நூற்றுக்கு நூறு சரி!




அறுபத்துமூவர் என்ற  அற்புத உற்சவம் பற்றிய கட்டுரை மனதிற்கு உற்சாகமளித்தது. நேரில் கண்ட பரவசத்தையும், பரமானந்தத்தையும் வழங்கியது. கோடையில் தெங்கிள நீர் பருகியது போன்று இதமாகவும், சுகமாகவும் இருந்தது.
- கே.ஏ. நமசிவாயம், பெங்களூரு.

சேவை உதவி பற்றிய தலையங்கம் அருமை. எதிர்பார்ப்பில்லா உதவிதான் வாழ்வுக்கு உகந்தது. அதுதான் நம் வாழ்வை செம்மையாக்கும் என்பதே நிஜம். யாருமே சேவை மனப்பான்மையோடு பிறருக்கு உதவும் எண்ணத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம். இது மாற வேண்டும் என்ற ஆசிரியரின் ஆதங்கம் நியாயமானதே. 
- சூர்யா ஸ்ரீதர், காஞ்சிபுரம்.

ஸ்ரீராமதரிசனம் கட்டுரையின் மூலம் விதவிதமான ராமர்களை தரிசித்தோம். பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியரின் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக உள்ளது. பாராட்டுகள்.
- ராமகிருஷ்ணன், கூடுவாஞ்சேரி.

தெளிவு பெறு ஓம் பகுதி நாம் அறியாத சம்பிரதாயம், பழக்க வழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் பொக்கிஷம். அன்னதானம் பற்றிய கேள்விக்கான பதில் நிறைவு.
- கோவிந்தாச்சார், வந்தவாசி.

வாஸ்து பாஸ்கர் மூலம் பாகுவா சாஸ்திரம் பற்றி அறிந்தோம். பூமிக்கு அருகில் ஜொலிக்கும் குரு பற்றிய போனஸ் தகவல் அருமையிலும் அருமை.
- ஹரிப்ரியா ப்ரதீப், சென்னை.

பக்தித்தமிழில் அருணாசலக்கவிராயர் பாடிய ‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா’ பாடல் அற்புதம். ரங்கநாதர் களைத்து சயனித்ததின் பின் இவ்வளவு நிகழ்வுகளா எனும் அவரின் கற்பனை வளம் வித்தியாசமாக இருந்தது.
- பாலாஜி, திருவையாறு.

திருமூலரின் திருமந்திரத்தில் எருமை வடிவ பக்தி நிகழ்வைக்கண்டு மனம் நெகிழ்ந்தேன். இறைவன் அருள் புரியும் விதம் பற்றியும் அறிந்தேன். இதைத்தான் ஔவைப்பிராட்டியார் ‘செய்த வினையிருக்க தெய்வத்தை நொந்தக்கால்’ என்று அன்று பாடினார் போலும்.
- சங்கீதா கிருஷ்ணமூர்த்தி, ஓசூர்.

சின்னமேல்மலையனூர் எனும் அங்காளபரமேஸ்வரி கட்டுரை அருமை. அம்பிகையின் ஆலயம் வெகுவிரைவில் முழுமையடைந்து கும்பாபிஷேகமும் சிறப்புற நடைபெற தேவியே திருவருள்புரியட்டும்.
- காஞ்சனா, திண்டிவனம்.
எல்லா செயல்களிலும் வெற்றியருளும் நீலபதாகா தேவியைப் பற்றி அறிந்து வியந்தோம். அம்பிகையின் ஓவியத்தை வரைந்த ஓவியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
- ஷீலாப்ரியா, செங்கோட்டை.

திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் குறளின் குரலில் ‘மனவிலக்கு இல்லா விட்டால் மணவிலக்கு ஏது?’ எனும் தலைப்பு அருமையிலும் அருமை.
- கிருஷ்ணகுமார், புதூர்.

அழகான மலர் செண்பகம் என்று தெரியும். அதற்கு இத்தனை மருத்துவ மகத்துவங்களா! அந்நாளைய கருத்தடை சாதனமாகவும் அந்த மரத்தின் பழம் பயன்பட்டிருப்பது கண்டு நம்முன்னோர்களை நினைத்து பெருமிதம் கொண்டேன்.
- அருணகிரி, புதுச்சேரி.

மகாபாரதத்தில் குருவிற்கு எப்படிப்பட்ட சீடனை பிடிக்கும் என்று பாலகுமாரன் அவர்கள் விளக்கியிருந்த விதத்தை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். வில்லுக்கு விஜயன் என அர்ஜுனனுக்கு பெயர் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடவில்லை போலிருக்கிறது. நூறு சதவிகிதம் செய்யும் செயலில் முழுமையாக ஈடுபட்டால் அந்த செயலில் பரிபூரண வெற்றி கிட்டும் என்பதை  அர்ஜுனன் இரவிலும் பயிற்சி மேற்கொண்ட பாங்கிலிருந்து தெரிகிறது.
- பாலசுப்ரமணியம், வேலூர்.

பிரசாதங்கள் அனைவருக்கும் தெரிந்தது என்றாலும் அதன் முன்னுரை ஆஹா... பேஷ் பேஷ்... ரகம். எளிமையாக ஆனால், ஆழமாக
மனதில் பதிந்தது. நன்றி.
- உஷா கோபாலன், கனகம்மாசத்திரம்.

இதுவரை எந்த பத்திரிகையிலும் வெளிவராத ஷோடஸ மகாலட்சுமி ஸ்தோத்திரத்தை வெளியிட்டு எங்கள் இல்லங்களில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருக வழிவகுத்த தங்கள் இதழுக்கு கோடானு கோடி நன்றிகள்.
- தனலக்ஷ்மி, சேலம்.

சம்பாதி ராமர் ஆலயத்தைப் பற்றி படித்ததும் உடனே போய் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
- குமார், சந்தவாசல்.