அட, அப்படியா!




மூன்று கோலத்தில் பெருமாள்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது மன்னார்கோவில். இங்கு பெருமாள் மூன்று நிலைகளில் காட்சி தருகிறார். கருவறையில் நின்ற கோலத்திலும், கருவறைக்கு மேலே அஷ்டாங்க விமானத்தின் முதல் அடுக்கில் வீற்றிருந்த கோலத்திலும், அதற்கு மேல் இரண்டாம் அடுக்கில் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார் பெருமாள்.

வில்லேந்திய சனிபகவான்

கரந்தையில் உள்ள சிதாநந்தேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தின் மேற்குதிசையில் சனிபகவானுக்கு சிறு சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சனிபகவான் நின்ற கோலத்தில் மேல் கையில் அம்பும், வில்லும் பிடித்து, கீழ் வலக்கையில் திரிசூலம் ஏந்தி, இடக்கையில் வரத முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.

நமக்கும் தெரியும் ஐந்து நிறங்கள்

திருச்சி மாவட்டம் உறையூரில் அமைந்துள்ளது ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ கோயில். இங்கு சிவபெருமான் படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தங்கம், தாமிரம், வெண்மை, செம்மை, கருமை ஆகிய ஐந்து நிறங்களில் காட்சி கொடுத்துள்ளார். அதன் காரணமாகவே, இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இன்றளவும் இங்கு நடைபெறும் ஐந்து கால பூஜைகளில் ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு நிறத்தில் என ஐந்து வண்ணங்களில் இவர் காட்சி தருவது சிறப்பு.

மனைவியருடன் போர்க்கோலம்!

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் முருகப்பெருமான் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை ஆகிய இரு தேவியர்களும் புடைசூழ, மயில் மீது அமர்ந்தபடி போர்க்கோலம் கொண்ட விஸ்வரூபத்தில் காட்சியளிக்கிறார். இந்த முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், துன்பங்கள் விலகி, இன்பம் பெருகும் என்பது ஐதீகம்.

கயிறு துலாபாரம்

கேரளாவில் எர்ணாகுளம் - திருச்சூர் சாலையில் உள்ள சிவன் கோயிலில் தாம்புக் கயிறை பக்தர்கள் துலாபாரமாக கொடுக்கிறார்கள். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக இந்த நேர்த்திக்கடனை வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், நோய் குணமானதும் இக்கோயில் மண்டபத்தில் கயிற்றை கட்டுகின்றனர்.