மனநிறைவைத் தந்தது



“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாசுரங்களைப் படித்து அரங்கனை திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம். திரு என்.சொக்கன் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.
- சுந்தர ராகவன் ரங்கராஜன்

(இ-மெயில் மூலமாக)நரசிம்ம ஜெயந்தி சிறப்பிதழில் ‘அஹோபிலம் என்ற அற்புதம்’ கட்டுரை நேரடி டூர் சென்றதைப்போல படிப்படியான வர்ணனையுடன் கட்டுரை ஆசிரியர் விளக்கிய விதம் அவரது அனுபவத்தை தெளிவாக்குகிறது.

அக்கிரமம் செய்பவன் எத்தனை சலுகைகளை வரங்களாகப் பெற்றிருந்தாலும் அவனால் தப்பிக்கவே முடியாது என்பதை பிரஹலாதன் சரித்திரத்தின் மூலம் புரிய வைத்தது, இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்துவதாக இருந்தது. ஆன்மிகத்துடன் சமுதாயக் கருத்தை இணைத்தது தங்கள் இதழின் மணிமுடியில் ஒரு வைரம் பதித்தது போன்று இருந்தது.
- பாபு கிருஷ்ணராஜ், கோவை.

சூதும், வாதும் இல்லாத இலக்கியம் ஏது? இதிகாசத்தில் மகாபாரதத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் வள்ளுவத்தையும் சகுனி பகடை ஆடிய விதத்தைப் பாரதியின் பாடல்களிலும், நவீன எழுத்தாளர் ஜெயகாந்தன் சிந்தனையையும் தொட்டுக்காட்டி சூதின் தன்மையை திருப்பூர் கிருஷ்ணன் விளக்கியது, எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.
- இராமகண்ணன். திருநெல்வேலி.

நெஞ்சை நெகிழவைக்கும் பஞ்ச நரசிம்ம தலங்கள் குறித்த தகவல்களும், படங்களும் சம்பந்தப்பட்ட நரசிம்ம ஆலயங்களுக்கு நேரிலேயே சென்று தரிசித்து விட்டு வந்த மனநிறைவைத் தந்திருந்தன. அதே போன்று பயம் போக்கும் பைரவர் என்ற கட்டுரை பைரவரின் அருட்சிறப்புகளையும் மாறுபட்ட கோலங்களில்
அருளாட்சி புரிந்து வரும் பைரவர்கள் பற்றிய விவரங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாக்கியிருந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மகாவிஷ்ணு எடுத்த உக்கிரமான அவதாரம் நரசிம்மாவதாரம். திருமால் திருமகளுடன் லட்சுமி நரசிம்மராய் எழுந்தருளி பக்தர்களை தீமை என்ற அரக்கரிடமிருந்து  காக்கின்ற அஹோபிலம் என்ற அற்புதமான திருத்தலத்தை நரசிம்ம ஜெயந்தி தருணத்தில் கட்டுரை வாயிலாக அழைத்துச் சென்று தரிசிக்க வைத்த தங்களுடைய ஆன்மிக சேவை சிலிர்க்க வைத்துவிட்டது.
- அயன்புரம் சத்யநாராயணன்.

நாவல் மரத்தின் மகிமையும் நற்கதியடைந்தோரின் பெருமையும் விளக்கிய கட்டுரையில் உள்ளம் உறைந்தது. ஆதிசங்கரரின் லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம் மனதில் பக்தியுடன் குடியேறியது. பைரவர் வீற்றிருக்கும் தலங்களையும் பயப்பிணியை நீக்கிய தங்களின் ஆன்மிகப் பணியை போற்றி பாராட்டுகிறேன்.
- எஸ்.சுந்தர். திருநெல்வேலி.

நரசிம்ம ஜெயந்தி சமயத்தில் வித விதமாய் நரசிம்மர்கள் பற்றி அறிந்தேன் சிங்கிரிகுடியில் வாழும் சிங்கனின் பெருமைகளை அறிந்து வியந்தேன். பலா சக்க வரட்டியை ஊரிலிருந்து வந்த என் மாமியாருக்கு செய்து கொடுத்து ஆஹா பேஷ் பேஷ் பட்டம் வாங்கினேன். தாங்க்யூ ஆன்மிகம்.
- கலாரகு, கூடுவாஞ்சேரி.

நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு அட்டைப்படம் மிகத் தத்ரூபமான வண்ணத்தில் அமையப் பெற்றிருந்தது. சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் நாவல் மரம்
நட்சத்திரப் பலன்களோடு சேர்ந்து விரிவாக மனதைத் தொட்டது. தங்கள் இதழ் மாணிக்கப் பெட்டகமாக விளங்குகிறது.
- இரா.கல்யாணசுந்தரம்.

வினைகளைத் தீர்க்கும் வித்தகியான ஜ்வாலாமாலினியைப் பற்றி தங்கள் இதழின் மூலம் விவரமாக அறிந்தேன். அகத்தியர் அருளிய சுக்ல, க்ருஷ்ணபட்ச திதி துதிகள்
அருமையிலும் அருமை. கட்டுரையாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
- லட்சுமி ரமணி, வேளச்சேரி.

தெளிவு பெறு ஓம் பகுதி எங்கள் நெடுநாளைய சந்தேகங்களுக்கு தெளிவு தருகிறது. பாராட்டுகள். அதிகம் அறியாத தென்சேரிகிரி முருகனின் பெருமையை அறிந்தோம். நன்றிகள் கோடி.
- அருணகிரி, கரூர்.

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் மகாபாரதத்தை முதலில் படிப்பதா ஓவிய சித்தர் ம.செ.வின் ஓவியத்தை முதலில் பார்ப்பதா என்று தடுமாற்றமே வந்து விடுகிறது. சபாஷ் சரியான போட்டி என்று சொல்லத் தோன்றுகிறது! அருமை. பாலகுமாரனின் பேனாவிற்கும், ம.செவின் தூரிகைக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்.
- வருண், பெங்களூரு.

சித்திரை மாதத்திற்கு இத்தனை சிறப்புகளா? ‘அட!’ என வியக்க வைத்தது கட்டுரை. திருமூலர் மந்திர ரகசியத்தில் விவசாயத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள தொடர்பை ஆசிரியர் விளக்கியிருந்த விதம் அருமையிலும் அருமை. தினகரன் ஆன்மிக மலர் விளம்பரமே படிக்க சுவாரஸ்யமாக ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கிறது. பாராட்டுகள்.
- அர்ஜுன் ரங்கராஜன், திருச்சி.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியரின் பலன்கள் துல்லியமாக உள்ளன. வாஸ்து பகுதியில் ஆமை பொம்மையின் மகிமையை அறிந்து வியந்தோம்.
- சீதாரவி, சேலம்.

என்ன சொல்லுது எதிர்காலத்தில் கே.பி.வித்யாதரன் அளிக்கும் பதில்கள் காயம்பட்ட மனதிற்கு மயிலிறகால் வருடுவது போல் உள்ளது. வாழ்க அவரது இறைப்பணி. வளர்க அவரது புகழ்.
- தணிகாசலம், திருத்தணி.

அட்டைப் படம்தான் எவ்வளவு அழகு! தாயாரை மடியில் இருத்திக்கொண்டிருக்கும் நரசிம்மர் கண்களில் மிளிர்வது சாந்தமா அல்லது சற்றே கண்டிப்பு கலந்த அன்பா என்பதைப் புரிந்துகொள்வது அவரவர் மனப்பக்குவத்தைப் பொறுத்தது என்றே கருதுகிறேன். தங்களது அட்டைப்பட வெற்றி தொடரட்டும்.
- ஜெயமணி குஞ்சுராமன், பாலக்காடு.

பிரசாதங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிவேதனப் பண்டங்களைவிட கட்டுரைத் துவக்கத்தில் கொடுக்கப்படும் முன்னுரை மிகவும் சுவையாக இருக்கிறது. அதுவே அந்தப் பண்டங்களைத் தயாரித்து, நிவேதித்து, உட்கொள்ளவும் தூண்டுகிறது என்றால் மிகையில்லை!
- சுவேதா நாராயணன், செங்கல்பட்டு.

பஞ்சாங்கக் குறிப்புகள் பயனுள்ளவையாக இருக்கின்றன. என்ன, தனியே கிழித்து வைத்துக்கொண்டு பதினைந்து நாட்களின் நடப்புகளை அறிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதிலும் ஒரு நன்மை - ஆன்மிகம் வந்த நாளன்றே படிக்காமல் விட்டுவிட்ட கட்டுரைகள் அனைத்தையும் இந்த சாக்கில் ஒன்றுவிடாமல் படித்துவிட முடிகிறது!
- கல்பனா அரவிந்தன், முதுமலை.

பொதுவாகவே வேதாந்தங்களை ஒருமுறைக்குப் பலமுறை படித்துதான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஓஷோ வெகு எளிமையாக, யதார்த்தமாகத் தான் சொல்லவந்த வேதாந்தக் கருத்துகளை சொல்லிவிடுகிறார். அவர் சொல்ல வந்தது புரிந்துவிடுகிறது என்றாலும், அந்த அழகு நடைக்காகவே ஒன்றுக்குப் பலமுறை படித்து இன்புறுகிறேன். நல்ல சினிமா அல்லது நல்ல கதையைப் பலமுறை பார்ப்பது அல்லது படிப்பதுபோல!
- எம்.வி.தியாகராஜன், திண்டுக்கல்.

சீரியஸான விஷயங்களை (நகைச்)சுவையாக வழங்குவதும் ஒரு கலைதான். அந்த வகையில் பி.என்.பரசுராமன் ஒரு தனி பாணியைக் கடைபிடிக்கிறார். நம் தோள்மீது கைபோட்டு இனிய நண்பராக திருமூலரை விவரிக்கிறார்.
- என்.கிரிதரன், சென்னை.