குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

ண்ணுக்குத் தர வேண்டிய மரியாதையையும் சரி, ஆத்து மண்ணுக்குத் தர வேண்டிய மரியாதையையும் சரி, நம்ம நாட்டுல யாரும் கொடுக்கிறதில்ல. ரோட்டு மேல போற லாரிகளில் ஆத்து மணல் கண்ணீர் விட்டாலும், ராத்திரிக்கு நம்ம பயலுக கவலை மறக்க டாஸ்மாக் தண்ணி விட்டாதான் அரசுக்கு வருமானம்னு ஆன பின்னாடி, யாரை குற்றம் சொல்றது? நீதி உரைக்க வேண்டிய பல அரசாங்கக் கட்டிடங்களே அதிகாரபூர்வமற்ற ஆத்து மணலில்தான் கட்டப்படும்போது நாம நினைப்பதெல்லாம் நடந்து விடவா போகிறது? இதெல்லாம் இப்ப எதுக்கு சொல்றோம்னா, இப்படியாப்பட்ட நம்மூர்ல மட்டும்தான் மண்டைய உடைச்சா புடிச்சு உள்ள போடுவாங்க, ஆனா மலைய உடைச்சா மரியாதை காட்டி விட்டுடுவாங்கன்னு நினைக்கிறேன். கேள்விப்படாத கோயில்களில் சிலைகளைத் திருடிட்டுப் போறவன வலை வீசிப் புடிக்கிறாங்க...



ஆனா, கோபுரமாட்டம் நின்னுக்கிட்டு இருந்த மலைகளை தேய்ச்சு எடுத்துட்டுப் போறவங்கள விட்டுடுறாங்க. நம்ம வீட்டைப் பத்தி யாராவது ஒரு சொல்லு தப்பா பேசினா கூட பல்லை உடைப்பேன்னு பாய்ஞ்சு போற நாமதான், நம்ம நாட்டுக்கு உரிமையான கிரானைட் வளத்தைச் சுரண்டினாலும் கல்லா நிற்கிறோம். ‘பாதையின் குறுக்கே கிடந்த பாறைகளை சொந்தச் செலவில் உடைத்துக்கொடுத்தார்கள்’னு  கிரானைட் குவாரி முறைகேடு கம்பெனிகளுக்கு பாரத ரத்னா அவார்டுக்கு சிபாரிசு பண்ணாம இருந்தா போதும். தப்பான வழில பணம் சம்பாதிக்கறதைத்தான் பயந்து செய்யணும். ஆனா, பணம் வந்திடுச்சுன்னா என்ன தப்ப வேணா பயமில்லாம செய்யலாம்.

தேசிய திரைப்பட விருதுகள் கொடுத்தாலும் கொடுத்தாங்க... ‘இவருக்கு ஏன் கொடுக்கல’, ‘அவருக்கு ஏன் கொடுத்தாங்க’ன்னு முன் எப்போதும் இல்லாத பெரிய சர்ச்சைகள் ஓடிக்கிட்டு இருக்கு. வெளிப்படையா சொல்லப்போனா,  பல விருதுகளில் நம்பகத்தன்மையும் இல்ல, நியாயமும் இல்ல. சிறந்த நடிகர் நடிகைக்கான விருதை அமிதாப் பச்சனும் கங்கனாவும் வாங்கியிருக்காங்க. என்னய்யா விருது தர்றீங்க? மொத அக்கம்பக்கத்துல என்ன நடக்குதுன்னு பாருங்க!

தமிழ்நாட்டுல அழுதுக்கிட்டு பதவியேற்ற ஒரு ஆண் அமைச்சருக்கும் சிறந்த நடிகருக்கான விருது இல்லை, அதைவிட மண் சோறும் தீச்சட்டியும் தூக்குன எந்த ஒரு பெண் அமைச்சருக்கும் சிறந்த நடிகைக்கான விருது இல்ல. இந்த வருடத்தின் சிறந்த படம் ‘பாகுபலி’யாம், அட போங்கப்பா, எங்களுக்கு காட்டுனாங்க பாரு ஒரு படம், ‘தீமிதி’, ‘பாகுபலி’ கூட நூறு நாள்தான் ஓடிச்சு, தமிழ்நாட்டுல இந்தப் படம் ஆறு மாசம் ஓடுச்சு. சிறந்த திரைக்கதை எழுத்தாளருனு யாரோ ரெண்டு பேருக்கு கொடுத்திருக்காங்க. அட போங்கப்பா, ‘அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்’னு ட்விஸ்ட்ட க்ளைமேக்ஸுக்கு வச்சிருந்த எங்க நாஞ்சில் சர்பத்துக்குல்ல அதைத் தந்திருக்கணும். சிறந்த வசனத்துக்கு விருது, தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்ல புகழ்ச்சி வசனம் பேசுன மந்திரிகள், எம்.எல்.ஏக்களுக்குத் தராம யாரோ ஒரு சப்பாத்தி சாப்பிடுற சால்னா பாய்க்கு தந்திருக்கீங்க.

இளையராஜா இசைக் கடவுள்தான்... ஆனா அவரின் இசையை விட எங்கும் நிறைந்திருந்தது நம்ம சட்டசபையில் மேஜை தட்டும் சத்தம்தான், அதுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது இல்லையா? ஆனா ஒண்ணு, சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ‘விசாரணை’க்குக் கொடுத்தீங்க பாருங்க, அதுதான் சரியா செட்டாகுது. ஏன்னா இப்ப பல மந்திரிகளுக்கு தோட்டத்துல அதான் நடத்துக்கிட்டு இருக்காம்.

கேப்டன் கிரிக்கெட் பார்க்க வந்திருக்க, கவாஸ்கர் மட்டும் கமென்ட்ரி பாக்ஸில் கும்மியடிக்க, அவரின் துணைக்கு கேப்டனையும் கமென்ட்ரி பண்ண தூக்கிப் போகிறார்கள் போட்டி அமைப்பாளர்கள்.
கவாஸ்கர்: அஃப்ரிடி அற்புதமாக தூக்கியடித்தார், ஓ... அது கேட்ச்சாக மாறுமா? அடடா, கைக்கு வந்த எளிமையான கேட்ச்சை நழுவ விட்டார் நெஹ்ரா.
கேப்டன்: பந்தை அடிச்சாங்க, வேணாங்கல! நாட்டுல பணத்தையே அடிக்கிறாங்க, நான் சொன்னா உளறுறேன்ம்பாங்க மக்கழே... இந்தா காவல்துறை இங்க இருக்கு, நான் அவங்கள தப்பா சொல்லல. ஏ நெஹ்ரா, நீ கேட்ச் விட்டியே, உன்னைப் பார்த்து தமிழ்நாடு இல்ல, இந்தியா இல்ல, உலகமே சிரிக்குது. வாங்க! கிட்ட வாங்க! அடிக்க மாட்டேன் வாங்க, ஹாஹாஹாஹாஹா
கவாஸ்கர்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாதிசைகளிலும் துவம்சம் செய்துகொண்டிருக்கிறார்கள். எப்படியும் 160 ரன்களுக்கு மேல போகும்னு எதிர்பார்க்கிறேன்.
கேப்டன்: இந்தியா கூட மட்டும் இப்படி ரன்னடிக்கிற, பவுண்டரி, சிக்ஸ்னு அடிக்கிற... ஏன் தென் ஆப்ரிக்கா கூட உன்னால அடிக்க முடில... த்தூ...
கவாஸ்கர்: இந்திய அணிக்கு இலக்கு 176 ரன்கள். இந்த இலக்கைத் தொடுமா... இல்லை, விடுமா? இன்னிங்ஸ் இடைவேளைக்குப் பிறகு சந்திப்போம்.
கேப்டன்: ட்ரிங்ஸ் பிரேக்குன்னு சொல்றாங்க! காவிரில தண்ணி வரல, விவசாயிங்க எல்லாம் பாவம். டாஸ்மாக் வருமானம் 30000 கோடின்னு சொல்றாங்க, நான் அதுக்கெல்லாம் கவலைப்படல. சும்மா சட்டமன்றத்துல மேஜையை தட்டிக்கிட்டு, நான் தனியாதான் நிற்பேன்; நான் தனியாதான் நிற்பேன். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா மக்கழே, தண்ணி பாட்டில் பத்து ரூபாய்க்கு விற்குது. இந்திய அணியை நான் கேட்டுக்கொள்கிறேன், தைரியமா ஆடுங்க! உங்களுக்கு ஒண்ணுன்னா நான் வருவேன்.
கவாஸ்கர்: இந்திய அணி அற்புதமாக ஆடிக்கொண்டு இருக்கிறது, பத்து ஓவர் முடிவில் 95 ரன்களை எடுத்து 2 விக்கெட் மட்டுமே இழந்து இருக்கிறது. ரெய்னாவும் கோஹ்லியும் அழகாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
கேப்டன்: சும்மா சொல்லக் கூடாது, இவங்க நல்லா விளையாடுறாங்க. மோடி சொன்னாரு, யோகாசனம் உடம்புக்கு நல்லது. நான் யோகா செய்வேன், செய்யறதுன்னா தேங்காய் சட்னி கூட செய்யலாம். ஆனா பருப்பு விலை கூடிப் போச்சு. இந்த அரசாங்கம் இதுக்கு என்ன நடவடிக்கை எடுத்தாங்க? ஒண்ணுமில்ல, ஆனா ஆடு மாடு கொடுத்தா வாழ்க்கை உயர்ந்திடுமா? பால் விலை ஏறல, ஆனா பேட் விலை எகிறிடுச்சு. பசங்க ஆசைப்பட்டாங்க, ஜெயிக்கணும், நாம ஜெயிப்போம். இல்லன்னா தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க!
கவாஸ்கர்: வெற்றிக்கு நான்கு ரன் தேவை, விராட் கோஹ்லி பிடிக்கிறார்... ஃபுல் டாஸ் பால். அதை லாங் ஆன் திசையில் அடிக்கிறார் கோஹ்லி. ஷோயப் மாலிக் தடுக்க ஓடுகிறார், முடியவில்லை, நான்கு ரன்கள். இந்தியா அற்புதமாக ஜெயித்தது. கவலை தேய்ந்த முகத்தோடு நிற்கிறார்கள் பாகிஸ்தான் வீரர்கள்.
கேப்டன்: பத்து மணிக்கு பேச்சை முடிக்கச் சொல்றாங்க! நான் பயப்பட மாட்டேன், டேய் போடா... அவதூறு வழக்குதானே போடுவ, என்ன செஞ்சாங்க இந்த ஆட்சியில? எல்லோரும் பத்திரமா வீட்டுக்குப் போகணும், நான் போன் பண்ணி விசாரிப்பேன், ம்ம்ம் சரியா, நன்றி, வணக்கம்!             

-ஓவியங்கள்: அரஸ்