கிருஷ்ணன் என்ற மனிதன்



ஓஷோ கிருஷ்ண தத்துவம்

புதுப்புது பரிமாணங்களில் சிந்தித்த மேதை ஓஷோ. பகவான் ஸ்ரீரஜ்னீஷ் என்று இயற்பெயர் கொண்டிருந்த இந்த சித்தாந்தவாதி, ஓஷோ என்ற பெயரை ஓஷியானிக் (வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்டது) என்பதிலிருந்து உருவானதாகச் சொல்கிறார். ஓஷியானிக் என்ற சொல் அனுபவத்தை மட்டுமே குறிக்கிறது, அது அனுபவிப்பவனைக் குறிக்கவில்லை என்பதாலேயே ஓஷோ என்று சுருக்கிப் பெயர் வைத்துக்கொண்டதாகவும் சொல்கிறார்.

 பின்னர் ஒரு நாளில் இந்தச் சொல் கீழை நாடுகளில் வெகு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை அவர் கண்டுகொண்டார். அவர்கள் என்ன பொருளில் அதைக் கையாண்டார்கள் தெரியுமா? ‘வானம் பூச்செரிந்து ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன்!’

ஏற்கெனவே ‘மறைந்திருக்கும் உண்மைகள்’ என்ற ஒப்புமை கூறமுடியாத அவரது சித்தாந்தங்களைப் படித்த நாம், இப்போது பகவான் கிருஷ்ணனைப் பற்றிய அவரது வித்தியாசமான ஆராய்ச்சியைப் படிக்கப்போகிறோம்.கிருஷ்ணன் முற்றிலும் யாரோடும் ஒப்பிட முடியாதவன்; மிகவும் வித்தியாசமானவன்.முதலாவதாக, கிருஷ்ணன் மிகப்புராதன காலத்தவனாக இருந்தாலும், அவன் எதிர்காலத்திற்கும் சொந்தமானவனாக, உண்மையான எதிர்காலத்தவனாக இருப்பதில்தான், அவனுடைய தனித்தன்மையே அடங்கி இருக்கின்றது.

மனிதன், இனிமேல்தான் அந்த உயரத்திற்கு வளர வேண்டும். அங்கேதான், அவன் கிருஷ்ணனின் சம காலத்தவன் ஆக முடியும். கண்ணன் இன்னும் நம் புரிந்து கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவனாகத்தான் இருக்கிறான்; தொடர்ந்து ஒரு புதிராக நம்முடன் போராடிக் கொண்டிருக்கிறான்.ஏதாவதொரு எதிர்காலத்தில்தான் நாம் அவனைப் புரிந்து கொள்ள முடியும்; அவன் பண்புகளைப் பாராட்ட முடியும். இதற்குச் சரியான காரணம் உண்டு.

மிக முக்கியமான காரணம் என்னவென்றால் - நம்முடைய முழு வரலாற்றிலும், பரிபூரண உயரத்தையும், ஆழத்தையும் எட்டிய ஒரே ஒரு மாமனிதன் கிருஷ்ணன்தான். இருந்தும்கூட, அவன் அப்படியொன்றும் இறுக்கமானவனாகவோ, சோகமானவனாகவோ, கண்ணீர் சிந்துகின்றவனாகவோ இல்லை.

பெரும்பாலும், மதப்பற்றுள்ளவரின் பிரதான குணம் என்னவென்றால், வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்றோடிப் போனவர் போலவும், வாழ்க்கையை விட்டு விலகிப் போனவர் போலவும், அவர், மந்தமானவராகவும், இறுக்கமானவராகவும், துக்கமுடையவராகவும் காணப்படுவார்.அப்படிப்பட்ட நீண்ட ஞானிகளின் வரிசையில் கிருஷ்ணன் மட்டுமே ஆடியபடியும், பாடியபடியும், சிரித்தபடியும் வருகிறான்.

கடந்த கால மதங்கள் எல்லாம் வாழ்வை மறுப்பவை; வேதனையில் இன்பம் காண்பவை; கவலையைப் புகழ்பவை; வேதனைகளை மேலான தர்மங்களாக மகிமைப்படுத்துபவை.
கிருஷ்ணனுடைய சமய தரிசனத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கடந்த காலத்தின் ஒவ்வொரு மதமும், துக்கத்தையும், துயர முகத்தையும் மட்டுமே காட்டுகின்றன.

ஆனந்தமாகச் சிரிக்கும் மதம், வாழ்க்கையை ஒப்புக் கொள்ளுகிற மதம், அதன் முழுப் பரிமாணத்தோடு இனிமேல்தான் பிறக்க வேண்டும். பழைய சமயங்கள் செத்துப் போனது நல்லதாய்ப் போயிற்று. அவற்றின் பழைய கடவுளும் சேர்ந்து கடவுளைப் பற்றிய நம் கணிப்புகளும்கூட செத்து விட்டன.

ஏசுநாதர் எப்போதும் சிரித்ததே இல்லையென்று சொல்வார்கள். ஒருவேளை, அவருடைய சோகப் பார்வையும், சிலுவையில் அறையப்பட்ட அவர் உடலும், மக்களுடைய பிரதானமான கவனத்திற்குரியதாக இருந்ததால், அப்படி இருக்கலாம். பெரும்பாலானவர்களும் அவ்வாறு, சந்தோஷமில்லாத வர்களாகவும், துன்பமுடையவர்களாகவும் தானே இருக்கிறார்கள்! ஆழ்ந்த அர்த்தத்தில் மகாவீரரும், புத்தரும் கூட வாழ்க்கைக்கு எதிரானவர்களே. அவர்கள் வேறு ஒரு உலகத்தின், வேறு ஒரு வாழ்க்கையை ஆதரிக்கிறார்கள். வாழ்க்கையிலிருந்து ஒருவிதமான விடுதலை அடைவதை அவர்கள் ஆதரிப்பவர்கள்.

இன்று வரை, ஒவ்வொரு மதமும் வாழ்க்கையை இரண்டு பாகமாகப் பிரித்து வைத்திருக்கிறது. ஒன்றை ஏற்றுக் கொள்கிறது; மற்றதை மறுக்கிறது. ஆனால், கிருஷ்ணன் மட்டுமே வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறான்.

இவ்வாறு வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதன் மூலம்தான் கிருஷ்ணனின் முழுப்பலனையும் பெற முடியும். அதனால்தான், இந்திய நாடு கிருஷ்ணனைப் பூரணமான கடவுள் அவதாரமாகப் போற்றியது. மற்ற அவதாரங்கள் எல்லாம் குறையுடையவை; முழுமை பெறாதவை. ராமனும் கூட முழுமை பெறாத கடவுள் அவதாரமாகத்தான் கருதப்பட்டான். ஆனால், கிருஷ்ணன் பூரணத்துவம் உடைய கடவுள்.

இப்படிச் சொல்வதற்குக் காரணமுண்டு. கிருஷ்ணன், வாழ்க்கையை ஒப்புக் கொண்டு, அதன் எல்லா அம்சங்களையும் உள்வாங்கிக் கொண்டது தான் அந்தக் காரணம்.
ஆல்பர்ட் ஸ்வைட்சர், இந்திய மதத்தை விமர்சிக்கையில் ஒரு முக்கியமான குறிப்பைச் சொல்லி இருக்கிறார்.

இந்த நாட்டின் மதம் வாழ்க்கைக்கு எதிரானது என்று அவர் சொன்னார். கிருஷ்ணனை விட்டுவிட்டால், இந்தக் கருத்து பெருமளவில் சரியானதுதான். ஆனால், கிருஷ்ணனைப் பொறுத்தவரையில், இது முற்றிலும் தவறானது. ஸ்வைட்சர் கிருஷ்ணனைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து இருப்பாரானால், அவர் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டார்.

விரிவான அளவில், கிருஷ்ணன் நம் வாழ்க்கையைப் பாதிக்க அனுமதிக்காதது, துரதிர்ஷ்டவசமானது நமது வாழ்க்கையாகிய துன்பமும், துயரமும் நிறைந்த விசாலமான கடலில், அவன் ஒரு தனித்தீவாகவே ஒதுங்கி நிற்கிறான். நாம் அனுபவிக்கும் துயரங்கள், எதிர்மறைத்தன்மை, அழுத்தப்பட்ட உணர்வுகள், நிபந்தனைகள் என்னும் பெரிய பாலைவனத்தில், ஆடிப்பாடி ஆனந்தப்படும் ஒரு சிறிய பாலைவனச் சோலையாக அவன் திகழ்கிறான். நம்முடைய முழுமையான வாழ்க்கையின் பலவண்ண நிறமாலையை அவனால் பாதிக்க முடியவில்லை. இதற்கான குற்றம் நம்முடையதுதான். இதற்கு கிருஷ்ணன் கொஞ்சம் கூடப் பொறுப்பாளியல்ல. அவனை ஏற்றுக் கொள்ளவோ, கிரகிக்கவோ, நமக்கு கொஞ்சம் கூடத் தகுதி கிடையாது.

இன்று வரை, மனித மனம், வாழ்க்கையைத் துண்டு துணுக்காகவே பார்த்துப் பழகி விட்டது; அதை தர்க்கத்திற்குரியதாகவும் (முரண்பட்டதாகவும்) பார்க்கிறது. மதப்பற்றுள்ளவன் உடலை மறுக்கிறான்; உயிரை மதிக்கிறான். இதில் பரிதாபம் என்னவென்றால், அவன் தன் உடலையும், உயிரையும் இரு கூறாக்கி, இவற்றிடையே மோதலை உருவாக்கி விடுகிறான். இந்த உலகை மறுக்கிறான். இன்னொரு உலகை ஏற்கிறான். இப்படி இரண்டிற்கும் இடையில் ஒரு பகைமையை ஏற்படுத்தி விடுகிறான்.

நாம், நம் உடலை மறுத்தால் நம் வாழ்க்கை, இயல்பாகவே துக்கமும், துன்பமும் நிறைந்ததாக மாறி விடும். ஏனென்றால், நம்முடைய வாழ்க்கையின் சகல சத்தும் சாரமுமாக இருப்பவை, உடல் சார்ந்த ஆரோக்கியமும், உத்வேகமும், நுண் உணர்வுகளும், அழகும், சங்கீதமும்தான். ஆகவே, உடலை வெறுத்து ஒதுக்கும் ஒரு மதம், ரத்தசோகை பிடித்ததாகவும், நோய்ப்பட்டதாகவும்தான் இருக்க முடியும்.

அது சுரணையற்றதும் கூட. அப்படிப்பட்ட மதம், மரத்திலிருந்து உதிர்ந்த இலைச்சருகு போல, வெளுத்துப்போய், உயிரற்றதாகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட மதத்தைப் பின்பற்றுகிறவர்கள், அது தங்களைப் பாதிக்கவும், தங்களை முறைப்படுத்தவும் அனுமதிக்கின்றவர்கள், அந்தக் காய்ந்த இலைகளைப்போல, ரத்தசோகை பிடித்து மரணத்திற்கு இரையாகிறவர்களைப் போலத்தான் ஆக முடியும்.

கிருஷ்ணன் மட்டுமே, உடலை அதன் பூரண குணங்களோடு ஏற்றுக் கொள்கிறான். உடலில் ஏதாவதொரு தேர்ந்தெடுத்த பாகத்தை மட்டுமல்ல, அதன் எல்லாப் பரிமாணங்களையும் அவன் ஏற்றுக் கொள்கிறான். கிருஷ்ணனை விட்டால், இன்னொருவர் உண்டு. அவர் ஜரதுஷ்டிரர். அவர் சிரித்துக் கொண்டே பிறந்ததாகச் சொல்வார்கள்.

ஒவ்வொரு குழந்தையும், அழுது கொண்டேதான் இந்த உலகில் பிரவேசிக்கிறது. ஒரே ஒரு குழந்தை மட்டும், உலக வரலாற்றில் சிரித்துக் கொண்டே பிறந்தது; அது ஜரதுஷ்டிரர். அது ஒரு அடையாளம் - ஆனந்தமும், சிரிப்பும் நிறைந்த ஒரு சமுதாயம் இனிமேல்தான் பிறக்கப் போகிறது என்பதற்கு அது ஒரு அடையாளம். அப்படிப்பட்ட ஆனந்தமும், சிரிப்பும் நிறைந்த சமுதாயத்தால்தான் கிருஷ்ணனை ஏற்றுக் கொள்ள முடியும்.

கிருஷ்ணனுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது. ஃபிராய்டுக்குப் பின்னால், உலக மதம், அவருக்கு முன்னால் இருந்ததைப் போல இருக்கப் போவதில்லை. இறந்த கால மதங்களுக்கும், எதிர்கால மதங்களுக்கும் நடுவே, ஃபிராய்ட் ஒரு நீர் அணை போல நிற்கிறார். ஃபிராய்டிலிருந்து ஒரு பெரிய புரட்சி ஆரம்பமாகிறது.

மனிதனின் உள்ளுணர்வு, ஒரு புதிய துவக்கத்தைப் பெற்று விட்டது. ஃபிராய்டுக்குப் பிறகு, இனி எப்போதும் நாம் முன்பு போல இருக்க வழியில்லை. உள்ளுணர்வின் ஒரு புதிய சிகரம் எட்டுப்பட்டு விட்டது. வாழ்க்கை பற்றிய ஒரு புதிய புரிந்து கொள்ளுதல், முழுசான ஒரு புதிய வரைபடம், ஒரு புதிய தரிசனம், உருவாகி நிலைத்து விட்டது. அதனால், அதைச் சரியாகப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

கடவுளை அடைவதற்குரிய மார்க்கமாக ‘அடக்கி வைத்தலை’, பழைய மதங்கள் போதித்தன. மனிதன் எல்லாவற்றையும் - தனது காமம், தனது கோபம், தனது பேராசை, தன் பாசப்பிணைப்புகள் எல்லாவற்றையுமே - அடக்கி வைத்து விடும்படி அவனை வேண்டின. அப்போதுதான் அவன் தன் ஆன்மாவைக் கண்டுபிடிக்க முடியும்.

கடவுளை அடைய முடியும் என்று கூறின. தன்னையே எதிர்த்து மோதும் மனிதனின் இந்தப் போர், தேவையற்ற அளவுக்கு நீண்டு விட்டது. பல்லாயிரம் ஆண்டுக்கால இந்தப் போரின் வரலாற்றில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகச் சிலர்தான் கடவுளைக் கண்டார்கள் என்று சொல்ல வேண்டும். ஒரு வகையில், நாம் இந்தப் போரில் தோற்றுவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், கடந்த பல நூற்றாண்டுகளாக, கோடிக்கணக்கான மக்கள், தங்கள் ஆன்மாவைக் கண்டு கொள்ளாமலேயே, கடவுளைச் சந்திக்கா மலேயே செத்துப் போனார்கள்.

சந்தேகமில்லாமல், இந்த மதங்களின் அஸ்திவாரத்தில், ஏதோ ஒரு குறை, ஒரு அடிப்படைத் தவறு இருக்கிறது.தோட்டக்காரன் நட்ட ஐம்பதினாயிரம் மரங்களில், ஒன்றே ஒன்று மட்டும் வளர்ந்து பூத்துப் பலன் தந்தது என்பது போல, ‘ஒரு மரமாவது பலன் தந்ததே’ என்ற அடிப்படையில், அந்தத் தோட்டக்காரனின் தோட்டக்கலை பற்றிய வேதத்தை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

அந்த ஒரு மரமும் கூட விதிவிலக்காக இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்க தவறி விடுகிறோம். அந்த ஒரு மரமும் கூட, தோட்டக்காரனால் உயிர்பெற்று வளர்ந்து பலன் தந்து விடவில்லை; அவன் உதவியில்லாமலேயே பூத்துக் காய்த்துப் பயன் தந்தது அது. அந்தத் தோட்டக்காரன் எதற்கும் தகுதியற்றவன் என்பதற்கு, வளராமலும் மலடாகியும் போன மற்ற மரங்களே சாட்சி.

துண்டு துணுக்காய்ச் சிதறி, முரண்பாடுகள் நிறைந்த இந்த மதங்களைக் கொண்டுதான் புத்தரும், மகாவீரரும், கிருஸ்துவும் தெய்வத்தை நெருங்கினார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் காணமுடியவில்லை. ஒரு மதத்தின் வெற்றி, அதாவது இப்படிச் சொல்லலாம் - ஒரு தோட்டக்காரனின் வெற்றி - அவன் நட்ட ஐம்பதினாயிரம் மரங்களும் பலன் தருவதில்தான் அடங்கியிருக்கிறது.

ஒன்றிரண்டு வேண்டுமானால், விதிவிலக்காகப் பட்டுப் போகலாம். அப்போது தான் நம் குற்றச்சாட்டை அந்த ஓரிரு மரங்கள் மீது சுமத்த முடியும். அப்போதுதான், தோட்டக்காரன் சரிவரக் கவனித்தும் அந்த ஓரிரு மரங்கள் வளர்ச்சி நின்று, மலடாகிப் போயின என்று சொல்ல முடியும்.

ஃபிராய்டினால் மனிதனுக்கு, ஒருவிதமான புதிய விழிப்புணர்ச்சியின் விடியல் தோன்றியது. அடக்கி வைத்தல் தவறானது. இந்த அடக்கி வைத்தல், தன்னிரக்கத்தையும், வேதனையையும்தான் கொண்டு வரும். ஒருவன் தன்னோடு போராடுவதால் அழிந்து ஒழிந்து போய்விடுகிறான். நான் என் இடக்கையை வலக்கையோடு போராட அனுமதித்தால், இரண்டுமே வெற்றி பெறப் போவதில்லை;

ஆனால், கடைசியில் இந்த அம்சம் நிச்சயமாக என்னை அழித்து விடும். என் இருகரங்களும் தம்முள் போரிடும்போது, காலப்போக்கில், நான் மட்டுமே அழிந்து போய் விடுகிறேன். இப்படித்தான் இயல்புணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மறுத்து, அடக்குவதன் மூலமாக, மனிதன் தற்கொலை உணர்வு கொண்டு தன்னையே கொன்று விடுகிறான்.

ஃபிராய்டினுடைய தோற்றம், அவருடைய கண்டுபிடிப்புகளால், மனிதனுக்கு ஒரு புதிய புரிந்து கொள்ளுதல் கிடைக்கிறது. இந்தப் புதிய விழிப்புணர் வால்தான், கிருஷ்ணன் மட்டும் நமக்கு ஏற்றவனாகிறான். அதனால்தான், பழைய சமுதாயத்தின் முழு வரலாற்றிலும், கிருஷ்ணன் மட்டுமே அடக்குமுறைக்கு எதிரானவனாக நிற்கிறான்.

வாழ்க்கையை, அதன் சகல அம்சங்களோடும், பருவங்களோடும், வண்ணங்களோடும் அவன் ஏற்றுக் கொள்கிறான். அவன் மட்டும், எதையும் தேர்ந்தெடுப்பதில்லை; ஒரு நிபந்தனையின்றி வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறான். காதலை அவன் தவிர்ப்பதில்லை; ஒரு மனிதன் என்ற முறையில் அவன் பெண்களை விட்டு ஓடிப்போவதில்லை. கடவுளை அறிந்தவன், அனுபவித்தவன் என்ற முறையில், அவன் மட்டுமே, போரைக் கண்டு முகம் திரும்பி ஓடிப் போகாதவனாக இருக்கிறான்.

அன்பும், அருளும் நிறைந்தவனாக அவன் இருந்தும் கூட, போரை ஏற்றுப் போரிடும் தைரியம் அவனிடம் இருக்கின்றது. அவன் இதயம் சுத்தமான அகிம்சை குணம் உடையது. அப்படியிருந்தும், தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, வன்முறையின் கொடுமைக்குள்ளும், நெருப்புக்குள்ளும் அவன் பாய்ந்து செல்கிறான். அவன் தேனை ஏற்றுக் கொள்கிறவன்தான் என்றாலும் அவனுக்கு விஷத்தைக் கண்டால் பயமில்லை.

சொல்லப்போனால், மரணமில்லாமையை எவன் உணர்ந்து கொள்கிறானோ, அவனால்தான், மரண பயத்திலிருந்து விடுபட முடியும். மரணத்தைக் கண்டு அஞ்சுபவனுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? அகிம்சையின் ரகசியத்தை அறிந்தவனுக்கு மரணபயம் போய்விடுகிறது. வன்முறையைக் கண்டு அஞ்சும் அகிம்சை எந்த விதத்தில் சேர்த்தி? ஆன்மா, உடலைக் கண்டு எவ்வாறு உயிர் அஞ்சி ஓடிவிட முடியும்? இந்த உலகத்தை முழுசாக அரவணைத்துக் கொள்ளாத கடவுளுக்கு என்னதான் அர்த்தம்?

கிருஷ்ணன், வாழ்க்கையின் இருமைப் பண்பையும், தர்க்க முரணையும் முழுசாக ஏற்றுக் கொள்வதால், அவன் இருமையைக் கடந்து அப்பால் செல்கிறான். ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு மறுபகுதியை மறுக்கிற முரண்பாடு உங்களுக்குள் உள்ளவரைக்கும், நாம் சொல்லுகிறோமே அந்த ஆழ்நிலையை நாம் அடைய முடியாது.  ஆழ்நிலை என்பது தேர்வு செய்யாமல், இரு பகுதிகளையும் ஒன்றாக ஏற்றுக் கொள்கிற போதுதான், முழுமையை ஒப்புக் கொள்கிற போதுதான், சாத்தியமாகும்.

அதனால்தான், கிருஷ்ணன், எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற, மிக முக்கியத்துவமுடையவன் ஆகிறான். அவனுடைய இந்த முக்கியத்துவம், காலப் பெருவழியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும். மகான்கள், தீர்க்கதரிசிகளின் ஒளியும், பகட்டும் மங்கிக் கொண்டே செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுறுத்தும் உலக மதங்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் போது, கிருஷ்ணனின் சுடர், தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து, அதன் சிகரத்தின் உச்சியில் நின்று ஒளிவீசும்.

முதன் முறையாக, மனிதன் அவனை உணர்ந்து கொள்ள முடிவதாலும், அவனைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளப் போவதாலும்தான், அப்படி நிகழப் போகிறது. முதல் முறையாக மனிதன் உண்மையாகவே அதற்குத் தகுதியுடையவனாக ஆகப் போவதாலும், அவனது ஆசீர்வாதங்களுக்கு ஏற்றவனாக ஆகப் போவதாலும்தான், அப்படி நிகழப் போகிறது.

உண்மையிலேயே, கிருஷ்ணனைப் புரிந்து கொள்வது கடினம்தான். ஒருவனுக்கு அமைதி தேவைப்படும்போது, அவன் இந்த உலகத்தை விட்டு ஓடிப் போவான் என்பதைப் புரிந்து கொள்வது சுலபம். ஆனால், நெரிசலான கடைவீதியின் மத்தியில் ஒருவனால் அமைதி காணமுடிகிறது என்பதை ஒப்புக் கொள்வது, உண்மையிலேயே கடினம். ஒருவன் தன் பந்தங்களிலிருந்து விடுபட்டுச் சென்றால்தான் மன அமைதி காணமுடியும் என்பது புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்.

 ஆனால், உறவுகள், பந்தங்களின் நடுவே, ஒருவன் பற்றற்றவனாகவும், கள்ளமற்றவனாகவும் இருக்க முடியுமானால், உண்மையிலேயே அதைப் புரிந்து கொள்வது கடினம்தான். அது புயலின் நடுவில் உயிர்த்துடிப்புடனும் அமைதியாகவும் இருப்பது போல. காற்று, சூறாவளிகளிலிருந்து ஒதுங்கி, பாதுகாப்பான இடத்தில், ஒரு மெழுகுவர்த்திச் சுடர் அசையாமல் எரிவதைப் புரிந்து கொள்வது கடினமில்லை. ஆனால், வீசும் சூறாவளிகளுக்கும், புயல்களுக்கும் நடுவே, அந்தச் சுடரை ஆடாமல், அசையாமல் எரிய வைப்பதை எப்படி நம்ப முடியும்? ஆகவே, கிருஷ்ணனை நெருங்கியிருப்பவர்களாலும், அவனைப் புரிந்து கொள்வது கடினம்.

(தொடரும்)

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்
சென்னை - 600017