வசதி வாயப்புகள் கிட்டும்



என்ன சொல்லுது எதிர்காலம்

?எனக்குத் திருமணமாகி பதினைந்து வருடங்களாகிவிட்டன. என் தாய் மாமாவை தான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த பத்து வருடங்களாக நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறோம். என் கணவர் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதால் குடும்பத்தைக் கைவிட்டு விட்டார். நான் என் அம்மா, அப்பாவுடன்
இருக்கிறேன். அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது.

எங்கள் அனைவரையும் என் தங்கையும் அவர் கணவரும்தான் பார்த்துக் கொள்கிறார்கள். ஏதாவது ஒரு தொழில் செய்ய நினைத்தேன். அதனால் நகைகளை அடகுவைத்து முயற்சித்தேன். ஆனால், எந்தப் பலனும் இல்லை. மூன்று வருடமாகி விட்டது. கொடுத்த பணமும் வரவில்லை. என் எதிர்காலத்திற்கு வழி கூறுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு எவ்வளவு தான் கஷ்டப்படுவேன். கொடுத்த பணம் கிடைக்குமா? கிடைப்பதற்கு வழி கூறுங்கள்?

- நிவேதா, பாபநாசம்உங்கள் ஜாதகத்தையும் உங்கள் பிள்ளைகள் இருவரின் ஜாதகத்தையும் பிருகு சூத்திரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மீன லக்னம், மிதுனராசி, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஞானகாரகன் கேதுவின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. உங்கள் லக்னாதிபதியும், நட்சத்திர நாயகனுமான குருபகவான் சனியுடன் சேர்ந்து பாதகஸ்தானத்தில் அமர்ந்திருப்பதுடன் நவாம்சத்திலும் லக்னத்திற்கு எட்டாவது வீட்டில் குருபகவான் மறைந்திருப்பதால் தான் சின்ன சின்ன சந்தோஷங் களை கூட நீங்கள் போராடி பெற வேண்டியதாகி உள்ளது.

உங்கள் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதுடன் சப்தமாதிபதி புதன் ஆறாமாதிபதி சூரியனுடன் சேர்ந்திருப்பதாலும் அவ்விரு கிரகங்களும் ராகுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் அடைந்திருப்பதாலும்தான் திருமண வாழ்க்கை உங்களுக்கு சோகமயமாகி விட்டது. ஆறில் சுக்கிரன் அமர்ந்திருந்தாலே கணவருக்கு ஏதேனும் ஒரு தீய பழக்கம் இருக்கத்தான் செய்யும். 9.2.1993 வரை உங்களுக்கு குருமகாதசை நடைபெற்றது. 9.2.2012 வரை சனிமகாதசை நடைபெற்றது. தற்சமயம் புதன் மகாதசையில் கேதுபுத்தி 3.7.2015 வரை நடைபெறும்.

புதன் மகாதசை 9.2.2029 வரை நடைமுறையில் இருக்கும். நீங்கள் பிறந்ததிலிருந்தே பாதகஸ்தானத்தில் நின்ற கிரகங்களான குரு, சனிதசையும் அதன் பின்னர் பாதகஸ்தானாதிபதியாகிய புதனின் தசையும் நடைபெற்றுக் கொண்டுள்ளது அதனால் தான் வாழ்க்கையில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள். கட்டுமானப் பொருட்களுக்குரிய கிரகமான சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் ஆறில் மறைந்து பகைபெற்றிருப்பதால் செங்கல், மணல், டைல்ஸ், கிரானைட் சம்பந்தப்பட்ட வியாபாரத்தை நீங்கள் தவிர்ப்பது நல்லது. 20.8.2015க்கு பின்னர் நீங்கள் இழந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக பெற வாய்ப்பிருக்கிறது.

உங்கள் மகளுக்கு 15.6.2018 வரை செவ்வாய் மகாதசை நடைபெறும். சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் யோகாதிபதியாக இருந்தாலும் சனியின் பார்வை பெற்றிருப்பதாலும்
2014 டிசம்பர் மாதம் வரை ஏழரைச்சனி நடைபெற்றதாலும் பலவிதமான இழப்புகளையும், ஏமாற்றங்களையும் நீங்கள் சந்திக்க வேண்டியதாகி விட்டது. உங்கள் மகனின் ஜாதகத்தில் 17.6.2015 வரை ராகுதசையில் கேதுபுத்தி நடைபெறும். 18.6.2015 முதல் உங்கள் மகன் ஜாதகப்படி மனநிம்மதியும், பணவரவும் உண்டாகும். உங்கள் மூவரின் ஜாதகத்தையும் ஆராயும் போது உணவு, மருந்து, டெய்லரிங் வகைகளால் உங்களுக்கு பணம் வந்து சேரும். பிள்ளைகளுடன் ராமேஸ்வரம் சென்று இருபத்தோறு தீர்த்தங்களில் நீராடி இறைவனை தரிசித்து வாருங்கள்.

அருகி லிருக்கும் அம்மன் ஆலயத்திற்கும் திங்கட்
கிழமையில் சென்று தீபம் ஏற்றுங்கள்.
பிரச்னைகள் குறைந்து நிம்மதி ஏற்படு
வதுடன் வசதி, வாய்ப்புகளும் கிட்டும். 

?நான் எம்.காம் முதலாம் ஆண்டு மாலைக் கல்லூரியில் பயின்று வருகிறேன். வேலைக்காக பல்வேறு அரசு தேர்வுகளை எழுதி வருகிறேன். தனியார் நிறுவனங்களிலும் அதிக அளவில் தேர்வுகளையும், நேர்காணலையும் மேற்கொண்டு வருகிறேன். ஆனால், ஏதேனும் ஒரு சின்ன விசயத்தால் எனக்கு வேலை கிடைக்காமல் போய்விடுகிறது. எனது வறுமை, வேலை வாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
- எஸ்.கார்த்திகேயன், வடுகப்பட்டி.

உங்கள் ஜாதகத்தினை பலதீபிகை எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். விருச்சிக லக்னம், மிதுன ராசியில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் ஐந்து கிரகங்கள் அமர்ந்திருப்பதால் வருங்காலத்தில் சுயதொழில் உங்களுக்கு அமையும். 21.1.2016 வரை சனிதசையில் கேதுபுக்தி நடைபெறுவதால் அதுவரை அலைச்சலும், மனஇறுக்கங்களும் வந்து நீங்கும். 22.1.2016 முதல் சுக்கிர புக்தி தொடங்குவதால் வடஇந்திய தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும் கவலை வேண்டாம். சனிபகவான் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதால் எலெக்ட்ரானிக்ஸ், வாகனங்கள், கெமிக்கல் தொடர்பான கம்பெனியில் வேலை கிடைக்கும்.

உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்குங்கள். நல்லது நடக்கும்.? என்னுடைய பெண் மனவளர்ச்சி குன்றிய குழந்தை. சிறு குழந்தையாக இருந்தபோது பேச்சு நன்றாக வந்தது. ஆனால், பார்வை தெரியாமல் போய்விட்டது.

காட்ராக்ட் ஆபரேஷன் செய்தோம். கண்ணாடி அணிந்தபின், கண் தெரிந்தது. இப்போது அவளுக்கு நான்தான் எல்லாம் செய்து கொண்டிருக்கிறேன். அவள் எதிர்காலம் எப்படி உள்ளது? இப்போது பேச்சு தடைப்பட்டு உள்ளது. சிறப்பு பள்ளியில் சேர்த்தோம். ஆனால், என் குடும்ப சூழ்நிலையால் அவளது படிப்பும் தடைப்பட்டது. குழந்தை பேசுவதற்கு பரிகாரம் இருந்தால் கூறவும்.

- ஒரு வாசகி, திருச்சி.
உங்கள் மகளின் ஜாதகத்தை ஹோராசாரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மிதுன லக்னம், மிதுன ராசியில் பிறந்திருக்கிறாள். உங்கள் மகள் ஜாதகத்தில் பாதகாதிபதி குரு வலுவடைந்து காணப்படுகிறார். லக்னாதிபதியும், ராசிநாதனுமாகிய புதன் பாதகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்து பலவீனமாக உள்ளார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் வலுவிழந்து காணப்படுவதுடன் பூர்வ புண்ணியஸ்தானத்திற்கு முன்னும் பின்னும் சனியும், கேதுவும் அமர்ந்திருப்பதாலும் வாக்காதிபதி சந்திரன் தனக்கு பன்னிரண்டில் சென்று மறைந்ததுடன் வாக்குஸ்தானத்தின் மீது பாதகாதிபதியின் பஞ்சமசாயல் விழுவதாலும் தான் உங்கள் மகள் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பாதகாதிபதியுடன் சேர்ந்த ராகுமகாதசை 3.2.2001 வரை உங்கள் மகளுக்கு நடைபெற்றது. ஆறாமாதிபதியும், உங்கள் மகளின் லக்னாதிபதியான புதனுக்கு பகைக்கோளான செவ்வாயின் பார்வை பெற்று பாக்கியாதிபதி சனி அமர்ந்திருப்பதாலும்தான் எண்ணங்களை வாய்மொழியாய்  வெளிப்படுத்தும் சக்தி இல்லாமல் போய்விட்டது. பாதகாதிபதியான குருமகாதசை 3.2.2017 வரை நடைபெறும். அதன் பின்னர் வரும் சனிமகாதசை உங்கள் மகளுக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் பேச்சை தர வாய்ப்பிருக்கிறது. ஒரு குழந்தையின் தாய், தந்தை சஷ்டாஷ்டக ராசியாக இருந்தாலும் பெற்றோரின் பூர்வபுண்ணிய ஸ்தானமும் குருவும் பலவீனமாக காணப்பட்டாலும் இதுபோன்ற குழந்தைகள் ஜனிப்பதுண்டு.

ஆயுள்காரகனும், ஆயுள்ஸ்தானாதிபதியுமான சனிபகவான் ராசியிலும், நவாம்சத்திலும் வலுத்துக் காணப்படுவதால்  உங்கள் மகளுக்கு தீர்காயுசு யோகம் உண்டு. உங்கள் மகள் பேசும் திறனை பெறவும், பிறர் துணையின்றி தன்னிச்சையாக செயல்படவும், ஆற்றலையடையவும் கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை அமாவாசை திதியிலோ அல்லது தேய்பிறை பஞ்சமி திதியிலோ தேங்காய் தீபமேற்றி வழிபட்டு வரவும்.

? நான் இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காது. சோதனை காலங்காலமாய் இருக்குமானால் அதை எப்படி நான் சாதனைகாலமாய் மாற்றிக்கொள்வது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும். எந்த தெய்வத்தை தொடர்ந்து வணங்க வேண்டும்? எனக்கும் என் மனைவிக்கும் தினமும் சண்டை தான், நாங்கள் ஒற்றுமையுடன், பசி, பட்டினி இல்லாமல் வாழவும் வழிகாட்ட வேண்டும். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். அவர்கள் எதிர்காலம் எப்படி உள்ளது?- செந்தில் குமார், கும்பகோணம்.

உங்களின் ஜாதகத்தை சங்கேத நிதி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். கும்ப லக்னம், மேஷ ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் பிரபல யோகாதிபதிகளான சுக்கிரனும், புதனும் ஆறில் மறைந்து காணப்படுவதாலும் மனோகாரகன் சந்திரன் கேதுவுடன் சேர்ந்து கிரகணதோஷம் அடைந்திருப்பதாலும் லக்னாதிபதி சனி பகை வீட்டில் அமர்ந்து பகைக்கோளான சூரியனின் சேர்க்கை பெற்றிருப்பதுடன் லக்னத்தை உக்கிர செவ்வாய் பார்த்துக் கொண்டிருப்பதாலும்தான் அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் யோகாதிபதிகளான சுக்கிரனும், புதனும் யோகாதிபதிய லக்னாதிபதியின் சாரத்தைப் பெற்றிருப்பதால்தான் சோதனையிலும் சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனைவியின் ஜாதகம் நன்றாக இருக்கிறது. டிசம்பர் 2017க்கு பின்னர் உங்கள் மனைவிக்கு நல்ல அமைப்பு உருவாகிறது. உங்கள் மகன் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார்.

உங்கள் மகள் மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கிறார். 18.5.2016 வரை உங்கள் மகனுக்கும், 16.4.2017 வரை உங்கள் மகளுக்கும் கேதுதசை நடைபெறும். 17.4.2017 முதல் உங்கள் மகளுக்கு பிரபல யோகாதிபதி சுக்கிரனின் தசை தொடங்கயிருப்பதால் அதுமுதல் உங்களுக்கு யோகமான அமைப்பு உருவாகும். 29.5.2013 முதல் உங்களுக்கு ராகுமகாதசை தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பதாலும் 11.2.2016 வரை ராகுமகாதசையில், ராகுபுக்தி நடைபெறுவதாலும் சந்திரனுக்கு ஏழில் ராகு அமர்ந்திருப்பதாலும் மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.

களத்திரகாரகன் சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் பலவீனமாக இருப்பதால் மனைவியை அனுசரித்துப் போவது நல்லது. உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கவலை வேண்டாம். உங்கள் ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம் அடைந்தும், சுக்கிரன் கிரகயுத்தம் அடைந்தும் காணப்படுவதால்தான் எதையும் போராடி பெற வேண்டியதாகி உள்ளது. உங்கள் மகளுக்கு சுக்கிர தசை தொடங்கும் காலம் முதல் உங்களுக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும். குடும்பத்துடன் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தி வெங்கடேச பெருமாளை வணங்கி வாருங்கள். நினைத்தது நிறைவேறும்.

? எனது மகன் இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறான். நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தப் பெண்ணை நாங்கள் ஏற்றுக் கொண்டு விட்டோம். ஆனால், பெண் வீட்டார் இதற்கு பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தன் பெண் வீட்டில் ஏற்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறி என் மகனைத்  திருமணம் செய்து கொள்வேன் என்கிறாள். ஆனால், அவளது பெற்றோரின் விருப்பம் இல்லாமல் அவ்வாறு என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு விருப்பம் இல்லை.

இந்த திருமணம் பிரச்னையின்றி சுமுகமாக நடைபெறுமா? பெண் வீட்டில் இத்திருமணத்தை ஏற்றுக் கொள்வார்களா? மகனது வாழ்க்கை நன்றாக இருக்குமா? இன்னொன்று, எனது இளைய மகள் ஒருவரை காதலிப்பதாக கூறுகிறாள்.

அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா? அவர்கள் குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? இந்த திருமணத்தினால் குடும்பத்திற்கு ஏதும் பிரச்னை வருமா? மூன்றாவதாக எனது மூத்த மகளுக்கு நன்கு படித்த மாப்பிள்ளையாய் பார்த்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து வைத்தோம். திருமணத்தின்போது என் மருமகன் நல்ல கம்பெனியில் உத்யோகத்தில் இருந்தார்.

இப்பொழுது இந்த வேலையை விடுத்து வீட்டில் சொந்த தொழில் செய்து வருகிறார். நல்ல வருமானம் வரும் என்று நினைத்து இத்தொழிலை ஆரம்பித்தார். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு போதுமான வருமானம் இல்லை. அவருக்கு வெளியில் சென்று உத்யோகம் தேடிக் கொள்ள விருப்பம் இல்லை. போதிய வருமானம் இல்லாமல் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு என் மகள் மிகவும் சிரமப்படுகிறாள். இந்நிலையில் எனது மருமகன் வெளிநாட்டிற்கு சென்று வேலை தேடிக் கொள்ளலாமா?
- செல்வி, தஞ்சை.

உங்கள் குடும்பத்தினர் அனைவரின் ஜாதகத்தையும் பிருகத் ஜாதகம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். உங்கள் மகன் சிம்ம லக்னம், மீன ராசியில் பிறந்திருக்கிறார். லக்னாதிபதி சூரியன் கேதுவுடனும் சந்திரன் ராகுவுடனும் சேர்ந்திருப்பதாலும் லக்னாதிபதியை காட்டிலும் களத்திரகாரகன் சுக்கிரனும் களத்திரஸ்தானாதிபதி சனியும் வலுவடைந்திருப்பதாலும் உங்கள் மகனுக்கு காதல் திருமணமே ஏற்றது. உங்கள் மகன் ஜாதகத்தில் காதல் கிரகங்களான சுக்கிரனும், புதனும் சேர்ந்திருந்து 21.9.2025 வரை புதன்தசை நடைபெறயிருப்பதால் அவர் காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

உங்கள் மகனின் காதலியின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். அந்த பெண்ணின் ஜாதகத்தில் தற்சமயம் ஏழரைச்சனி நடைபெறுவதாலும் நட்சத்திர சந்தியில் அந்த பெண் பிறந்திருப்பதாலும் கன்னிச்செவ்வாயும், மீனச்சனியும் பார்வை யுத்தம் செய்து கொண்டிருக்கும் அமைப்பில் அந்த பெண் பிறந்திருப்பதால்தான் பெண்வீட்டாரின் ஒப்புதலின்மையும், மறுப்பும் காணப்படுகிறது. அந்த பெண் ஜாதகப்படி 23.9.2015லிருந்து இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நிகழும் வாய்ப்புள்ளது. உங்கள் மகனின் வாழ்க்கை நன்றாக இருக்கும். 20.8.2016 முதல் உங்கள் மகன் வாழ்க்கையில் பல திருப்பங்கள் உண்டாகும்.

உங்கள் இளைய மகள் ஜாதகத்தை நவீன ஜோதிட முறையில் ஆராய்ந்தோம். சிம்ம லக்னம், விசாக நட்சத்திரம், நாலாம் பாதம் விருச்சிக ராசியில் உங்கள் மகள் பிறந்திருக்கிறார். கிருஷ்ணபட்ச, சதுர்தசி திதியில் அவர் பிறந்திருப்பதாலும் லக்னத்தில் குரு நிற்பதாலும் லக்னாதிபதி சூரியன் கேந்திர பலம் பெற்று வலுவடைந்திருப்பதாலும் சுக்கிரனும், சனியும் ஆட்சிபெற்றிருப்பதாலும் உங்கள் மகளுக்கு தன்விருப்பக் கல்யாணமான காதல் திருமணமே ஏற்றது.

23.7.2011 முதல் உங்கள் மகளுக்கு புதன்மகாதசை தொடங்கியிருப்பதால் விரும்பியவரையே திருமணம் செய்து வைப்பது சிறப்பாக இருக்கும். உங்கள் மகள் காதலிக்கும் காதலன் ஜாதகத்தையும் ஆராய்ந்தோம். மகர லக்னம், மகர ராசியில் அவர் பிறந்திருக்கிறார். அவரின் ஜாதகத்தில் ஏழுக்குரிய சந்திரன் லக்னாதிபதி சனியுடன் சேர்ந்து நிற்பதாலும் எட்டில் குரு அமர்ந்திருப்பதாலும் காதலியை மணக்கும் யோகம் அவர் ஜாதகத்தில் உள்ளது.

 7.11.2015 முதல் இவருக்கு ராகுமகாதசையில் குருபுக்தி தொடங்கயிருப்பதால் அதன் பின்னர் திருமணம் முடிப்பது நல்லது. இவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டு. குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல முகூர்த்த லக்னத்தில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது அவசியமாகியது. இவரை உங்கள் மகள் திருமணம் முடிப்பதால் உங்கள் குடும்பத்திற்கு எந்த பிரச்னையும் வராது.

உங்கள் மருமகனின் ஜாதகத்தையும், மகள் ஜாதகத்தையும் விரிவாக கணக்கிட்டுப் பார்த்தோம். மீன லக்னம், தனுசு ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனுக்கு 10.9.2017 வரை ராகுதசையில் சனிபுக்தி நடைபெறும். கோச்சாரப்படியும் தற்சமயம் ஏழரைச்சனி நடைபெறுவதாலும் உங்கள் மருமகன் சொந்தத் தொழிலில் லாபம் பெற முடியாது.

உங்கள் மகளின் ஜாதகத்தையும் ஆராயும்போது உங்கள் மருமகனுக்கு முகமதிய நாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டுப் பயணம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ ராமநாதபுர மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஈசனையும், மரகத நடராஜரையும் திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வில்வார்ச்சனை செய்து வணங்கி வாருங்கள்.