செல்வ வளம் கொழிக்க பாகுவா என்ன சொல்கிறது?



வளம் தரும் வாஸ்து

பாகுவா, பெங்சூயின் என்ற வாஸ்து கலையின் ஓர் அம்சம் என்பதை அறிந்தோம். அதோடு பாகுவா 1 முதல்4 வரையிலான கர்மஸ்தானம் 2. உதவி 3. சந்தானப்ராப்தி மற்றும் 4.குடும்ப பந்தம் பற்றியும் அறிந்தோம். அடுத்து, பாகுவா 5 - அதாவது புகழ் பற்றி அறிவோம்புகழ்ச்சிக்கு மயங்காதவர் எவரும் உண்டோ? இல்லையென்றே கூறலாம். புகழ் என்பது ஏதோ ஒரு சிறிய விஷயத்திற்கு கூறப்படும் பெருமை அல்ல இது.

நாம் வாழ்ந்த பிறகும் இப்பூவுலகில் நம் பெயர் நிலை பெற்றிருப்பதுதான் புகழ். புகழ் பகுதியின் முக்கோண முனை கதவை நோக்கி இருக்கும். ஆக உங்களின் செயல்பாடே புகழாக மாறும். சமூகத்தில் செய்யப்படும் சேவை முதல் அனைத்து தன்னலம் பாராத செயல்பாடே புகழாக மாறுகிறது.

அணை கட்டிய கரிகால் சோழன், மகாபலிபுரம் படைத்த பல்லவர்கள், சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா, கறுப்பர் இன பாகுபாட்டை ஒழிக்க பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, மருத்துவத்தில் புகழ் பெற்ற ஹிப்போகிராட்டிஸ், மருந்துகளை கண்டுபிடித்த மருத்துவர்கள், பௌதீக, ரசாயன பிரிவுகளில் புகழ்பெற்ற மார்கோனி, மேடம் கியூரி, விலங்கியலில் புகழ்பெற்ற சார்லஸ் டார்வின், விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள், பூஜ்யத்தை கண்டுபிடித்த இந்தியர் இப்படி அவர்களது எல்லை கடந்த செயல்பாடே அவர்களை இன்றளவும் புகழுடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒளியையும் வெப்பத்தையும் உமிழ்வது சூரியன்  ஆக நெருப்பே சூரியன். அப்படிப்பட்ட இடம் புகழுக்குரிய சக்தி மையமாக இவ்விடம் திகழ்கிறது. செய்யும் பணியில் திருப்தி அடைவதும், புகழின் ஒரு அங்கமே என்பதால் இப்பகுதி திருப்திக்குரிய இடமாகவும் கருதப்படுகிறது.சமூகத்தில், தொழிலில் புகழ் பெற துடிப்போர் இப்பகுதிக்கு மேன்மை அளிப்பது நல்லது. இவ்விடம் பாதித்தால் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் நிலையும் வந்து சேரும்.

அறையின் வெளிப்புற சுவரின் மையப்பகுதி இது என்பதை கவனத்தில் கொள்ளவும். சூரியன் சிவப்பை குறிப்பதால், இப்பகுதிக்கும் சிவப்பையே ஒதுக்கியுள்ளது பாகுவா பெங்சூயி சூட்சுமம்.
இப்பகுதி மேன்மையுற்றால் சரித்திரத்தில் இடம் பெற வாய்ப்புண்டு.

நேர் எதிராக அசுத்தமாகவோ, உபயோகமின்றியோ, பாரம் ஏற்றியோ, மனதுக்கு பிடிக்காத இடமாகவோ (கழிவறை, குப்பை கூளம்) இருப்பின் சமூகத்தில் தண்டிக்கப்படும் நிலையோ, அபகீர்த்தி அடைவதோ, தண்டனை பெறுவதோ, சிறைச் செல்வதோ, குடும்பத்திலிருந்து ஒதுங்கி இருப்பதோ சமூகத்தில்  வெறுக்கப்படும் நிலையோ அடைய நேரிடும்.

ஷீல்டு, பட்டங்கள், பதக்கங்கள், கேடயம், சான்றிதழ்களை இங்கு இடம் பெறச் செய்யலாம். அலங்கரிக்கலாம். இங்கு ஷோகேஸ் அமைத்து மேற்கூறியவற்றை இடம் பெறச் செய்யலாம். இதனால் புகழ் கூடி வரலாற்றில் இடம் பெறச் செய்யும் ‘ச்சீ’ சக்தியாக மாறும். இங்கே பறவையின் மென்மையான இறகுகளை காட்சிப் பொருளாகப் பராமரிக்கலாம். மயிலிறகு கொண்டு அலங்காரம் செய்யலாம். மாணிக்கம், கார்நெட் போன்ற சிவப்பு வண்ணமிக்க ரத்தினங்களை வைத்து அழகுபடுத்த உலகப் புகழ் கிட்டும்.

ஓடும் குதிரைகள், முயல், கங்காரு போன்ற படங்களை புகழ் இடத்தில் நிறுவ பிரபல்யம் ஏற்பட்டு பலரும் விரும்பும் மனிதர்களாக வாழ்வார்கள்.சிவப்பு மலர்களையும் (செயற்கையானாலும் பரவாயில்லை) வைத்து அலங்கரிக்கலாம்.இப்படி புகழ் பகுதியை மேம்படுத்தினால் தொழிலில் புகழ் பெறவும், கண்டுபிடிப்புகள் மூலம் சரித்திரத்தில் நீங்காத இடம் பெறவும் முடியும். தீர்க்கதரிசியாகவும் மாறியவர்கள் வீட்டின் அமைப்பு இப்படி இருப்பதைக் கண்டு உணர முடியும்.

6. செல்வப் பகுதிபொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற பொதுமறை வாக்கியம் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது. தனக்கு, சமூகத்திற்கு என சேமிக்கும் பழக்கம் மனித வர்க்கத்திற்கு உரித்தானது.

குழந்தைகள் ஆசையாய் வைத்திருக்கும் உண்டியல், கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல், முதலீடுகளில் இடப்படும் செல்வம், பொக்கிஷம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், நவரத்தினங்கள், வண்டி, வாகனங்கள் போன்றவை தனிப்பட்ட நபரின் செல்வச் செழிப்பைப் பறைசாற்றுகின்றன. விமானம், ராணுவம், கப்பல், நீர்மூழ்கி கப்பல், ராக்கெட், சேட்டிலைட் போன்றவை ஒரு நாட்டின் செல்வ செழிப்புக்கு ஆதாரமாக அமைகின்றன.

இந்நாளில் ‘அறிவு பெட்டகமே’ செல்வ வளமாக கருதப்படுகிறது. ஜப்பான், சிங்கப்பூர் போன்ற கிழக்கத்திய நாடுகள் ஐ.டி துறையில் சிறந்து விளங்குகின்றன. எனவே செல்வ செழிப்பான, பிற நாடுகளிடமிருந்து கடன் வாங்காத நாடுகளாகத் திகழ்கின்றன. ஆப்ரிக்கா போன்ற நாடுகள் செல்வ செழிப்பின்றி இருப்பதால் அடிதடி, கொள்ளை, களவு, நோய் பீடிக்கப்பட்டு வறுமையில் உழல்கின்றன.

அப்படிப்பட்ட செல்வநிலை எவ்விதம் நம்மை அடைகின்றன அல்லது ஏன் அடைய மறுக்கின்றன என காண்போம்.    செல்வம் என்பதைக் காற்றுடன் ஒப்பிடச் சொல்கிறது பாகுவா.  நம் முன்னோர்களும் ‘அதிர்ஷ்ட காற்று அடிக்குது’ என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். காற்றை போலவே வேகமாக வரும், புயலை போல சீறிக்கொண்டு வந்து சேரும் அல்லது அதே வேகத்தில் அழியும் நிலையும் செல்வத்திற்கு உண்டு.

ஒரு தொழில் நிலை பெறுவதும், ஊசலாடுவதும் செல்வப் பகுதியின் காரணமாகத்தான். மேலும் வீட்டார் உடல் நிலை சீராவது, ஆரோக்யம் போன்றவற்றையும் இவ்விடம் உணர்த்துவதால் இவ்விரு காரணிகளையும் கட்டுப்படுத்தும் இடமாக இது அமைகிறது.

செல்வம் உயரவும், பிறருக்கு உதவி செய்ய வேண்டுமெனில் அன்னதான பிரபுவாக, நன்கொடையாளராக விருப்பம் உள்ளவர்கள் இப்பகுதியை மேன்மைபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.இவ்விடத்தின் சக்தி ‘மரமாகும்’இவ்விடத்தை சிவப்பு, கருஞ்சிவப்பு, குங்குமவர்ணம், நீல நிறங்களை கொண்டு அலங்கரிக்கலாம்.

செல்வப் பகுதியின் இடப்பக்க மூலையில் சிறிய நீருற்றை அமைத்தால் அது எந்நேரமும் சலசலப்புடன் தூய காற்றை உருவாக்கும். இவ்வமைப்பு சிறப்பான பலன்களை அளிக்கும்.கிரிஸ்டல்கள், பூங்கொத்து (வாடாதது) சில தங்க நாணயங்களை சிவப்பு கயிற்றால் கட்டி வைக்க சிறப்புடன் கூடிய நிரந்தர செல்வத்தை அது வாரி வழங்கும்.

தங்க மீன் உடைய மீன் தொட்டியும் இவ்விடத்தை சிறப்பாக்கும் அம்சமாகும்.தொழில் நிறுவனங்களில் இப்பகுதி லாபம் அதிகரிக்க வழிசெய்யும், தொழில் அபிவிருத்தி ஏற்படும் என்பதைத் தெளிவுபடுத்துவதால் வெகுலாவகமாக இந்த செல்வப்பகுதியைப் பராமரித்தல் வேண்டும்.

(தொடரும்)

வாஸ்து பாஸ்கர்