ஈசனைப் பாடிய வைணவர்



கல்லணை-பூம்புகார் சாலையில் கோட்டூர் அருகில் உள்ளது கோட்டூர் கஞ்சனூர் தலம். இங்கு பிரம்மனுக்கு இறைவன் திருமணக் காட்சி தந்தார். பராசரருக்குச் சித்தப்பிரமையைப் போக்கினார். அக்கினிக்கு ஏற்பட்ட சோகை நோயைத் தீர்த்தார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கியது, கம்சன் என்ற மன்னனின் நீண்ட நாளைய உடற்பிணி விலகியது. மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த தலம் இது. பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியாரும் இங்குதான் உதித்தார்.

இவர் வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும், திருநீறு, ருத்திராட்சம் தரித்து சிவபக்தியில் திளைத்தவர். தந்தையின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவில்லை. சிவ மார்க்கத்தைப் பின்பற்றிதன் தண்டனையாக பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது ஊர் மக்கள் அவரை உட்காரச் சொன்னார்கள். ‘சிவமே பரம்பொருள்’ என்று தியானித்தபடி அப்படி அமர்ந்த அவரை அந்த வெப்பம் தீண்டவில்லை. இவருக்குச் சிவ தீட்சையையும், ஹரதத்தர் என்ற பெயரையும் ஈஸ்வரன் தட்சிணாமூர்த்தி வடிவில் வழங்கினார்.

நவக்கிரகத் தலங்களில் சுக்கிரனுக்குரிய தலம் இது. சுக்கிரதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். இங்குள்ள கொடிமரத்தை அடுத்துள்ள நந்தியை புல் அருந்திய நந்தி என்று சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள். இத்தலம் மீது  அப்பர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் இறைவன் அக்னீஸ்வரர்; இறைவி கற்பகாம்பிகை. தலமரம் பலாசமரம், தீர்த்தம் அக்னி தீர்த்தம்.

- கோட்டாறு கோலப்பன்