கல்லாய் மாறிய கார்த்திகைப் பெண்கள்



பட்டமங்கலம்

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தெறித்த ஆறு பொறிகள், சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாறின. அந்தக் குழந்தைகளை எடுத்து, சீராட்டி, பாராட்டி, பாலூட்டி வளர்த்தார்கள் கார்த்திகைப் பெண்கள் அறுவர்.அந்தப் பெண்களின் பெயர்கள் என்ன தெரியுமா?  அம்பா, துலா, நிதர்த்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி என்பனதான் அவர்களுடைய பெயர்கள்.

 இந்தப் பெண்கள், தங்களுக்கு அஷ்டமாசித்தி உபதேசிக்கப்பட விரும்பினார்கள். உடனே கயிலைக்குச் சென்று கயிலைநாதனிடம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். தங்களுக்கு உபதேசம் அருளும்படி கேட்டுக்கொண்டார்கள்.

அவரோ அவர்களை உமாதேவியிடம் சென்று அந்த சித்தியை அடையுமாறு அறிவுரை சொன்னார். பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த சித்தியை அளிக்கவல்லவர் சிவபெருமான்தானே! உமையன்னைக்கு எந்த அளவுக்கு இப்படி வழங்கத் தகுதி இருக்கும் என்று யோசித்தார்கள். அதனால் அந்த சித் தியைத் தாம் அடைய முடியாது போனாலும் பரவாயில்லை என்று அலட்சியமாக மகாதேவியைப் புறக்கணித்தார்கள்.

அவர்கள் உமா தேவி யைப் புறக்கணித்தது ஒரு புறம், அதற்கும் மேலாகத் தன்னுடைய உத்தரவையும் அவர்கள் புறக்கணித்துவிட்டார்களே என்றும் சினந்தார் சிவன். உடனே அவர்களை கற்பாறைகளாக மாறும்படி சபித்துவிட்டார். உபதேசம் கேட்க வந்து சாபம் பெற்றுவிட்ட வேதனையில் தவித்தார்கள் அந்தப் பெண்கள். சபித்தவர் கோபம் ஆறுமா, மாறுமா, தங்களுக்கு சாப விமோசனம் கிடைக்குமா?

அவர்களைத் தவிக்கவிட பெருமானுக்கு மனசில்லைதான். என்னதான் இருந்தாலும் கார்த்திகேயனை எடுத்து வளர்த்தவர்களில்லையா? ‘நீங்கள் பட்டமங்கலம் தலத்தில் ஆலமரத்தடியில் கற்பாறைகளாக அமருங்கள். ஆயிரம் ஆண்டுகள் கழித்து குரு உருவாய் நான் அங்கே வருவேன். அப்போது சாப நிவர்த்தியும் அஷ்டமா சித்தி உபதேசமும் அருள்வேன்’ என்று ஆறுதலளித்தார்.

அதேபோல அந்தப் பெண்களுக்கு சிவனருள் கிடைக்கப்பெற்ற தலம்தான் பட்டமங்கலம். இங்கே ஈசன் குரு பகவானாக அருள் தரிசனம் தருகிறார். பொதுவாக, எல்லாக் கோயில்களிலும் குரு பகவான் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். இத்தலத்தில் கிழக்கு நோக்கி  அமர்ந்து, இம்மை மறுமை பயனை பக்தர்களுக்கு வழங்கி
வருகிறார். இவ்வாறு ஐயன் கிழக்கு நோக்கி தரிசனம் தருவதை திருவிளையாடல் புராணமும்  குறிப்பிடுகிறது. இந்த குரு பகவானின் காலடியில் பிரம்மாவை அன்னபட்சி வடிவிலும், விஷ்ணுவை வராக அவதாரத்திலும் காணலாம்.

தலவிருட்சமான ஆலமரம், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆலமரத்தடியில் குரு பகவான் சந்நதி அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும்.  இந்த குரு பகவானை 108 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். திருமணத் தடைகளால் தவிக்கும் கன்னியர் இந்த ஆலமரத்தில் மஞ்சள் கயிறு கட்டி, வழிபட தடைகள் நீங்கி, விரைவிலேயே திருமணம் நடைபெறும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இம்மரத்தில் தொட்டில் கட்டினால், மழலைச் செல்வம் கிடைக்கப்பெறுவார்கள்.  குழந்தைகள் நாக்கில் சரஸ்வதி மந்திரத்தை எழுதி, குரு பகவானை 108 முறை வலம் வரச்செய்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. 

இக்கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சந்நதிகளும் உள்ளன. உண்டியலே இல்லாத, அர்ச்சனை, தரிசனம் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம்
இல்லாத வித்தியாசமான கோயில் இது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது இத்தலம்.
 ஆர்.ஜெ.

தேப்பெருமாநல்லூர்

அன்னதான குரு

பாலிலிருந்து தண்ணீரைத் தனியே பிரிக்கும் அன்னப் பறவைக்கு அன்று சோதனை நாள். இல்லாவிட்டால் ஏகாந்தமாக கயிலையில் அமர்ந்திருந்த பரமேஸ்வரனையும் பார்வதியையும் பிரிக்கும் வகையில் அவர்களுக்கு இடையே புகுந்து செல்லுமா?சென்றது. அதனால் வந்தது வினை. தம் தனிமையை, அமைதியைக் குலைத்த அன்னத்தை அந்தக் கணமே சபித்துவிட்டார் ஈஸ்வரன். தன் அழகு குலைந்து, விகாரமான, பெரிய உருவெடுக்கும்படியான அந்த சாபத்தால் தவித்துத் தடுமாறியது அன்னம். ஐயன் மனமிரங்கினார். பூலோகத்தில் தேப்பெருமாநல்லூரில் கோயில் கொண்டிருக்கும் அன்னதான தட்சிணாமூர்த்தியின் அருட்பார்வை அன்னத்தின் மீது விழுந்தால், சாபம் தீரும் என்றார் ஈசன்.

பூலோகத்தில் ஒவ்வொரு தலமாக சுற்றித் திரிந்த அன்னப் பறவை, இறுதியாக தேப்பெருமா நல்லூருக்கு வந்தது. அன்னதான தட்சிணாமூர்த்தியின் பார்வை
பட்டவுடனேயே கீழே விழுந்தது. அதனை கண்ட ஊர் மக்கள், வித்தியாசமான தோற்றத்துடன் இருந்த அன்னப் பறவையைப் பார்த்து அதிசயித்து அருகே நெருங்கினர். அதன் வாயில் சிறிதளவு நீரை ஊற்றினர்.

அப்பொழுதும் அந்த அன்னப் பறவைக்கு சாபம் நிவர்த்தி ஆகவில்லை. அது மட்டுமல்ல, பூலோகத்தில், அந்தப் பறவையின் வருகையால் பஞ்சமும், பசியும் ஏற்பட்டன. நிலைமையின் கடுமையைப் புரிந்து கொண்ட மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற பொருட்களை வைத்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டார்கள். அப்பொழுதும் கஷ்டம் நீங்கவில்லை. உலகமே பசியால் வாடியது. நீர் வற்றிப்போனது. பறவைகள், விலங்கினங்கள் வாடின.

அனைத்து விலங்கு, பறவையினங்களும் அன்னதான தட்சிணாமூர்த்தியை பூஜை செய்தன. ஆனால், பயன்தான் இல்லை. பூமியில் ஏற்பட்ட இந்நிலையைக் கண்டு பரமசிவனே திகைத்தார். நந்திகேஸ்வரரை அனுப்பி வைத்தார். நந்திகேஸ்வரர் பூஜை செய்தும் நிவர்த்தி கிடைக்கவில்லை. உடனே பரமேஸ்வரன் தானே இறங்கி வந்து பூஜை செய்தார். நிவேதனத்துக்கும் வழியில்லாமல் போகவே, தன்னிடம் இருந்த பழைய சாதத்தைநிவேதனப் பிரசாதமாக வைத்து பூஜை செய்தார். பிறகுதான் அன்னதான தட்சிணாமூர்த்தி மனம் குளிர்ந்தார்.

அன்னப் பறவை சாபவிமோசனம் பெற்றது. பசி, பட்டினியை விரட்டி, உலகை செழிக்கச் செய்தார்.அன்னதான தட்சிணாமூர்த்தி நிருதியைப் (வாயு திசையை) பார்த்திருப்பதால் குரு, ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் கருணாமூர்த்தியாகவும் இவர் திகழ்கிறார். இந்த அன்னதான தட்சிணாமூர்த்தியை ராகு காலத்தில் வழிபட்டால் குழந்தைப்பேறு, வெகுநாள் திருமணத் தடை, சர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும். தேவர்கள் இங்கு வாழ்ந்ததால் தேவராஜபுரம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டது. இக்கோயிலின் மூலவர் விஸ்வநாதர்.

அம்பாள், வேதாந்த நாயகி.  இந்தத் தலத்தில் அம்பாளே நான்கு வேதங்களைச் சொன்னதால் இப்பெயர் பெற்றாள்.ஒருமுறை, சிவபெருமானை, தன்னுடைய நியதிப்படி ஏழரை நாழிகை தான் பற்றவேண்டும் என்று கயிலைக்கு வந்தார் சனி பகவான். அவரைக் கண்ட ஈஸ்வரன், விஸ்வநாத சுவாமியாக பூலோகத்தில், இத்தலத்தில் அரச மரத்தடியில் மறைந்திருந்தார். வேதாந்த நாயகியே சுவாமிக்குக் காவல் இருந்தாள்.

அப்பொழுது அங்கே வந்த சனி பகவான் ஏழரை நாழிகை அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தார். தன்னை சனியால் பிடிக்க முடியவில்லை என்று வெற்றிப் புன்னகையுடன் தெரிவித்தார் ஈசன். ஆனால், தனக்கு பயந்து ஏழரை நாழிகை அவர் அரச மரத்தில் மறைந்திருந்தாரே, அதுவே நான் அவரைப் பிடித்ததுபோலதான் என்று அகங்காரமாக பதிலளித்தார் சனி. உடனே மஹா மந்திர பைரவராக அவதாரம் எடுத்து, சனியின் ஆணவத்தை அடக்கினார் ஈசன்.

விக்ரகங்களின் அமைப்பு இக்கோயிலில் வித்தியாசமாக இருக்கிறது. மகாசண்டிகேஸ்வரர், வழக்கமான தெற்கு திசை நோக்  காமல், கிழக்கு பார்த்தபடி காட்சியளிக்கிறார்.  துர்க்கை ஈசான மூலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அஷ்டபுஜ துர்க்கை, வாயு மூலையை நோக்கியபடி இருக்கிறாள். பொதுவாக நவகிரகங்கள் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இங்கோ, அனைத்து கிரகங்களும் சூரியனை பார்த்திருக்கின்றன. விநாயகர் கபாலத்தை இடுப்பில் அணிந்துள்ளது தனிச் சிறப்பாகும்.

சுவாமி, அம்பாள் மற்றும் நவக்கிரகங்களுக்கு நல்லெண்ணெய், பால், தயிர் அபிஷேகம் செய்தால் சனி தோஷம் நீங்குவதுடன் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மஹா மந்திர பைரவருக்கு அபிஷேகம் செய்வோருக்கு எம பயம் நீங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் உண்டாகுமாம். இத்தலத்தில் ஈசனுக்கு ருத்திராட்ச அபிஷேகம் செய்வது சிறப்பான வழிபாடாகக் கருதப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து அம்மாசத்திரம் வழியாக தேப்பெருமாநல்லூருக்கு செல்லலாம்.

 வி.எஸ்.ராஜ்

புன்னைநல்லூர்

பார்வை நலம் தரும் மாரியம்மன்

திக் விஜயம் செய்வது பேரரசர்களின் வழக்கம். திருத்தல யாத்திரையை மேற்கொள்வதும் சில அரசர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த வகையில் தஞ்சை
மன்னர் வெங்கோஜி மகாராஜா 1680ம் ஆண்டுவாக்கில் திருத்தலங்களுக்குப் பயணம் செய்து வந்தார். திருச்சி அருகே வந்த அவர், சமயபுரத்தில் தங்கி அன்னையை வழிபட்டார். முற்றிலும் அம்மன் நினைவாகவே இருந்தார் மன்னர்.

அதனாலோ என்னவோ அன்றிரவு அவருடைய கனவில் அம்மன் தோன்றினாள். அது வெறும் கனவு தரிசனம் மட்டுமல்ல, தகவல் அறிவிப்பும்கூட! ஆமாம், தஞ்சைக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் தான் அருள்பாலிப்பதாகவும், அங்கு வந்து தன்னை வணங்கும்படியும் அன்னை அருளாணை மொழிந்தாள். மன்னனும் தஞ்சைக்கு வந்து, புன்னைவனக் காட்டில் எழுந்தருளியிருந்த புற்று அம்மனைத் தேடிக் கண்டுபிடித்தார். கண்களில் நீர் பனிக்க உளமாற வணங்கினார். கனவில் தான் கண்ட அன்னை புற்றுருவாக, இயற்கை சீற்றத்தாலும், விலங்கினங்களின் தாக்குதலாலும் சீர்குலையும் நிலைமையில் இருந்ததைக் கண்டு மனம் கசிந்தார். உடனே சிறிய கூரை அமைத்து, புற்றினைக் காத்தார்.

அந்தத் தலத்திற்கு புன்னைநல்லூர் என்றும் பெயரிட்டார். இவருக்குப் பிறகு, 1728ல் தஞ்சையின் ஆட்சிப் பொறுப்பு, துளஜா மன்னனுக்கு வந்தது. முந்தையவரின் பக்தியால் ஒரு குடிலுக்குள் கோயில் கொண்ட அம்பிகை, பெருங்கோயில் ஒன்று தனக்காக உருவாக வேண்டும் என்று எண்ணம் கொண்டாள் போலிருக்கிறது. மன்னனின் மகளுக்கு அம்மை நோய் உண்டாகி அதனால் அவளுடைய பார்வை மங்கியது.

அரச மருத்துவம் பார்த்தும் குணம் தெரியவில்லை. அப்போது அரசரின் கனவில் ஒரு சிறுமியாய் காட்சி தந்தாள் அம்மன்.  ‘உன் புதல்வியுடன் என் சந்நதிக்கு வா’ என்று அழைத்தாள். உடனே அரசர் தெளிவு பெற்றார். தன் மகளுடன் ஆலயத்திற்கு வந்து அம்மனை வணங்கினார். பக்தியால் அவர் கண்களில் கண்ணீர் பெருக, அருகிலிருந்த மகளுடைய கண்களுக்குக் காட்சிகள் புலப்பட ஆரம்பித்தன. அரசர் பேருவகைக் கொண்டார்.

அம்மனின் கருணையால், அருளால் ஆட்கொள்ளப்பட்ட அவர், அம்பிகைக்குப் பெரிய அளவில் ஆலயத்தை கட்டினார். புற்று உருவில் இருந்த அன்னைக்கு சிலை உருவம் கொடுக்க விரும்பினார் மன்னர். அதற்காக, ஞானி சதாசிவ பிரம்மேந்திரரின் உதவியை நாடினார். அவர் அம்மனுக்கு வடிவம் அமைத்து, சக்கர பிரதிஷ்டையும் செய்தார். தஞ்சையைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் உள்ள அஷ்ட சக்தி காவல் தெய்வங்களின் ஆலயங்களில் ஒன்று புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயம்.
மூலஸ்தான அம்மன் புற்று மண்ணால் ஆனதால், அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, விஷ்ணு துர்க்கைக்கும், உற்சவ அம்மனுக்கும் தினமும் அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறுகின்றன.

மூலஸ்தான மாரியம்மனுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தைலக் காப்பு செய்விக்கிறார்கள். அப்போது அம்மனை ஒரு வெள்ளைத்திரையில் வரைந்து, ஆவாகனம் செய்து, அதற்கு அர்ச்சனை, ஆராதனை நடைபெறும். தைலக் காப்பு ஒரு மண்டலம் அதாவது, 48 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும், இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும். இந்த நேரத்தில் அம்மனுக்கு உக்ரம் அதிகமாகும்.

அதனை தவிர்க்க தயிர், இளநீர் வைத்து நைவேத்தியம் செய்கிறார்கள். அம்மன் சந்நதியை சுற்றியுள்ள உள்தொட்டி மற்றும் வெளித்தொட்டி இரண்டிலும் நீர் நிரப்பி, உஷ்ணத்தை தணிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் உற்சவ அம்மனுக்கு முகத்தில் முத்து முத்தாய் வியர்வை துளிர்த்து, பிறகு தானாகவே மறைந்துவிடும் அதிசயத்தை இன்றும் காணலாம். இதனால் அம்மனை பக்தர்கள் முத்துமாரியம்மன் என்றும் அழைக்கிறார்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அம்மை வார்த்திருந்தால், அம்மனிடம் ஒரு வேண்டுதல் செய்துகொள்கிறார்கள். அதாவது, சந்நதியை சுற்றியுள்ள இரண்டு தொட்டிகளிலும் நீர் நிரப்பி அம்மனை குளிர்விப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். அம்மை வார்த்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி, உடனே குணமடைகிறார்கள். அது இங்கு கண்கூடாய் காணப்படும் அனுபவம்.

 அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து தங்கிச்செல்வதற்காகவென்றே அம்மை மண்டபம் என்று ஒன்று உள்ளது. இங்கு தங்கி, தினசரி அம்மனின் அபிஷேக நீரை மேல் தெளித்துக்கொண்டு, குணமடைந்த பிறகு, சந்நதியின் உள்ளே வந்து அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். கோயிலின் உட்புறத்தில் வெல்லக்குளம் ஒன்று உள்ளது. உடம்பில் கட்டி மற்றும் பரு ஏற்படுபவர்கள், அம்பாளை வேண்டிக்கொண்டு வெல்லம் வாங்கி இந்தக் குளத்தில் கரைப்பார்கள். வெல்லம் தண்ணீரில் கரைவது போல் வாழ்வில் ஏற்படுகின்ற துன்பம், உடலில் தோன்றும் பரு, கட்டி போன்றவைகளும் கரைந்து விடும் என்பது ஐதீகம்.

இங்கு எழுந்தருளியுள்ள பேச்சியம்மனை, சரஸ்வதியின் மறு உருவாகவே பக்தர்கள் வழிபடுகிறார்கள். பேச்சு வராத குழந்தைகளை இங்கு அழைத்து வந்து பேச்சியம்
மனுக்கு காசால் அபிஷேகம் செய்து, நெல்மணியைக் கொண்டு குழந்தையின் நாக்கில் எழுதுகிறார்கள். அதோடு குழந்தையில்லாத தம்பதிகள் இங்கு வந்து வேண்டிச்சென்று, குழந்தை  பிறந்த பிறகு, மீண்டும் கோயிலுக்கு வந்து பேச்சியம்மன் சந்நதியில் மாவிளக்கு ஏற்றுகிறார்கள். அசைவ உணவுகளை வைத்து படையல் இட்டுச் செல்கிறார்கள். மாரியம்மனை வேண்டிக் கொண்டு, வெள்ளி, தங்கம் அல்லது பிற உலோகத்தால் ஆன கண் மற்றும் உடல் உறுப்புகளை
உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

இங்கு ஆடி மாதம் முத்துப் பல்லக்கும், ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை  தேரோட்டமும், புரட்டாசி மாதம் உற்சவம் மற்றும் நவராத்திரி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அதோடு கோடைக்காலத்தில் மாரியம்மனை மனதில் நினைத்து தஞ்சை மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்துக்கொண்டு அம்மன் சந்நதிக்கு வருகிறார்கள்.

மாரியம்மன் தனக்குச் செய்யப் படும் பலவகை அபிஷேகங்களால் மகிழ்ந்து பக்தர்களுடைய துயரைத் துடைக்கிறாள் என்கிறார்கள். புன்னைநல்லூர் மாரியம்மன், தன் புன்னகையால், தன்னை நாடி வரும் பக்தர்களின் மனதிலும், முகத்திலும் என்றென்றும் புன்னகையைத் தவழ விடுகிறாள். 

  ஆர்.வி.

சன்னாபுரம்

கிளியாகத் தோன்றிய காளி

ராஜராஜன், சோழ தேசத்தின் திரும்பிய பக்கமெல்லாம் விண்முட்டும் கோயில்கள் எழுப்பினான். புராண விஷயங்களை கற்சிலைகளாக வடித்தான். மக்களை
மதத்தோடு இறுக்கப் பிணைத்தான். அவர்களின் பாதங்களை மதம் சொல்லும் தர்மத்தின் திசை நோக்கி திருப்பினான். சூரிய-சந்திரர்கள் உள்ளவரை எல்லோர் நெஞ்சிலும் நீங்காது நிறைந்தான். ராஜராஜன் ஒவ்வொரு பகுதிக்கும் இரவு நேரத்தில் மாறு வேடத்தில் செல்வது வழக்கம். தன் தேசத்து மக்கள் தன்னிடம் சொல்ல முடியாத பிரச்னைகள் ஏதேனும் உள்ளதா என கூர்ந்து கவனிப்பான் அவன்.

குடந்தை எனும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், ஆடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் நகர்வலம் செல்லும்போது இந்த மூன்று ஊர்களின் மையமாகவும், மன்னனின் குலதெய்வமாகவும் விளங்கிய வடபத்ரகாளியம்மன் அருவமாக மன்னனுக்கு வழிகாட்டியாக முன்னே செல்வாள். அவனும் காளியின் இருப்பை பலமுறை உணர்ந்து களிப்புற்று, கண்மூடி நினைத்து நெஞ்சு குளிர்ந்து வணங்கியிருக்கிறான். சில சமயம் காளியும் தன் நிஜ சொரூபம் மறைத்து கிளி உருவத்திலேயே அவன் முன்னே பறந்து செல்வாள். அதன் வழியாய் பேரரசனும் நடந்து செல்வான். கிளி காளியாகக் காட்சி தராதா என்று ஏங்குவான்.     

ஒருநாள் இரவில் மரத்தின் அருகே கண்மூடி அமர்ந்த அவன்முன் சட்டென்று அந்தக் கிளி தோன்றியது. ராஜராஜன் பிரமித்தான். அந்தக் கிளி மெல்ல பேசத் தொடங்கியது! ‘‘நான் உரல், உலக்கை சத்தம் ஒலிக்காத ஊரில், எந்த திசையிலும் எதிரொலிக்காத சன்னாபுரவனத்தில் குடிகொண்டுள்ளேன். எப்பணியைத் தொடங்கினாலும் எம்மை வந்து தொழுது தொடங்கு. தடைகள் அகன்று வெற்றி காண்பாய்” என்று சொன்னது. பிறகு மெல்லப் பறந்து சென்றது.

காளியம்மன் திருவாய் மலர்ந்து பகர்ந்ததை அருள்வாக்காய் ஏற்றுக்கொண்ட மாமன்னன் மறுதினமே தன் குழுவோடு சன்னாபுரவனம் நோக்கி நடந்தான். வனத்தின் மையத்தில் கம்பீரமாய் அமர்ந்திருந்த காளியைக் கண்டு பிரமித்தான். அவளின் அந்த உக்கிர உருவத்தின் செஞ்சிவப்பில் தானும் ஒளிர்ந்தான். கண்களின் கனலில் தெறித்த சிவப்பில் செம்மையானான். அகமும் புறமும் அவளின் அருளில் நனைந்து வஜ்ரமாய் மாறினான். அவளின் திருவடிகளில் தன் சிரசைப் பதித்து பரவசமாய் கிடந்தான். மெல்ல எழுந்து தன் அரண்மனை நோக்கி நடந்தான்.

ராஜராஜ சோழன் தான் பழையாறையில் இருந்த காலம் வரை வடபத்ரகாளியம்மனை தரிசிக்காது எந்த செயலையும் தொடங்கியதில்லை. அவளின் ஆணையில்லாது சிறு அசைவும் செய்ததில்லை. எந்தப் போராயினும் அவளின் நிலம் தொழுது, அவள் நிழல் பதிந்த மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டு, பிறகுதான் யுத்தகளம் நோக்கி நடப்பான். வெற்றிகள் பல குவித்து பார் முழுதும் சோழப் பெருமையை நிலை நாட்டினான்.

மாமன்னன் தரிசித்த அந்த வடபத்ரகாளி, சன்னாபுரத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள். அம்மனின் எதிரே ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஆல
மரம் ஒன்று விழுதுகள் பரப்பி வானுயரமாய் நிற்கிறது. அது, காளி ஒரு பெரிய குடையின் கீழ் அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. காளியின் ஆட்சியால் இனம் புரியாத ஓர் அமைதி அந்த வனம் முழுதும் பரவிக்கிடக்கிறது. அவளின் எல்லைக்குள் வருவோரை மெல்ல சூழ்ந்து கொள்கிறது.

கோயில் முகப்பிலுள்ள அசுரனை வதம் செய்யும் காளியின் சுதை சிற்பம் பார்ப்போரை பரவசப்படுத்தும். மெல்ல கோயிலின் கருவறைக்குச் சென்று வடபத்ரகாளியைப் பார்க்க, அத்தோற்றம் நம்மை மிரள வைக்கிறது. அச்சந்நதியை  பெருஞ்சக்தியின் அதிர்வுகள் சுழன்றபடி உள்ளது. நம் கண்கள் வடபத்ரகாளியை விட்டு விலகாது ஒன்றிக் கிடக்கும் அற்புதச் சந்நதி அது. பார்க்கப் பார்க்க சிலிர்ப்பூட்டும் பேருருவம் உடையவள் அவள்.

நாக்கை வெளியே துருத்திக் கொண்டும், நாற்புறங்களிலும் பரவிய பதினாறு கரங்களில் ஆயுதங்களோடும், தம் காலடியில் வீழ்ந்து கிடக்கும் அசுரனை சூலம் கொண்டு வதம் செய்யும் காளியின் முகத்தில் கருணை பொங்கி வழிகிறது. நாக்கை நீட்டி பெருஞ் சிரிப்பாய் இருக்கும் காளியின் உதட்டோரம் மறைந்திருக்கும் மெல்லிய புன்னகையைப் பார்க்க உள்ளம் உவகை கொள்ளும்.

கோயிலை வலம்வரும்போது இடது ஓரத்தில் இன்னொரு வடபத்ரகாளி காட்சி தருகிறாள். ஒரு காலத்தில் இரு சிலைகளும் ஒரே இடத்தில் இருந்ததாகச் சொல்
கின்றனர். பிறகு எப்போது தனியே அமர்ந்தனர் என்று சொல்ல இயலவில்லை. ஆனால், மூலவரைப்போலவே சாயல் கொண்ட அற்புதக் காளியான இவளுக்கு வடபத்ரகாளி என்பதுதான் பெயர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட காளியின் சிலை அது. அதற்கும் தனியே பூஜைகள் நடைபெறுகிறது.

எந்தவிதமான தீய சக்திகளும் இங்கு நெருங்கமுடியாது. இவளை நினைத்து தொடங்கும் எந்தக் காரியமும் வெற்றியாகவே முடியும். சுற்றியுள்ள எண்ணற்ற கிராமங் களுக்கு இவளே தாய். மிகச் சிறந்த வழிகாட்டி. பல நூறு குடும்பங்களுக்கு  குலதெய்வமாக விளங்குகிறாள். அவர்கள் குடும்ப பாரத்தை இவள் பாதத்தில் இறக்கிவைத்து நிம்மதியாய் இல்லம் நோக்கி திரும்புகின்றனர்.

எத்தனை சோதனைகள் வந்தாலும் இவள் முன்பு கைகூப்பி வேண்ட, அத்தனையையும் சிதறடித்து விடும் வல்லமை உடையவள் இந்த வடபத்ரகாளி. இந்தக்காளி இருவித தோற்றத்தோடு ஒரே கோயிலில் தனித்தனி சந்நதிகளில் அமர்ந்திருப்பது மிக அரிதான விஷயம். அங்கிருக்கும் ஆலமரத்தின் கீழே வாராஹி அம்மன் வீற்றிருக்கிறாள். சிறிய கோயில்தான், ஆனால், சக்தி மிகுந்த கோயில்.

தாமதமாகும் திருமணம், குழந்தைப் பேறு போன்றவற்றிற்காக வடபத்ரகாளியம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மாவிளக்கு போட்டு, எலுமிச்சம்பழ மாலை சாத்தி, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுகிறார்கள். கூடிய விரைவில் திருமணமும் முடிந்து, குழந்தைச் செல்வம் பெற்று காளியன்னையின் முன்பு நன்றியால் கண்ணீர் சொரிந்து நிற்பது இங்கு சகஜமானது. அது தவிர பல்வேறு விஷயங்களுக்காகவும் வேண்டிக்கொண்டு வருகிறார்கள். குறைகள் தீர்ந்து நிம்மதியோடு திரும்புகிறார்கள்.

இக்கோயில் நாள்தோறும் பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை மட்டும் பகல் 1 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறு கின்றன. ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் கோயிலே திருவிழா கோலம் காணும். கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது சன்னாபுரம். கும்பகோணத்திலிருந்து மினி பேருந்துகளும், திருநாகேஸ்வரத்திலிருந்து ஆட்டோ வசதிகளும் உள்ளன.உங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் இந்த சன்னாபுரக் காளியை தரிசித்திடுங்கள். வற்றாத வளங்கள் பெற்றிடுங்கள்.

 - கோதண்டபாணி