தோழா விமர்சனம்



ஜாலியும் கேலியுமான சிறு திருடன் கார்த்தி, கோடீஸ்வரர் நாகார்ஜுனாவிற்கு உதவியாளனாய் வந்து உண்மைத் தோழனாய் மாறுகிற கதையே ‘தோழா’. வாழ்வின் எல்லா அம்சங்களையும், செல்வத்தையும் பெற்று வாழ்கிற பெரும் கோடீஸ்வரன் நாகார்ஜுனா. கொண்டாட்டமும், காதலுமாய் சந்தோஷமாய் வாழ்கிற அவரின் வாழ்க்கையில் நேர்கிறது ஒரு விபத்து. அதனால் அவரது கழுத்துக்குக் கீழான பகுதிகள் உணர்விழக்க, அவருக்கு உதவியாளர் தேவைப்படுகிறது. அப்படி வந்து சேர்கிற கார்த்தி, அலட்சியமும், இயல்பும், கொஞ்சம் விட்டேத்தியுமாய் வேலையைப் பார்க்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவர் பக்கம் ஈர்க்கப்படுகிறார் நாகார்ஜுனா! இறுதி வரையில் அவர்களின் நட்பு நிலைத்ததா, இடையில் கார்த்திக்கு வந்த காதல் என்னவானது என இன்னும் விரிவதே மீதிக்கதை!



சும்மா இல்லை, நாகார்ஜுனாவின் அனுபவம் பேசுகிறது. படம் முழுவதும் உட்கார்ந்துகொண்டே, வெறும் புன்னகையிலும் இலகுவான பேச்சுக்களிலும் மட்டும் படத்தை அப்படியே பூப்போல தாங்கிச் செல்கிறார். ஒரு  ஹீரோவிற்கான எந்த சாகசங்களும், ஆட்டம், பாட்டங்களும் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே நம் மனதில் உட்கார அவருக்கே உரிய நம்பிக்கையும், தெம்பும் வேண்டும். அத்தகைய ஒரு எனர்ஜி படம் முழுவதும் நாகார்ஜுனாவிடம் நிரவி, பரவிக் கிடக்கிறது. ஒரு கலைஞனுக்குரிய சகல அம்சங்களிலும் மிளிர்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவசரமே இல்லாமல் அவர் கார்த்தியின் நடவடிக்கையில் வசீகரமடைவது ரொம்பவும் இயற்கை. ஒரு குறையும் சொல்ல முடியாத அசத்தல் நடிகர் பாஸ் நீங்க!

கார்த்திக்கு ‘பருத்தி வீரனு’க்குப் பிறகு வேறு மாதிரியான கட்டமைப்பு. சொல்லிக்கொள்கிற மாதிரியான பதிவு. உதவியாளருக்கான நேர்காணலில் ஆரம்பித்து, நாகார்ஜுனாவின் பணக்காரத்தனத்தை கேலி செய்து, கதையை நகர்த்திக் கொண்டு போவது மாதிரி ஆரம்ப உடல்மொழியைக் கடைசி வரை விடவே இல்லை. நாகார்ஜுனாவின் செகரட்டரியாக தமன்னா... பார்த்து நாளானாலும் அதே பதவிசு. கார்த்தியின் ஆரம்பத் துரத்தலில் தமன்னா எரிச்சல் ஆவதும், பின்னாடி அவரே கிளீன் போல்டு ஆவதும்... நிஜமாகவே இந்த ஜோடி மேட் ஃபார் ஈச் அதர்! ரொமான்ஸ் காட்சிகள் பார்த்ததே என்றாலும், பார்த்தவுடன் சுறுசுறுப்பு பற்றிக்கொள்கிறது. தனியாக காமெடி இல்லாமல், நாகார்ஜுனாவும் கார்த்தியுமே காமெடி ஃபில்லர் கம் பில்லர்கள்!

இயக்குநர் வம்சியின் வல்லமைக்கு வணக்கம். நாற்காலிகளில் நாகார்ஜுனாவை உட்கார வைத்து, கண்களில் ஊற்றெடுக்க வைக்காமல், பாஸிட்டிவ் பக்கங்களையே சொல்லிப் போவது சிறப்பு. அழுத்த, திருத்த, சென்டிமென்ட், சரள வசனங்களுக்கு ராஜுமுருகனும், சி.முருகேஷ் பாபுவும் சொந்தக்காரர்கள். கேரளாவே கோபிசுந்தரைக் கொண்டாடுகிறது. ஆனாலும் இன்னும் தமிழுக்கு ஏற்ற மாதிரி இதம்பதமான பாட்டெல்லாம் இல்லை. என்னங்கப்பா! புதுசா ட்யூன் போட்டு வித்தியாசம் காட்டி நிரூபிங்கப்பா!

அரண்மனை வீட்டை, பாரிஸின் விசாலத்தை, கனிவான தருணங்களின் இறுக்க நெருக்கத்தை ஆசை ஆசையாக அள்ளி விழுங்கி இருக்கிற பி.எஸ்.வினோத்தின் கேமரா கண்களுக்கு இதம்... சுகம்! தொட்டுக்கொள்கிற மாதிரி அனுஷ்கா, ஸ்ரேயா வந்தாலும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. தரை லோக்கல் கார்த்தி அவர்களைக் கண்டுபிடித்து, முதலாளியிடம் காட்டுவதும் நம்பும் வகையில் இல்லை. நாகார்ஜுனா படம் முழுக்க உட்கார்ந்தே வருகிறார். ஆனால், படம் எழுந்து நிற்கிறது. அதுதான் ‘தோழா’!

- குங்குமம் விமர்சனக் குழு