மகிமை மிக்க மார்கழி மாதம்



மார்கழி மாதத்திற்கு ‘தனுர்’ மாதம் என்ற பெயரும் உண்டு. இந்த மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது. மார்கழி மாதத்தில்தான் சிதம்பரம் நடராஜப் பெருமான் ஐந்தொழில்களையும் புரிகிறார். இந்த மாதத்தில் அங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பு பெற்றவை.

சபரிமலை ஐயப்பன் அவதரித்ததும் மார்கழி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்றுதான். திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்ததும் மார்கழி மாதம்தான். மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல்காலம் என்பதால் மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடுகளில் ஈடுபடுவது சிறப்பு.

சொர்க்க வாசல் திறப்பது ஏன்?

வைகுண்ட ஏகாதசி அன்று எல்லா பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்படும். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ரங்கத்தில் இந்த வைபவம் இன்னும் சிறப்பு பெற்றது. மகா விஷ்ணுவின் அருள்பெற்ற ‘மதுகைடபர்கள்’ என்ற அரக்கர் இருவர் தாங்கள் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பினார்கள்.

தங்களது இந்த விருப்பத்தை மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். சுவாமி வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சா வதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்பவர்களும் எத்தகைய பாவங்கள் செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டனர். அவர்களின் வேண்டுதலை மகாவிஷ்ணு ஏற்றார்.

அதனாலேயே வைகுண்ட ஏகாதசி அன்று சொக்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் எழுந்தருளச் செய்யப்படுகிறார். அவரை பின் தொடர்ந்து வரும் பக்தர்கள் ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என்று பக்தி சரண கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

- எஸ். அமிர்தலிங்கம்