நாம் அணியும் நகைகளை இறைவனுக்கு அணிவிக்கலாமா?



தெளிவு  பெறு ஓம்

நல்ல நாள் பார்த்து நேரத்தையும், நிமிடங்களையும் கணித்து குழந்தையை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக பிறக்க வைப்பது சரியா?
- இரா.வைரமுத்து, ராயபுரம்.

சரியில்லை. பிறப்பையும், இறப்பையும் நிர்ணயிக்கும் சக்தி மனிதனுக்கு இல்லை. ஜனனமும், மரணமும் இறைவனின் செயல். அதனை சரியாக கணிக்க எவராலும் இயலாது. “ஜனனீ ஜென்ம ஸௌக்யானாம் வர்த்தனீ குல ஸம்பதாம், பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா” என்ற வாசகத்தினை ஜாதகம் எழுதத் துவங்குவதற்கு முன்பு ஜோதிடர்கள் எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அவரவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படியே இந்த ஜென்மத்தில் பிறப்பானது அமைகிறது என்பது நமது இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கை.

ஒவ்வொரு ஜீவனும் எந்த நேரத்தில் இந்த பூமியில் பிறப்பெடுக்க வேண்டும் என்பதை இறைவனால்தான் நிர்ணயம் செய்ய முடியும். வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் நாம் நாளையும், நேரத்தையும் கணித்து சிசேரியன் மூலம் பிள்ளையைப் பிறக்க வைப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் அவ்வாறு ஜோதிடர் கணித்துக் கொடுக்கும் சரியான மணித்துளிக்கு நிச்சயமாக எந்த மருத்துவராலும் சிசேரியன் மூலம் குழந்தையை பிறக்க வைக்க இயலாது. இந்த பூமியில் முதன்முதலாக காற்றை சுவாசித்து குழந்தை அழுகின்ற நேரமே அதன் பிறப்பு நேரமாகக் கருதப்படுகிறது.

 சிசேரியன் மூலம் குழந்தையைப் பிறக்க வைத்தாலும் (வெளியில் எடுத்தாலும்) அது இந்த பூமியின் காற்றை உள்ளிழுத்து வெளிவிடும் அந்த தருணமே குழந்தையின் ஜனன நேரமாகக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் அமைகின்ற லக்னம்தான் குழந்தையின் ஜென்ம லக்னமாகிறது. இதன் அடிப்படையில்தான் அந்த குழந்தையின் எதிர்காலப் பலன்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

 என்னதான் நாம் நாளையும், நேரத்தையும் ஜோதிடரின் கணிப்புப்படி மருத்துவரிடம் தெரிவித்தாலும் சரியாக அந்த நிமிடத்தில் குழந்தையை பிறக்க வைக்க எவராலும் இயலாது. ஏதோ ஒரு காரணத்தால் நேரம் தப்பிப்போகும். மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருவதற்கு தாமதம் ஆகலாம்;. மின்சாரம் தடைபடலாம்; பிரசவம் பார்க்க வேண்டிய மருத்துவருக்கேகூட உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.

இதுபோன்ற காரணங்களை நாமும் அன்றாடம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆபரேஷன் தியேட்டருக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியில் இருக்கும் நமக்கும் தெரியாது, மயக்க நிலையில் இருக்கும் தாய்க்கும் தெரியாது. ‘உங்களுடைய மனத்திருப்திக்காக நீங்கள் குறித்துக் கொண்டு வந்திருக்கும் அந்த நேரத்தில்தான் குழந்தையை பிறக்க வைத்திருக்கிறோம் என்றுதான் நாங்கள் வெளியில் சொல்வோம்,’ என்கிறார் மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு நண்பர். ஆக நாளை வேண்டுமானால் நாம் நிர்ணயிக்க முடியும், குழந்தை பிறக்கின்ற நேரத்தை நிச்சயமாக எந்த மனிதனாலும் குறித்துக் கொடுக்க இயலாது. அவ்வாறு குறித்துக் கொடுத்தாலும் அந்த நேரத்திற்கு குழந்தையை பிறக்க வைக்க இயலாது என்பதே நிதர்சனமான உண்மை.

எனது வீட்டின் க்ருஹப்ரவேசத்திற்கு பசுவும், கன்றும் தருவதாக ஒப்புக்கொண்ட ஒருவர் கடைசி நேரத்தில் மாடு சினை என்று கூறி தர மறுத்துவிட்டார். சினை மாட்டினை வைத்து கோபூஜை செய்யக்கூடாதா? மற்றொருவர் பல க்ருஹப்ரவேசங்களுக்கு மாடு கொடுத்ததில் மூன்று மாடுகள் காரணமின்றி இறந்துவிட்டதாகக் கூறி  தர மறுத்துவிட்டார். க்ருஹப்ரவேசத்திற்கும், மாடுகள் இறந்ததற்கும் சம்பந்தம் உண்டா?
- வி.சீனிவாசன், நெய்வேலி.

க்ருஹப்ரவேசத்திற்கும், மாடுகள் இறந்ததற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. மாடுகளை வளர்த்து வந்தவருக்கு அதனை முறையாக, ஆரோக்கியமாக வளர்ப்பதற்கான வசதிகள் இல்லாமல் போயிருக்கலாம். புதுமனை புகுவிழாவில் பூஜைக்கு வரும் மாடுகளை தோஷம் தாக்கிவிடும் என்பது முற்றிலும் மூடநம்பிக்கை. பசுமாடு முதலில் உள்ளே நுழைவதால் தீயசக்திகள் அனைத்தும் பயந்து ஓடிவிடும் என்பதே நமது நம்பிக்கை.

பசுவின் உடம்பில் முப்பது முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள் என்கிறது வேதம். வேதவாக்கு என்றுமே பொய்ப்பதில்லை. புதுமனை புகுவிழாவில் பூஜைக்குச் செல்வதால் பசுமாட்டிற்கு தோஷம் தாக்கி இறந்துவிடும் என்பது தவறான கருத்து. கன்றுடன் கூடிய பசுமாடுதான் கோபூஜை செய்வதற்கு உகந்தது.

சினைமாட்டினை (கருத்தரித்துள்ள) பசுமாட்டினைக் கொண்டு புதுமனை புகுவிழாவில் கோபூஜை செய்யக்கூடாது. பசுமாடுதான் என்றில்லை, கருத்தரித்துள்ள பெண்கள் கூட புதுமனை புகுவிழாவில் கலந்துகொள்ள செல்லும்போது பூஜைகள் அனைத்தும் முடிந்தபிறகு வேண்டுமானால் சென்று கலந்து கொள்ளலாம்.

க்ருஹப்ரவேசத்தின்போது எலுமிச்சம்பழம், பூசணிக்காய் ஆகியவற்றை நறுக்கி தேவதைகளுக்கு பலி கொடுப்பார்கள். அந்த நேரத்தில் கருத்தரித்துள்ள பெண்கள் அங்கிருக்கக் கூடாது என்று நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். வயிற்றில் உள்ள குழந்தையை அந்த தோஷம் தாக்கிவிடும் என்பதால் கருவுற்றிருக்கும் பெண்கள் வருவதற்கு தடை விதித்தார்கள். பசுமாட்டினை எந்த தோஷமும் தாக்காது. ஆனால், அதன் வயிற்றில் இருக்கும் கன்றினை எந்த தோஷமும் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக சினைமாட்டினை வைத்து க்ருஹ ப்ரவேசத்தின்போது பூஜை செய்வதில்லை.

கோயிலில் அபிஷேகத்தின்போது உபயதாரர்களின் நகைகளை வாங்கி சொர்ணாபிஷேகம் செய்கிறார்களே... இது சரியா?
- அ.யாழினி பர்வதம், சென்னை.

 தவறு. நாம் அணிந்துகொண்டிருக்கும் ஆபரணங்களைக் கொண்டு இறைவனுக்கு ஸ்வர்ணாபிஷேகம் செய்யக்கூடாது. ஸ்வர்ணாபிஷேகம் செய்ய விரும்புவர்கள் புதிதாக தங்கக் காசுகளை வாங்கி அதனைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து ஸ்வாமி பிரசாதமாக அந்த காசுகளை உபயோகித்துக்கொள்ளலாம். அல்லது நாம் அதுவரை அணிந்திராத, புதிதாக வாங்கிய ஆபரணங்களைத் தந்து இறைவனுக்கு ஸ்வர்ணாபிஷேகம் செய்து அதனை இறைவனின் அருட்பிரசாதமாக அணிந்து கொள்ளலாம். நாம் ஏற்கெனவே பயன்படுத்திய நகைகளைத் தந்து ஸ்வர்ணாபிஷேகம் செய்வது தவறு.

பால், தயிர், இளநீர், சந்தனம் என இறைவனுக்கு நாம் செய்யும் மற்ற அபிஷேகங்களுக்கு புதிதாகத்தானே பொருட்களை வாங்கித் தருகிறோம்? இறைவனுக்கு அபிஷேகம் செய்த பாலை பிரசாதமாக உட்கொள்கிறோம். அபிஷேகம் செய்த விபூதி மற்றும் சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொள்கிறோம். இவற்றிற்கெல்லாம் முற்றிலும் புதிதாக வாங்கியவற்றைத்தான் உபயோகப்படுத்துகிறோம்.

அதேபோல ஸ்வர்ணாபிஷேகத்திற்கும் நாம் அணிந்திராத புதிய தங்கத்தைத்தான் உபயோகப்படுத்த வேண்டும். நாம் உடுத்திக்கொண்ட வேஷ்டி புடவையையோ, வேறு வஸ்திரத்தையோ இறைவனுக்கு எவ்வாறு அணிவிப்பதில்லையோ அதே நிலை, தங்க நகைகளுக்கும் பொருந்தும். இறைவனுக்கு அணிவித்ததனை அவனது பிரசாதமாக நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நாம் அணிந்ததை இறைவனுக்கு சாத்துவது தவறு. இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.எல்லாம் இறைவன் செயல் என்று கூறுகிறார்களே... அப்படியானால் மனித முயற்சியின் பலன் என்ன?
- கூறைநாடு நாராயணன், மயிலாடுதுறை.

‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று ஒன்றும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருப்பதும் கூடாது. இயங்கிக் கொண்டே இருப்பவனுக்குத்தான் இறைவனின் அருள் கிட்டும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது பகவத் கீதை. நடந்தது, நடப்பது, நடக்க உள்ளது அனைத்தும் இறைவனின் செயல். கடமையைச் சரிவர செய்து வரவேண்டும் என்பது மட்டுமே நமது பணி.

அதற்குரிய பலனைத் தருவதே இறைவன் செயல். அவரவர் செய்யும் கர்ம வினைக்கு ஏற்ப அவரவருக்கு உரிய பலனை இறைவன் தந்து கொண்டிருப்பார். எல்லாம் இறைவன் செயல் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே போல முயற்சி திருவினையாக்கும் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. முயற்சி செய்பவன் மட்டுமே முன்னேற்றத்தைக் காண முடியும்.

அந்த முன்னேற்றத்தைத் தந்து நமது முயற்சிக்குத் துணையாய் இருப்பவன் இறைவன். தேர்விற்கு ஒழுங்காகப் படிக்க வேண்டும். கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் என்பதே ஒரு மாணவனின் கடமை. படிக்க வேண்டிய நேரத்தில் ஒழுங்காகப் படிக்காமல் ஊர் சுற்றிவிட்டு தேர்வு நேரத்தில் எல்லாம் இறைவன் செயல் என்று மாணவனின் பெயரில் அர்ச்சனை செய்வதில் எந்த உபயோகமும் இல்லை.

அதே நேரத்தில் தன் முயற்சியால் நன்றாகப் படிக்கும் மாணவன் தேர்விற்குரிய நாளில் உடல்நிலை பாதிப்பு முதலான எந்தவித தடையுமின்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வினை சிறப்பாக எழுதத் துணை நிற்பவன் இறைவன். முயற்சி செய்பவனுக்கு மட்டுமே இறைவன் துணை நிற்பான் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

வாழை மரம், முருங்கை மரம் வீட்டில் வளர்க்கலாமா?
- அ.கிருஷ்ணகுமார், பு.புளியம்பட்டி.

தாராளமாக வளர்க்கலாம். வாழை மரம் வீட்டினில் வளர்வது நல்லதுதான். முருங்கை மரத்தில் பூச்சி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். வீட்டினில் ஈசான்ய பாகம் என்று அழைக்கப்படுகின்ற வடகிழக்கு பகுதியில் முருங்கை மரத்தை வைக்கக் கூடாது. அதே போன்று வீட்டு வாயிலில் அதாவது வீதியிலிருந்து வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள பகுதியிலும் முருங்கை மரத்தை வைக்கக் கூடாது. தோட்டத்தின் பிற பகுதியில் முருங்கை மரம் வைத்து வளர்ப்பதில் தவறில்லை. வாழை மரத்தினை வீட்டினில் எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம்.

குலதெய்வத்திற்கு வேண்டுதலை நிறைவேற்றாவிட்டால் குடும்பத்தில் கஷ்டங்கள் வருமா?
- நா.ராமமூர்த்தி, சோழவந்தான்.

குலதெய்வம் என்றில்லை. எந்த தெய்வத்திற்கு வேண்டிக் கொண்டாலும், உங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும், வேண்டுதலை செய்து முடித்துவிட வேண்டும். எந்த தெய்வமும் தான் செய்த பணிக்காக மனிதனிடமிருந்து எந்தவிதமான கட்டணத்தையும் எதிர்பார்ப்பதில்லை. நாம்தான் என்னுடைய தேவையை நிறைவேற்றினால் இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று பிரார்த்தனை செய்துகொள்கிறோம்.

தேவைகள் நிறைவேறியதும் இறைவனை மறந்துவிடுகிறோம். கஷ்டம் வரும்போது கடவுளை நினைக்கும் நாம், இன்பம் வரும்போது, அந்த இன்பத்தை நமக்கு அருளிய இறைவனை நினைக்க மறக்கிறோம். வேண்டுதலை நிறைவேற்றுதல் என்பது நமது பக்தியின் வெளிப்பாடே அன்றி அது இறைவனுக்குத் தரும் கட்டணம் அல்ல.

இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பதும் பக்தி சிரத்தை இருக்கிறதா என்பதைத்தான். பக்தி சிரத்தையோடு இறைவனைச் சரணடைபவர்களை அவன் என்றுமே கைவிடுவதில்லை. எந்த தெய்வத்திற்கு வேண்டிக்கொண்டாலும் அதனை உடனடியாகச் செய்து முடியுங்கள். வருடத்திற்கு ஒருமுறையேனும் குலதெய்வத்தை தரிசனம் செய்து வாருங்கள். எல்லா விதமான கஷ்டங்களும் காணாமல் போகும்.

நான் வெள்ளிக்கிழமை பூஜையில் எலுமிச்சம்பழத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜையில் வைக்கிறேன், மறுநாள் அந்தக் கனியை பூஜையறையில் தனியாக எடுத்து வைக்கிறேன். இப்படியே கனிகள் சேர்ந்துகொண்டு செல்கின்றன. அவற்றை என்ன செய்ய வேண்டும்?
- பானுமதி சத்தியமூர்த்தி, காலடிபேட்டை.

 பூஜையில் வைத்த எலுமிச்சம்பழத்தை அப்படியே தனியாக எடுத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் வைத்து பூஜை செய்யும் பழம் மட்டுமல்ல, அம்மன் கோயிலில் பிரசாதமாகத் தரும் எலுமிச்சம்பழத்தையும் வீட்டிற்கு வந்தவுடன் சாறுபிழிந்து பருகிவிட வேண்டும். அம்பிகையின் பிரசாதமாக நம்மிடம் வந்து சேர்ந்த எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து பருகுவதால் உடல் ஆரோக்யம் மேம்படும். நீங்கள் வெள்ளிக்கிழமையில் வீட்டில் வைத்து பூஜை செய்யும் எலுமிச்சம்பழத்தையும் மறுநாள் அம்பிகையின் பிரசாதமாக எண்ணி சாறு பிழிந்து உட்கொள்ளுங்கள். அதனைத் தனியாக எடுத்து வைத்து பாழாக்கக் கூடாது.

பஸ் வசதி இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது ஏன்?
- ஜி.ராஜேஸ்வரி, திண்டுக்கல்.

பக்திதான் காரணம். வீட்டிலேயே பூஜையறை அமைத்திருந்தாலும் குறிப்பிட்ட ஸ்தலத்திற்கு சென்று தரிசனம் செய்வதையே மனம் விரும்புகிறது. இறைவனின் சாந்நித்தியம் அந்த இடங்களில் நிரம்பியிருப்பதால் மனம் மீண்டும் மீண்டும் அந்த இடங்களுக்கு செல்ல விரும்புகிறது. சபரிமலை, பழனி, திருப்பதி, திருச்செந்தூர் என பல ஸ்தலங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

 அவ்வாறு சாந்நித்தியம் நிரம்பிய இடங்களுக்குச் செல்லும்போது இறைவனின் பால் மனம் ஒன்றுவதற்காக உடலை வருத்தி சில காரியங்களைச் செய்கிறார்கள். பாதயாத்திரை செல்வது மட்டுமல்ல, தீ மிதித்தல், காவடி எடுத்தல், அலகு குத்திக் கொள்ளுதல், சாப்பிடாமல் விரதம் இருத்தல் என உடலை வருத்திச் செய்யும் காரியங்கள் அனைத்தும் அவரவர் கொண்டிருக்கும் பக்தியின் வெளிப்பாடு.

பேருந்தில் சுகமாக பயணித்து இறைவனை தரிசிப்பதை விட பாத யாத்திரை செல்லும்போது இறைவனின்பால் மனம் லயிக்கிறது. உலக சுகத்தினைத் தவிர்த்து இறைவனின் பால் பக்தி கொள்ளும்போது சிரத்தை அதிகரிக்கிறது. சிரத்தையுடன் கூடிய பக்திக்கு பலன் அதிகம் என்பதால் பக்தர்கள் பஸ்  வசதி இருந்தும் பாத யாத்திரை செல்கிறார்கள். இது பக்தியின் வெளிப்பாடே அன்றி பெருமைக்காக பாத யாத்திரை செல்கிறார்கள் என்று பழிக்கக் கூடாது.

சரபேஸ்வரர் ஆலயம் எங்கு உள்ளது? இவர் சிவனின் வடிவம் என்று கூறுவது ஏன்? இவரை எப்படி வணங்குவது?
- நிர்மலா கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

 பெரும்பாலான பழங்கா லத்திய சிவாலயங்களில் சரபேஸ்வரரின் திருவுருவத்தைக் காணலாம். எனினும் மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையே உள்ள திருபுவனம் எனும் ஊரில் உள்ள கம்பஹரேஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரருக்கு என தனியாக சந்நதி அமைந்துள்ளது. வைகாசி மாதத்தில் நடக்கும் உற்சவத்தின்போது சரபேஸ்வரமூர்த்தி தேரினில் வீதி உலா வருவதோடு சரப தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும்.

இந்த ஆலயத்தில் பிரதி ஞாயிறு தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். திருபுவனம் தவிர, சிதம்பரம் நடராஜர் ஆலயம் போன்ற புகழ்பெற்ற சிவாலயங்களில் கூட சரபேஸ்வரருக்கு தனிச் சந்நதி உண்டு. சிவாலயங்களில் உள்ள சரபேஸ்வரரின் சந்நதிகளில் பிரதி ஞாயிறு தோறும் மாலை ஆறு மணிக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.

ஹிரண்யகசிபுவை வதம் செய்த நரசிம்மமூர்த்தியின் உக்கிரத்தைத் தணிக்க சிவபெருமான் சரபேஸ்வரர் வடிவத்தில் தோன்றியதாகச் சொல்வார்கள். அசுரனாகிய ஹிரண்யகசிபுவின் ரத்தத்தைப் பருகியதால் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் கட்டுக்கடங்காமல் போக, சரபேஸ்வரர் அவரை அணைத்து சாந்தப்படுத்தியதாக புராணங்கள் சொல்கின்றன.

சரபேஸ்வரரின் இரு இறக்கைகளில் ஒன்றில் பிரத்யங்கிரா தேவியும்  மற்றொன்றில்  சூலினி துர்கா தேவியும் இடம் பெற்றிருப்பர். பிரதி ஞாயிறுதோறும் மாலை நேரத்தில் சரபேஸ்வரருக்கு தேங்காய் மூடியில் நெய் விளக்கேற்றி வைத்து வழிபடுவதால் மறைமுக எதிரிகளால் உண்டாகும் கஷ்டங்கள் தீரும். பாலோடு தேன் கலந்து நைவேத்யம் செய்வதும் நல்லது.