கவிதைக்காரர்கள் வீதி
சாதிக் கலவரத்தால் நின்றது ஊர்த் திருவிழா தண்டனை கடவுளுக்கு... சிலந்தி வலையால் சிறை! - ச.மாரிமுத்து, கழனிவாசல்.
யாசகம் கேட்கும் கைகள் கொடுக்க மனமில்லாமல் கையேந்துகிறார்கள் கடவுளிடம். - நூர்தீன், வலங்கைமான்.

பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் பட்டினி கிடக்கின்றன பிள்ளைகளின் சோற்று டப்பாக்கள்! - ந.கன்னியக்குமார், நல்லரசன்பேட்டை.
எனக்கு அந்தத் தெருவில் வீடு இருக்கிறது அவர்களுக்கு அந்தத் தெருவே வீடாக இருக்கிறது, நடைபாதைவாசிகள் - நா.கோகிலன், ஜோலார்பேட்டை.
யாருமற்ற நேரங்களில் ஊஞ்சலாடிக்கொள்கிறது காற்று முற்றத்து ஊஞ்சலில் - மகிவனி, கோவை.
யாரேனும் வரலாமென திறந்திருக்கிறது கோயில் கதவு யாராவது வரமாட்டார்களாவென ஏங்கிக்கொண்டிருக்கிறது குருக்கள் மனது - சுப்ரா, திருநெல்வேலி.
|