வெற்றி நாயகன் கோஹ்லி!
‘கோஹ்லி... கோஹ்லி...’ - அதிர்ந்து கொண்டிருக்கின்றன இந்திய ஸ்டேடியங்கள். ரசிகர்கள் இதயத் துடிப்பின் ஒலியும் அதுவே. அத்தனை சமூக வலைத்தளங்களிலும் தாறுமாறான டிரெண்டிங். ‘‘பிராட்மேனை நினைவுபடுத்துகிறார், சச்சினுக்கு இணையானவர், லாராவை மிஞ்சி விட்டார்’’ என்று பரவசப்படுகிறார்கள் கிரிக்கெட் பிரபலங்கள்.
பொதுவாக இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு ஒரு மனநிலை உண்டு. ஒன்டே மேட்ச்சில் எதிர் அணி 300 ரன்களுக்கு மேல் அடித்தாலோ, ட்வென்ட்டி 20யில் 160க்கு மேல் அடித்தாலோ, ‘‘போனா போகட்டும்! அடுத்த தடவை கப் நமக்குத்தான்’’ என ஆறுதல் அடையும் மனது அது. ஆனால் இப்போது எந்த ஸ்கோர் என்றாலும் கவலையில்லை. ‘சேஸ் மாஸ்டர்’ விராத் கோஹ்லி இருக்கிறாரே! செவ்வாய் கிரகத்தில் கொண்டு போய் விட்டாலும், அங்கும் செஞ்சுரி அடிக்க முடிகிற கோஹ்லிதான், இன்றைய சூழலில் இந்தியாவின் கனவு நாயகன்!

ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இந்திய அணி, கோஹ்லியின் தொடர்ச்சியான மூன்று அரை சதங்களால் ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரைக் கைப்பற்றியது. அடுத்து ஆசியக்கோப்பை வெற்றி. சொந்த மண்ணில் உலகக் கோப்பை டி20யில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அடுத்தடுத்து வெற்றிகள். கோஹ்லி சாதிக்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும், அவருக்கு முன்பு அவுட்டான மூன்று வீரர்களைவிட அதிக ரன்களை அவர் தனியாக எடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்த அந்த ஆட்டத்தில், மற்ற 21 வீரர்களும் ஒரு பிட்ச்சில் ஆட, கோஹ்லி மட்டும் வேறொரு பிட்ச்சில் ஆடியது போல இருந்தது பரவசம்.
டி20 என்றாலே காட்டுத்தனமான அடிதான் என்றில்லாமல், டெக்னிக்கலான ஆட்டம் மூலம் ரிஸ்க் இல்லாமல் அதிரடி காட்டுவது விராத்தின் தனித்துவம். எனவேதான் டெஸ்ட்டில் 44, ஒருநாள் போட்டிகளில் 51.5 என சராசரி ரன் வைத்திருக்கும் விராத், டி20யில் மட்டும் உலகிலேயே அதிகபட்சமாக 55.4 ரன் வைத்திருக்கிறார். (அடுத்த இடத்தில் இருக்கும் ஆரோன் ஃபின்ச், மற்றும் டி20 பிதாமகன் கிறிஸ் கெயிலின் சராசரிகள் கூட முறையே 39, 36.8தான்) அதாவது, மட்டை போட்டால் கூட அவுட் ஆகலாம்... அதிரடி காட்டினால் அவுட் ஆகவே மாட்டார் என்பது விராத்தின் ப்ரொஃபைல் சொல்லும் நிஜம். டி20யில் இலக்கை எட்டிப் பிடிக்கும் சேஸிங் தருணங்களில் இதே விராத்தின் சராசரி 92 ஆகி எதிரணியை மிரட்டுகிறது. டி20களில் இதுவரை விராத் டக் அவுட் ஆனதில்லை... விராத் ஆட்டமிழக்காமல் நின்ற மேட்ச்களில் இந்தியா தோற்றதே இல்லை... இப்படி வரிசை கட்டி நிற்கின்றன விராத் டேட்டாக்கள்.
விவியன் ரிச்சர்ட்ஸின் அலட்சியம் கலந்த அதிரடி, சச்சினின் நேர்த்தியான அணுகுமுறை இரண்டும் கலந்த விளங்க முடியா விந்தையாகவே அவரைப் பார்க்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். ‘‘இன்றைய நிலையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்’’ என உச்சி முகர்கிறார் கவாஸ்கர். ‘‘பந்தை துல்லியமாக இடம் பார்த்து அடிப்பதில் பிரையன் லாராவுக்கு இணையாக யாருமே இல்லை என நினைத்திருந்தேன். ஷாட் பிளேஸ்மென்ட்டில் இன்று லாரவை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டார் விராத்’’ என்று வியக்கிறார் ஆஸி. முன்னாள் கேப்டன் இயான் சேப்பல். மொத்தத்தில் கிரிக்கெட் உலகமே திக்பிரமையில் ஆழ்ந்திருக்கிறது.

ஒரு காலத்தில் விராத் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் இருந்தன, ‘ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகளை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழக்கிறார்’, ‘அடிக்கடி ஆக்ரோஷமாகிறார்’ என்று. ஆனால், அவற்றையே தன் புகழ் மாலையாக இன்று மாற்றியிருக்கிறார் விராத். ‘‘அவருள் இருக்கும் ஆக்ரோஷம்தான் இந்த ஆற்றல் மிகுந்த ஆட்டத்துக்கு ஆதாரம். களத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய துணிவை அளிக்கும் அந்த அடிப்படை குணாதிசயத்தை அவர் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதுதான் அவரது பலம்’’ என கணிக்கிறார் டோனி.
அரசியல் மீம்ஸ்களுக்கு இணையாக விராத் மெசேஜ்களும் வைரலாகிப் பரபரக்கின்றன. ‘KOH பொட்டாசியம் ஹைட்ராக்சைடு + LI லித்தியம் இணையும்போது எதிர்வரும் எதையும் அழிக்கக்கூடிய அதிபயங்கர வெடிப்பொருளாகிறது... அதுதான் KOHLI’ என்று அவரது பெயருக்கு அறிவியல் விளக்கம் கொடுக்கிறார்கள். காதலி அனுஷ்கா சர்மா பற்றிய விமர்சனங்களுக்கு கோஹ்லியின் பதில் அவரது பேட்டிங்கைவிட அற்புதம். இந்திய வீரர்களின் ஆட்டத்தையே தயவு தாட்சண்யமின்றி விமர்சிக்கும் கவாஸ்கரே, அனுஷ்காவுக்கு பரிந்து பேசியது கோஹ்லிக்கே ஆனந்தமாக இருந்திருக்கும்.
பாராட்டு கனமழை கொட்டித் தீர்த்தாலும் அதில் மூழ்கிவிடாமல் நிதானமாய் மிதக்கிறார் விராத். முன்பைவிட முதிர்ச்சி நன்றாய்த் தெரிகிறது. இருபது ஆண்டுகள் இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை தோள்களில் சுமந்த சச்சினுக்கு அடுத்ததாக, அந்த நம்பிக்கை சுமை கோஹ்லியின் தோள்களில் விழுந்திருக்கிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எல்லா வகை கிரிக்கெட்டிலும் விராத் இந்திய அணிக்கு தலைமைப் பொறுப்பேற்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை. ஆக்ரோஷமாக விளையாடி வெற்றிகளை ருசித்தார் கங்குலி; அமைதியாக இருந்து ஜெயித்துக் காட்டினார் டோனி. கோஹ்லி இந்த இருவரின் கலவை. அவர் வெறுமனே வெற்றியைப் பற்றிப் பேசுவதில்லை. வெற்றியைத் தவிர வேறு சிந்தனை அவர் மனதில் இல்லை. இந்தியாவுக்கு நிறைய மேட்ச்கள் வென்று தரப் போகும் கேப்டனாக அவர் இருக்கக்கூடும்!
கோஹ்லி தி கிரேட்!
பிராட்மேன் டெஸ்ட் மேட்ச் தவிர எதுவும் ஆடியதில்லை. ஜாம்பவான் சச்சின் அதிக டி20 மேட்ச்கள் ஆடியதில்லை. ஆனால் கோஹ்லி மூன்று வகை போட்டிகளிலும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். இப்போது ‘டெஸ்ட் மேட்ச்சுக்கு பிராட்மேன், ஒருநாள் போட்டிகளுக்கு சச்சின், டி20 போட்டிகளுக்கு கோஹ்லி’ என பல விமர்சகர்கள் ‘பிதாமகன் வரிசை’யைப் பிரித்து வைக்கிறார்கள். சிலர் லாரா, பான்டிங்கோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஆனால் ஒருநாள் போட்டிகளிலும் கோஹ்லியின் ரெக்கார்டை இவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு உண்மை தெரிகிறது, கோஹ்லி ஓய்வுபெறும்போது கிரிக்கெட்டின் பல ரெக்கார்டுகளை அவர் பெயரில் எழுதி வாங்கிக்கொள்வார். கோஹ்லி இதுவரை 171 ஒருநாள் போட்டிகள் விளையாடியிருக்கிறார். அடுத்தவர்களுக்கும் அந்த எண்ணிக்கைப்படி கணக்கிட்டால், 171 போட்டிகளுக்குப் பிறகு...
- ஷங்கர் பார்த்தசாரதி
|