பன்னிரு நாமங்கள் கொண்ட ஈசன்



காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருத்தலம் மாகறல். இங்குள்ள திருக்கோயில் ஈசனின் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவி - திருப்புவன நாயகி. மேலும் இந்த ஈசனுக்கு பன்னிரு திருநாமங்கள் உண்டு.

ஈசன் சுயம்புலிங்கமாய்த் தோன்றி காட்சி அருளுவதால் நிலையிட்ட நாதர் என்றும், பிரம்மா, இந்திரன் போன்றோர் இறைவனை வழிபட்டுத் தங்களது மனோவயப்படி வரம் பெற்ற காரணத்தினால் ‘ஆபத்சகாயர்’ என்றும், ராஜேந்திர சோழ மன்னனை தடுத்தாட்கொண்டமையால் ‘தடுத்தாட் கொண்ட நாதர்’ என்றும், புற்றைத் தோண்டியபொழுது பாரிளால் தழும்பு ஏற்பட்ட காரணத்தினால் ‘பாரத்தழும்பர்’ என்றும், ரதியின் மாங்கல்யத்தைக் காத்ததினால் ‘மங்கலங்காத்த நாதர்’ என்றும், மாகறன் என்ற அசுரன் வழிபட்டு வரம் பெற்ற காரணத்தினால் ‘மாகறலீஸ்வரர்’ எனறும்,

அகத்திய முனிவர் வழிபட்டமையால் ‘அகத்தீஸ்வரர்’ என்றும், தாஸு, சந்திரன் இருவரின் பிழையைப் பொறுத்து அவர்களைப் பரிந்து காத்தமையால் ‘பரிந்துகாத்த நாதர்’ என்றும், உடும்பு வடிவில் குராசேந்திர சோழ மன்னனுக்குக் காட்சி கொடுத்ததினால்  ‘உடும்பீஸ்வரர்’ என்றும், புற்றில் உடும்பு சென்று மறைந்ததினால் ‘புற்றிடங்கொண்ட நாதர்’ என்றும், காசிப முனிவரின் யாகத்தைக் காத்தருளியமையால் ‘யாகம் வாழ்வித்த நாதர்’ என்றும், காதி என்பவளின் குமாரர்களின் கொடுமையிலிருந்து இந்திரர் போன்ற தேவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தமையால் ‘அடைக்கலம் காத்த நாதர்’ என்றும் பன்னிரு திருநாமங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

ஆலிங்கன கோலத்தில் நரசிம்மர்

கும்பகோணம் அருகில் நவகிரக தலங்களில் ஒன்றான ஆலங்குடி உள்ளது. இத்தலத்தில் அபய வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் மகா மண்டபத்தில் கல்யாண நரசிம்மர் என்ற திருப்பெயருடன் லட்சுமி நரசிம்மர் தமது வலதுபுற மடியில் பிராட்டியை ஆலிங்கன கோலத்தில் காட்சி தருகிறார். இடதுபுறமே பெரும்பாலும் திருமகளைத் தாங்கும் நரஹரி இங்கு வலதுபுறம் திருமகளை வைத்துள்ளது தனிச்சிறப்பாகும். மேலும் திருமணங்களை முடித்து வைப்பதில் வல்லவராக இவர் புகழ் பெற்றுள்ளார்.

லிங்கத்தில் அம்பிகை

பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் அருகில் இருக்கிறது கன்னிகா பரமேஸ்வரி கோயில். இங்கு அம்பிகை நடுவில் இருக்க வலப்புறம் சிவன் சந்நதியும், இடப்புறம் விஷ்ணு சந்நதியும் உள்ளன. சிவன் சந்நதியில் உள்ள லிங்கத்தில் அம்பிகையின் முகம் இருக்கிறது. இதை சிவசக்தி லிங்கம் என்கின்றனர். இந்த லிங்கத்திற்கு பின்புறம் சிவன் - அம்பிகை இருவரும் உருவ வடிவிலும் காட்சி தருகின்றனர்.

- டி.பூபதிராவ்