல்வோர் புறநகரான கரந்தைக்குச் சென்று கருந்திட்டைக்குடி மகாதேவரை வணங்கி, அங்குள்ள கலைநயம் வாய்ந்த கோஷ்ட சிற்பங்களைக் கண் குளிரக் காணுங்கள். அவ்வாலயத்து வரலாற்றுச் சிறப்புக்களை அறிந்து ஈசனைப் போற்றுங்கள். ‘‘கருந்திட்டைக் குடியானைப் போற்ற இடர் போகும் அன்றே” என்ற அப்பரடிகளின் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்