சொல்லவே இல்ல!
திறமை என்றும் போற்றப்படுகிறது என்பதற்கு தக்க உதாரணம், பாலிவுட்டில் ஜாக்பாட் அடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். மீண்டும் ஒரு ஸ்ரீதேவி சோபித்து விட்டாரோ! - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
கெமிக்கலில் பழுக்கும் பழமா? இனிமே வாழைப்பழ ஜோக்கைக் கேட்டாலே சிரிப்பு வராமல் பயம்தான் வரும் போல! வியாபார பயங்கரம்! - ஆ.லோகநாதன், சென்னை-16.

வேறு மாநிலங்கள் செல்லும்போது கார் விபத்து ஏற்பட்டால் அதனால் படும் அவஸ்தைகளை ஜெயமோகன் தோலுரித்துக் காட்டிவிட்டார். ஹேட்ஸ் ஆஃப்! - எஸ்.நவீன் சுந்தர், முத்தரசநல்லூர்.
என்னென்னவோ கவர்ச்சி உடைகளில் எமி ஜாக்சனைப் பார்த்தாச்சு. ஆனாலும் சேலை கட்டிய ‘தெறி’ ஸ்டில் கலக்கல் போங்க. கணக்கு டீச்சரா அவங்க... சொல்லவே இல்ல! - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
ரயிலின் புதிய தமிழ்ச் சொல்லான ‘தொடரி’ எனும் தலைப்பே கவிதை. அதில் தனுஷை சேர்த்திருக்கும் இயக்குநர் பிரபு சாலமனுக்கு அட்வான்ஸ் வெற்றி வாழ்த்து! - மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.
25 வாரங்களாக, சி.சரவணகார்த்திகேயன் ‘இந்திய ராக்கெட்டின் சரித்திர’த்தை வழங்கி, ‘உங்களில் யார் அப்துல் கலாம்?’ என்ற கேள்வியோடு முடித்த விதம் அருமையிலும் அருமை! - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.
‘நமீதா ஸ்லிம் ஆகிவிட்டார்... ஃபேஷன் ஷோக்களில் கலந்துகொள்கிறார்’ என்று நீர்தான் சொல்கிறீர். போட்டோவைப் பார்த்தால் அப்படி ஒண்ணும் இளைச்ச மாதிரி தெரியலையே சாமி..! - எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
சீன நாட்டில் பிணத்துக்கும் பிணத்துக்கும் கல்யாணம் செய்து புதைப்பதைப் பற்றிப் படித்து மனம் உறைந்து போனது. - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
ஆத்திரத்தையும் ஆச்சரியத்தையும் ஒரு சேரக் கிளப்பியது ‘மலைக்க வைக்கும் மல்லையா சொத்துக்கள்’ கட்டுரை! - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஆளுங்கட்சி அரசின் அவலங்களை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள் இளைஞர்கள்! இளைஞர்களின் ஓட்டு அவர்களுக்கு அல்ல என்பது மட்டும் உறுதி! - கே.டி.முத்துவேல்,கருப்பூர்.
‘சுபா’வின் ‘ரகசிய விதிகள்’ அமாவாசையில் தொடங்கியிருப்பதால் இதயத்தின் லப்... டப்... உயர்ந்தே ஒலிக்கிறது. தொடக்கமே சும்மா ஜெட் வேகம்தான்! - மயிலை கோபி, சென்னை-83.
|