பிரசாதங்கள்



ஆஞ்சநேயர் மிளகு வடை

தேவையான பொருட்கள்:

உடைத்த கறுப்பு உளுந்து - 1 / 2 கப்
பச்சரிசி - 2 தேக்கரண்டி
மிளகு - 1 / 2 தேக்கரண்டி
உப்பு - 1 / 2 தேக்கரண்டி
சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
நெய் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி
வடை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

 செய்முறை:
அரிசி மற்றும் உளுந்தை அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
உளுந்தை வடிகட்டிக்கொள்ளவும்.  மிக்ஸியில் அரிசி மிளகு சீரகம் உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் வடிகட்டிய உளுந்து சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும். நெய் / வெண்ணெய் சேர்த்து கலந்து பாலிதீன் கவரில் சிறுசிறு
வடைகளாக தட்டவும் .  எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்  

மிளகு சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணைய் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு.

செய்முறை:
அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும். அதே கடாயில் தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுக்கவும். சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்தெடுக்கவும். மிளகை நெய்யில் வறுத்து சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

இன்னொரு கடாயில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

 சர்க்கரைப் பொங்கல்
 
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய்த் துருவல் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
காய்ந்த திராட்சை - 10
ஏலக்காய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி
 நெய் - 4 மேஜைக்கரண்டி                           

செய்முறை :
    பச்சரிசியை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சையையும் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.                                              
ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதித்து வெல்லம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு வெல்ல பாகை வடிகட்டிக் கொள்ளவும்.     
                                             
குக்கரில் வேகவைத்த சாதத்துடன் வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறி விட்டு அடுப்பை ஆன் செய்து சிம்மில் வைக்கவும். பின்னர் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சையைப் போட்டு கிளறி மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலைப் போட்டு நன்கு கிளறி கெட்டியாக ஆனதும் இறக்கி விடவும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.

படங்கள்:ஆர்.சந்திரசேகர்

காய்கறி சாதம்

தேவையான பொருட்கள்:
    
பச்சரிசி - 1 / 2 கப்
துவரம்பருப்பு - 1 / 4 கப்
விருப்பமான காய்கள் நறுக்கியது - 1 / 4 கப்
புளி - பாதி நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 / 2 தேக்கரண்டி
காரப்பொடி/சாம்பார் பொடி - 1 / 2 தேக்கரண்டி
தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
கருவேப்பிலை கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2  தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 1
 
செய்முறை:
அரிசி பருப்பை களைந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் கொதிக்கவிடவும். களைந்து வைத்த அரிசி பருப்பு சேர்த்து கிளறவும் . பாதி வெந்ததும் காய்கள் சேர்க்கலாம்முக்கால் வெந்ததும் புளியை கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி காரப்பொடி /சாம்பார் பொடி தனியா பொடி சேர்க்கவும் கெட்டியான பதம் வந்ததும் நெய் விட்டு மிளகாய் வத்தல் கிள்ளி போட்டு கருவேப்பிலை கொத்தமல்லி இலை தூவினால் அருமையான  காய்கறி சாதம் பிரசாதம் தயார்.

ஹேமலதா உமாராஜ்