சனிபகவான் தோஷம் நீக்கிய அரன்



மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூரில்தான் சங்கப்புலவரில் ஒருவரான கபிலர் பிறந்தார். இவ்வூரில் எழுந்தருளும் ஈசன், மாணிக்கவாசகருக்கு பாத சிலம்பொலியைக் கேட்கும்படி அருள்புரிந்துள்ளார். தோஷத்தால் கால் முடம் ஆன சனி பகவான் இத்தல ஈசனை வணங்க சாபம் நீங்கப் பெற்றார். மற்றொரு சிறப்பு சிவபெருமான், ‘வேதம் நானே’ என்று மகாவிஷ்ணுவிற்கு உபதேசித்தருளினார்.

- ஏ.எம்.சுப்ரமணியன்

எல்லோரும் ராமானுஜன்களே!

மதுரை டி. கல்லுபட்டி அருகேயுள்ள பேரையூர் தலத்தில்தான் பூஜ்யம் பிறந்ததாக கூறப்படுகிறது. குறி தவறாக வில் வித்தை தெரிந்த அர்ஜுனனுக்கும், ஜோதிட வல்லுனரான சகாதேவனுக்கும் சதுர்வேதம், எண் ஜோதிட ஆற்றலை கொடுத்த ஸ்தலம் என்பதால் இங்குள்ள சிவனுக்கு மல்லிகார்ஜுனர் என்று பெயராகும். கணித பாடத்தில் மந்தமான குழந்தைகள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களும் ராமானுஜன்களாகலாம்!

பூஜ்யத்தை அடிப்படையாகக் கொண்ட கம்ப்யூட்டர் படிப்பிலும் உயர்வடைய இத்தலத்தில் வழிபடலாம். கருச்சிதைவு, கருக்கலைப்பு, கருத்தடை மாத்திரை சாப்பிடுவது போன்றவை உயிர் கொல்லும் பாவமாகும். ஜீவ அணுக்கள் பூஜ்ஜிய வடிவில் இருப்பதால், பூஜ்யத்தலமான பேரையூர் மேலப்பரங்கிரி மலைக் கோயிலில் வந்து வழிபட்டால் அந்த பாவங்கள் நீங்கும்.
- அ.யாழினி பர்வதம்

இடம் மாறிய ‘திங்கள்!’
சிவபெருமான் பிறைசூடன் இடப்பக்க பிறை நிலா சூடியவன். அர்த்தநாரீஸ்வரராக இருக்கையில் மட்டும் வடப்புறத்தில் நிலவை சூடுவது அதிசயமே! எப்போதும் ராமருக்கு இடப்புறம் இருக்கும் சீதையும் ஒரே ஒரு ஆலயத்தில் வடப்புறம் அமர்ந்துள்ளார். பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே ஒருவர் மட்டுமே அணிலை தான் பாடிய பாசுரமான ‘திருமாலை’ நூலில் சிறப்பித்துள்ளார். இவர் விப்ர நாராயண என்னும் தொண்டரடிப் பொடியாழ்வார் ஆவார். குபேரன் கீரியை அருகில் வைத்திருப்பது போன்று அணிலை சிறப்பிக்கிறார் ஆழ்வார்.
- சு.நவீனா தாமு

அபராத மண்டபம்

திருவலஞ்சுழியில் அபூர்வமான விநாயகர் உள்ளார். இவர் கடல் நுரையால் ஆனவர். எனவே இவருக்கு மற்ற விக்ரகங்கள் போல அபிஷேகங்கள் கிடையாது. பச்சை கற்பூரத்தை மட்டுமே பொடித்து தூவுவார்கள். தீண்டா திருமேனி. ஒரு சமயம், அரிதுவாரம் என்ற அரசன் ஆண்டு வந்தார். அவர் விநாயகருக்கு தம்மிடம் உள்ள விலையுயர்ந்த சந்தனத்தை சாத்த ஆசைப்பட்டார்.

அப்போது குருக்கள் விநாயகருக்கு பச்சை கற்பூரம் தவிர்த்து வேறு பொருட்கள் சாத்தமுடியாது என்றும் மீறினால் என்ன நேருமோ என்றும் பயந்தார். உடனே அரசர் நான் சுவாமிக்கு அபசாரம் செய்ய இருந்தேனே விநாயகா என்னை மன்னிக்க வேண்டும் என்றும் தண்டமிட்டார். அப்போது விநாயகர்  ‘அரசனே அபராத மண்டபம் ஒன்று கட்டி உன் அபசாரத்திற்கு வழி தேடிக்கொள். இதை பார்த்தப்பின் யாரும் இதுபோல் ஆசைபட மாட்டார்கள்,’ என்றார். அதன்படி ஒரு நாளைக்குள் கட்ட வேண்டும் என்ற விநாயகரின் கட்டளைப்படி தாறுமாறான கற்களால் உருவான அந்த அபராத மண்டபம் திருவலஞ்சுழியில் இன்றும் இருக்கிறது.

- மீனா சுவர்ணம்