திருப்பங்கள் தரும் திருப்பூந்துருத்தி




Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine

                         ஆளுடைப்பிள்ளை எனும் திருஞான சம்பந்தர் அடியார் குழாமுடன் வைகைக் கரையோரம் சைவத்தை செழிக்கச் செய்ய ஆவல் கொண்டார். சமணர்கள் சரி பாதியாய் சைவர்களை மாற்றிவிட்டனரே எனக் கவலை கொண்டார். மதுரைச் சாக்கியர்கள் செருக்கோடு ஞானக் குழந்தையிடம் வாதிட, குழந்தை பெரிய பண்டிதனாக தன் எதிர்வாதத்தை முன்வைக்க, வாதத்தின் வெம்மை தாங்காத சமணக் கூட்டம் சிவநெறிச் செல்வரின் திருப்பாதத்தில் வீழ்ந்து வணங்கியது. சொக்கனின் பேரருள் மக்களின் மனத்தில் மணம் பரப்பியது.  ஞான சம்பந்தர் சைவம் மேலும் தழைக்க தஞ்சை நோக்கி நகர்ந்தார்.

ஞானக் குழந்தை சம்பந்தர் அந்த அழகான முத்துச்சிவிகையில் அமர ஞான சூரியனின் ஒளியால் அது  இன்னும் வெண்மையாக ஒளிர்ந்தது. திருநெல்வாயில் அரத்துறைநாதர் அருளிய சிவிகையை சீரடியார்கள் குழாம் போட்டியிட்டுக் கொண்டு சுமந்தது. சம்பந்தரைச் சுமந்ததால் அவர்கள் வல்வினைச் சுமைகள் குறைந்தன. சீரடியார் கூட்டம் பிள்ளையின் பதிகத்தை பாட தென்றலாக ஈசனருள் எல்லோரையும் அணைத்தது. ஞானத் தபோதனரான நாவுக்கரசரை எப்போது தரிசிப்பேன் என எண்ணம் பூத்துக் கிளர்ந்தது. ‘சிவிகையை பூந்துருத்திக்கு திருப்புங்கள்’ என்றார். எல்லோருக்குள்ளும் ஞானப்பூ மொட்டுவிட்டு மலர, பூந்துருத்தியை நோக்கி அடியார் வண்டுக் கூட்டம் தெள்ளமுதம் பருகப் பறந்தது.

அப்பரடிகளோ கயிலை மகாதேவனைக் காண வேண்டி, நோய் உற்று உருண்டும், புரண்டும், ஊர்ந்தும் உணர்வற்றுப் போனார். இறையருள் ஐயாறப்பரிடம் சேர்க்க திருவையாற்றுத் தடாகத்தில் மூழ்கி எழ, ஐயாறப்பர் கயிலையை கண்ணுக்குள் நிறுத்தினார். கண்ணாரக் கண்டவர் திருவையாறுக்கு அருகே புஷ்பவனநாதர் எனும் நாமத்தோடு திகழும் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளினார். ஞாயிறும், திங்களும் தோயும் திருமடம் அமைத்து மதி தவழும் சோலையமைத்தும் உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார். சிவக் கொழுந்தான சம்பந்தர் பெருஞ் ஜோதியாக வளர்வது அறிந்த அப்பரின் உள்ளம் கிளர்ந்தது. பிள்ளையின் மேதமையும், ஞான விலாசத்தை செவியுற்றிருந்த நாவுக்கரசர் சம்பந்தரையே சிந்திக்கலானார். சிவமும், சம்பந்தமும் ஒன்றல்லவா என்று பார்ப்போரிடத்திலெல்லாம் கண்களில் ஆனந்தம் பொங்கக் கூறலானார். ஆளுடையாரின் அடிபரவி அள்ளி அணைத்து சிரசில் சூடுவது எந்நாளோ என நெக்குருகிப் பேசி கண்மூட, சட்டென்று வெண்ணீற்றின் மணம் அவ்விடத்தைச் சூழ்ந்தது.

சிஷ்யர் ஒருவர் மூச்சிறைக்க ஓடிவந்து ‘அடியார்களோடு சம்பந்தப் பெருமான் பூந்துருத்தியைக் காண வருகிறார்’ என்றார். நாவுக்கரசரின் அகம் இன்னும் குழைந்துக் குளிர்ந்தது. ‘ஞானக் குழந்தை தவழ்ந்து வருவதற்குள் நாம் சென்று எதிர் கொள்வோம் வாருங்கள்’ என்றார்.

வெகுதொலைவில் முத்துச் சிவிகை அசைவதும், மணிகளின் ஓசை காற்றினில் கசிந்து வருவதையும் கண்ட பூந்துருத்தி சிவனடியார்கள் சிலிர்த்துப் போனார்கள். இன்னும் விரைவாக நடந்து அருகேயுள்ள வெள்ளாம்பிரம்பூருக்குச் சென்றார். சம்பந்தரும் அவ்வூர் ஈசனை வணங்கிவிட்டு ஊர் எல்லையைத் தொட, எதிரே அப்பரடிகளின் அடியார்கள் இரு கைகளையும் சிரசுக்கு மேலே உயர்த்தி ‘மகாதேவா... மகாதேவா’ என்று அரற்றினார்கள். சம்பந்த மூர்த்திகள் சிவிகையின் சீலையை உயர்த்தி முகம் மலரச் சிரித்தார். கூட்டத்தின் அகம் நிறைந்தது. தன்னை மறந்து சிவிகையை நோக்கி நடந்த கூட்டம் நாவுக்கரசரை மறந்தே போனது. அப்பரடிகளும் இதுதான் சமயமென்று கருதி அடியார்களுக்குள் சிறியோராய் தம்மை மாற்றிக் கொண்டார்.

சிவிகையை சுமக்கும் ஒருவரின் தோள் தொட்டு மெல்ல விலக்கினார். தாழ்வாய் இருக்கும் இவ்வுடம்பு பெரியோனாய் விளங்கும் குழந்தை எழுந்தருளும் சிவிகையை எப்படிச் சுமக்கும் எனக் கவலையுற்றவராய் தடுமாற்றத்தோடு பல்லக்கினடியில் வந்து சேர்ந்தார். அடியார்கள் சுற்றிலும் சூழ தம்முகம் வெளியே தெரியாதவராக திருநெல்வாயில் நாயகனை மனதில் நினைந்து சிவிகையை தம் தோளில் ஏற்றார். திருநாவுக்கரசரின் திருவுள்ளம் களிப்புற்றது. கண்களில் கங்கையாக நீர் பொங்கி வழிய அவர் அகத்தில் தில்லைக்கூத்தன் ஆனந்தத் தாண்டவம் செய்தார். கூடியிருந்தோர் ஈசனின் உருவை உள்ளத்தில் இருத்தி, நாதனின் நாமச்சாரலில் நனைந்தபடியே நடந்தனர். 

திருவாலம்பொழில் நெருங்கியதும் ஞானக் குழந்தை சீலையை விலக்கி வெளியே பார்த்தது. அப்பர் சுவாமிகளின் நினைவு மனதில் எழ, தன் அமுத வாயைத் திறந்து ‘அப்பர் எங்குற்றார்’ என அருகிலிருப்போரிடம் வினவினார். எம்பெருமானே இவ்வடியேனை விசாரிக்கிறாரே என்றெண்ணி உருக்கமுற்று தம் சிரசை சற்றே வெளியே நீட்டி அண்ணாந்து அண்ணாரை பார்த்து ‘‘தேவரீருடைய அடியேனாகிய யான் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு பெற்று இங்குற்றேன்’’ எனச் சொல்லி முடிக்கும் முன்பு, சீர்காழி தந்த சீர்பிள்ளை சம்பந்தர் சட்டென்று  மண்ணில் இறங்கினார். திருவதிகைத் தேவர் வீரட்டானர் ஆட்கொண்ட சிங்கமல்லவா இவர். எம்மைச் சுமந்து தான் பாக்கியமுற்றதாக கூறிக் கொள்ளும் இவர் திருவடியை தாம் ஏந்திக்கொள்ளுதலல்லவா முறை என பதைபதைத்தார்.

 தலை தாழ்த்தி நாவரசரை நோக்கி ஓடினார். அதற்குள் அப்பரடிகள் சம்பந்த மூர்த்திகள் பணியும் முன்பே மான்குட்டியைப்போல் துள்ளி ஆளுடைப் பிள்ளையின் அடிபரவினார். திருத்தொண்டர் கூட்டம் கைகளிரண்டையும் மேலுயர்த்தி இதென்ன திருக்காட்சி என வியந்து இவ்விரு அடியார்களையும் பூமியில் வீழ்ந்து வணங்கியது. வெண்ணீற்று நாயகர்கள் மலர்ந்த தாமரையாக நின்றருள, எண்புறமும் விரிந்த இதழ்களாக சீரடியார்கள் தண்டனிட ஒருகணம் ஆலம்பொழில், கயிலாயபுரியாக மாறியது.

திருவாலம்பொழில் ஈசனைப் பாடி திருப்பூந்துருத்தியை வந்தடைந்தனர். அய்யன் அப்பரடிகள் உழவாரத் தொண்டு செய்து சிவந்திருந்த அத்தலத்தை தம் காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர், கோயில் கோபுரத்தின் புறத்தே நின்று வழிபடலானார். திருநந்தியார் ஈசனை மறைத்தருளுவதால், விலக்கியருள விநயமாக ஞானப் பிள்ளை காண வேண்டினார், அப்பர். ஆச்சரியமாக நந்திதேவர் நகர, புஷ்பவனேஸ்வரர் காட்சி தர, பேரொளியொன்று பூந்துருத்தியை அடைத்து நின்றது. சம்பந்தப் பெருமான் அப்பரடிகளின் திருமடத்திற்கு எழுந்தருளினார். அவர் அன்பாற் பொங்கிய இன்னமுதத்தை இட்டு சம்பந்தக் குழந்தையின் வயிறு நிறைந்ததா என உறுதி கொண்டார். சில நாட்கள் அங்கேயே தங்கி ஈசனின் மகாத்மியத்தை பகிர்ந்து கொள்ளலானார்.

ஞான சம்பந்தரும் பாண்டியத்தில் சைவம் வளர்ந்து விபூதியின் மணம் பெருகி மாந்தர் தம் திருமேனிகளில் பூசிப் பூரிப்படைவதைத் தெரிவிக்க, அப்பர் குழந்தையாக குதூகலித்தார். பாண்டிய மன்னனின் முதுகுக் கூன் நிமிர்ந்ததைக் கூற, வாகீசர் வியப்படைந்தார். குணவதி பட்டமகிஷி மங்கையர்க்கரசியாரின் சிவபக்தியை மெச்சிப்பேசி, குலச்சிறைநாயனாரின் பெருமையைக் கூற நாவரசர் மட்டிலாது மகிழ்ச்சியடைந்தார். ஈரடியார்களும் புஷ்பவனநாதரை முக்காலமும் வணங்கினர். பிறிதொரு நாளில் பூந்துருத்தி விட்டு வேறொரு தலம் நோக்கி தாம் அழைக்கப்படுவதை அப்பரடிகளிடம் கூற அப்பர் சம்பந்தருடன் பூந்துருத்தியின் எல்லைவரை சென்று கண்களில் நீர் மல்க விடை கொடுத்தார். வையம் முழுதும் ஞானம் வளர்க்கச் செல்லும் குழந்தையையும், அவரைத் தாங்கும் சிவிகையும் வெகுதூரம் நகர்ந்து புள்ளியாக மறையும் வரை பார்த்திருந்துவிட்டு திருமடம் நோக்கி நடந்தார் திருநாவுக்கரசர்.

இத்தலத்தில் நிகழ்ந்த மாபெரும் நெகிழ்ச்சிக்குரிய விஷயம் இது. அதனாலேயே தமிழகத்தில் திருப்பூந்துருத்தி உபசாரம் என்ற பழமொழியை உதாரணம் காட்டிப் பேசுவர்.

அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, வேறு சில பகுதிகள் கடல் போல் தேக்கமடைந்தன. இந்திரன் திருவையாறு ஐயாறப்பரை வணங்கி வேண்ட, காவிரி திரும்பினாள். நிலம் வெளீரென்று வெளியே தெரிந்தது. தெள்ளத் தெளிவாய் ஆற்று மண்ணும், வண்டலும் பூபோல மென்மையாக படிந்ததாக காணப்பட்ட இடமாதலால் ‘பூந்துருத்தி’ என அழைக்கப்பட்டது. பொதுவாக ஆற்றிடைக்குறையில் உண்டாகும் பகுதிக்கே துருத்தி என்று பெயர்.

அதுமட்டுமில்லாது ஈசன் சோழமன்னன் ஒருவனுக்கு கொல்லனின் உலைக்களத் துருத்தியையே சிவலிங்கமாகக் காட்டி பூஜிக்கச் செய்தார். பின்னர் அத்துருத்தியே சிவலிங்கமாக மாறியதால் திருப்பூந்துருத்தி என ஆயிற்று என்றும்  கூறுவர். அப்பரடிகள்  ‘‘பொருத நீர்வரு பூந்துருத்தி’’ எனக் கூறுவார். வண்டல் நிலமாதலால் பூஞ்செடிகள் நிறைந்து மலர் வனமாயிற்று. தேவர்கள் மலர் கொண்டு ஈசனை அர்ச்சித்ததை அப்பர் ‘‘வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’’ என்கிறார். அதனாலேயே இத்தல நாயகருக்கு புஷ்பவனேஸ்வரர் என்று பெயர்.  

திருப்பூந்துருத்தி, சப்தஸ்தானம் எனும் ஏழூர்த் தலங்களில் ஒன்றாகத் தனிச் சிறப்பு பெறுகிறது. திருமழபாடியில் நந்திதேவர் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து பூக்கள் மலை மலையாக சென்று குவித்ததிற்காக நந்தியம் பெருமான் ஒவ்வொரு வருடமும் நன்றி செலுத்தும் வகையில் இத்தலத்திற்கு எழுந்தருள்வார். ஏழூர்த் திருவிழாவின் போது ஊரே களைகட்டும். சோழர் காலத்தில் ரத்தினமாக ஜொலித்த ஊர்களில் இதுவும் ஒன்று. மலர் வனத்தால் சிருங்காரமாக விளங்கும் திருப்பூந்துருத்தியின் கோயிலுக்குள் செல்வோம்.

கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. முதல் ஆதித்த சோழன் முதல் ராஜேந்திரன் வரையான மாமன்னர்கள் கற்றளி கோயிலாக எடுப்பித்தனர். கோயில் முழுதும் கல்வெட்டுக்கள் பரவிக் கிடக்கின்றன. 1100 வருட விஷயங்களை மிக விரிவாக எடுத்துக்கூறும் கல்வெட்டுக்கள் பல உள்ளன.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தை தரிசித்து வலப்புறம் பார்க்க ஏழூர் பல்லக்குகளும் எழுந்தருளும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. அதனருகேயே நந்தியம்பெருமான் சிவலிங்கத்திற்கு நேரேயில்லாது சற்று விலகியுள்ளது. இதுவே சம்பந்தருக்காக வழிவிட்டருளிய நந்தியாகும். சற்று உள்ளே நகர மூன்றாம் நிலை கோபுரமும் வாயிலில் பெரிய துவாரபாலகர்களும் காட்சியருள் கின்றனர். இன்னும் உள்ளே நகர ஆதிவிநாயகர் சந்நதியை தரிசித்து அர்த்த மண்டபம் தாண்டி கருவறை அடைய புஷ்பவனநாதர் எனும் பொய்யிலியார் சந்நதி அருள் மணம் பரப்பி அருகே வருவோரை நெக்குருகச் செய்கின்றது. துருத்தி என்றால் காற்றுப்பை எனும் பொருள் உண்டு. அதாவது உயிர்ச் சக்தியான பிராணனை சகல உயிர்களுக்கும் பரவச் செய்யும் ஆதாரமாக இவர் விளங்குகிறார். இன்னொரு காற்றுப்பை எடுக்கவொட்டாது அதில் சிவனருள் எனும் மலர்கொண்டு பிறவிப்பிணியை நீக்குகிறார்.

 அதனாலேயே பூந்துருத்தி உடையார் எனும் நாமம் ஏற்றுள்ளார். பூவைப்போல் மென்மையும் கருணையும் கொண்ட அவர் வாழ்வில் ஏற்படும் துன்பத்தை தம் அருள்மலர் கொண்டு இதமாக நீவி இடர் களைகிறார். அப்பரும், சம்பந்தரும் ஈசனடி பரவிய இடம் எனும்போது பிரமிப்பு இன்னும் கூடுகிறது. சந்நதியின் சாந்நித்யம், அருகே நெருங்குவோரின் மனதை நிறைத்து அவர்கள் வாழ்வை பூவாய் மலர வைக்கிறது. நகர மனமின்றி அம்பாள் சந்நதிக்கு நகர்கிறோம். இறைவி அழகாலமர்ந்தநாயகி எனும் இனிய நாமம் கொண்டவள். மங்கலத்தைக் கூட்டித்தரும் கொடைநாயகி. அகமும், புறமும் மலர்ந்து சௌந்தர்யம் கூட்டுவிக்கும் புன்னகை தவழும் தேவி. சௌந்தர்யநாயகி எனும் இன்னொரு பெயரும் இவளுக்கு உண்டு.

கோயிலில் கொற்றவை துர்க்கை ஒற்றைக்காலில் நின்று மகிஷனை வதைத்த பாவம்போக்கிக் கொள்ள இறைவனை வழிபட்டு சாந்த துர்க்கையாக நிலை கொண்டாள். மிக அழகான சிற்பம். இத்தலத்தின் இன்னொரு மாபெரும் சிறப்பம்சம், இங்குள்ள வீணா தட்சிணாமூர்த்தி. ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தர்வர்களும், தேவர்களும், நாரதரும் வினவ, பூந்துருத்திக்கு வருக எனப் பணித்த ஞான குரு அங்கே தானும் எழுந்தருளி, வீணையை ஏந்தி மீட்ட, நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர்.

இக்கோலம் வேறெங்கும் காணமுடியாத அற்புதம். இசையில் தேர்ச்சி பெற இத்தல தட்சிணாமூர்த்தியை வணங்குவோர் பெரிதும் சாதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. கோஷ்டமூர்த்திகளில் அர்த்தநாரீஸ்வரரும், வடபால் பிட்சாடன மூர்த்தியின் சிற்பங்களும் இத்தலத்தின் பேசும் சிற்பங்கள். அதுபோன்றே காசிப முனிவர் கடும் தவமிருந்து காசி, கங்கை உட்பட பதிமூன்று தீர்த்தங்களையும் ஆதிவிநாயகர் அருகேயுள்ள கிணற்றில் பொங்கியெழச் செய்தார். பொங்கிய கங்கையின் மத்தியில் விஸ்வநாதர் காட்சி தந்தார். இது ஒரு அமாவாசையன்று நிகழ்ந்தது. எனவே இக்கோயிலை அமாவாசையன்று கிரிவலமாக வருவது பெருஞ்சிறப்பாகக் கருதப்படுகிறது.

கோயிலை வலமாக வந்து கொடிமரம் கீழ் தண்டனிட்டு நிமிர, பூந்துருத்திநாதர் மனதை பூக்கூடையாக மாற்றியிருப்பது புரிகிறது. கோயிலுக்கு வெளியே புதிதாக வேறொரு திருமடம் சமீபத்தில் எழுப்பியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் சிவனடியார்கள் தங்கி பேறு பெற்ற மடத்தில் ஓரிருவர் மட்டும் இருக்க, கண்களில் நீர் கசிகிறது. பூந்துருத்தி மீண்டும் மலர்வனம் போன்று அடியார்களால் மணக்கும் நாள் எந்நாளோ எனும் ஏக்கம் அதிகரிக்கிறது.

இந்த திருத்தலம் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
 கிருஷ்ணா படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்