இழப்புக்கு ஈடாகுமா இந்த விருது?



எடிட்டர் கிஷோரின் தந்தை உருக்கம்

தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் ‘விசாரணை’க்கு தனி இடம். இந்தியாவின் சிறந்த படத்தொகுப்பாளராக மறைந்த கிஷோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். துயரத்தில் தோய்ந்து இறுகி, உருகிப் போயிருக்கிறார் கிஷோரின் வயது முதிர்ந்த தந்தை தியாகராஜன். விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் வளவனூர் கிராமத்திற்குப் போனால், கிஷோரின் வீட்டை ஆளுக்கு ஆள் அடையாளம் காட்டுகிறார்கள்.

‘‘என்னோட ஒரே பையன் கிஷோர். ரெண்டு பெண்களுக்குப் பிறகு பிறந்தான். சின்ன வயதிலேயே சுறுசுறுப்பா இருப்பான். 10வது வகுப்பு ஃபெயில் ஆகிட்டான். திட்டினேன். கோவிச்சிட்டு கொஞ்ச நாள் பேசாமல் இருந்தான். பின்னாடி ‘மெட்ராஸ்க்கு போய் சினிமாவில் சேரப் போறேன்’னு சொன்னான். அந்த வயசுக்கு மேல புடிச்சு வைக்கவா முடியும்? ‘போப்பா’னு சொல்லிட்டேன். அப்புறம் செலவுக்குப் பணம் அனுப்பி வைப்பேன்.



ஒருநாள் ‘அகத்தியனின் ‘காதல் கோட்டை’ படத்தில் அசிஸ்டென்ட் எடிட்டரா வேலை பார்க்கறேன்’னு சொன்னான். சரி, கொடிக்கம்பை பிடிச்சிட்டான்னு நினைச்சேன். அப்புறம் லெனின் சார்கிட்ட வந்துட்டான். சடசடனு படங்கள் தனியா பண்ண ஆரம்பிச்சிட்டான். வர்ற நல்ல படங்களில் எல்லாம் அவன் இருந்தான். வெற்றிப் படங்களில் அவன் முக்கியமா இருந்தான். சினிமாவில் ராசி... ராசினு ஒண்ணு இருக்கே, அப்படி அவன் பெயர் வாங்கிட்டான். ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஆடுகளம்’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’, ‘ஈரம்’னு கிட்டத்தட்ட 74 படங்கள் பண்ணிட்டான். கடைசியில் ‘விசாரணை’ படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது, அதன் கடைசிக் கட்டத்தில்தான் மயக்கமாகி விழுந்து, ஆஸ்பத்திரியில் சேர்த்தது, அதெல்லாம் உங்களுக்குத் தெரியுமே!

ஆனால், உங்களுக்குத் தெரியாதது நிறைய இருக்கே... இவ்வளவு படம் செய்ததற்கு எவ்வளவு பணம் சம்பாதிச்சு இருக்கணும். அப்படியெல்லாம் அவன்கிட்ட பணம் இல்லை. ஆனால், வந்த வரைக்கும் எங்களுக்கு உதவிகள் செய்திருக்கான். திடீர்னு பறவை மாதிரி வந்து பார்த்திட்டுப் போவான். எனக்கு ‘மியாட்’ல வச்சு ஓப்பன் ஹார்ட் ஆபரேஷன் செஞ்சு என் உயிரை மீட்டுக் கொடுத்தான். நேரம், காலம் இல்லாமல் வேலை பார்த்தான். நிறைய டைரக்டர்கள் அவனை நம்பி பொறுப்பை ஒப்படைச்சாங்க. பளு அதிகமானாலும், அவன் மறுக்க முடியாமல் போயிடுச்சு. ‘அம்மாவும், நானும் அங்கே வந்திடட்டுமா’னு கேட்டால், ‘அக்கா ரெண்டு பேருக்கும் அங்கே வந்து போக யார் இருப்பாங்க அப்பா’னு எதிர்க்கேள்வி கேட்டான்.

நேரத்திற்கு தூங்கறதில்லை. மூணு வேளை சாப்பாடும் சரியான நேரத்தில் சாப்பிட்டதில்லை. இங்கே வந்திட்டுப் போற நாலைந்து நாளும் தூக்கம் அவன் கண்ணில் நிக்கும். காலில் சக்கரம் கட்டிக்கிட்டு நின்னா மாதிரி ஓடிடுவான். ‘ஆடுகளத்’திற்கு தேசிய விருது கிடைச்சதும் உடனே போன் பண்ணி தகவலைச் சொன்னான். சந்தோஷமா இருந்தது. இந்தியாவிற்கே சிறந்த எடிட்டர்னா சாதாரணமான விருதா அது! எனக்குப் புரிஞ்சது. பொண்ணு பார்த்தோம். நல்ல பொண்ணு கிடைச்சா, ‘ஐயோ... சினிமாவா’னு பயந்தாங்க. ஒதுங்கினாங்க. சிவகுமார் சார் ஃபேமிலி எல்லாம் நல்ல பொண்ணுகளா கட்டி வச்சு சந்தோஷமா இல்லையா! சினிமான்னா இந்த ஜனங்கள் ஏன் பயந்து ஓடணும்? நல்ல பொண்ணைக் கட்டி வச்சிருந்தால் அவனை கட்டுக்குள் கொண்டு வந்து, ‘சாப்பிடுங்க, நேரத்திற்கு தூங்குங்க, ஒரு வாரம் வெளியே எங்கேயாவது ட்ரிப் போயிட்டு வரலாம்’னு ரிலாக்ஸ் பண்ணியிருக்கலாம். எதுவும் முடியாமப் போச்சு. இப்ப அவனை இந்த பூமி திங்கக் கொடுத்திட்டு நானும் என் மனைவியும் அழுது தவிச்சுக்கிட்டு இருக்கோம்.

எல்லோரும் ‘கஷ்டப்படுகிறீர்களா?’னு ஆச்சரியப்படுறாங்க. 74 படம் பண்ணியிருக்கான்... நிஜம். ஆனால், பேசின பணத்தை யாரும் கொடுத்ததில்லை. ஐதராபாத்துக்கே போய் பிரகாஷ்ராஜ் சாருக்கு படம் பண்ணினான். அவர் மூணு லட்ச ரூபாய்க்கு மேலே கொடுக்கணும். இதை மட்டும்தான் என்கிட்ட சொன்னான். படம் முடிச்சிட்டு, பணத்தை செலவு பண்ணிட்டு, கடைசில இவன்கிட்ட வந்துதான் புரொடியூசர்கள் எல்லாம் அஞ்சு பைசாவுக்கு கணக்கு பார்த்தாங்க. ‘உங்களுக்கு வீடு கட்டித் தரேன்’னு ஒரு இடம் வாங்கி பூமி பூஜை போட்டான். அப்படியே ஆரம்பிச்ச வேகத்தில் நிக்குது. ‘பணம் கொடுக்க வேண்டியவங்ககிட்டே கேட்கலையா’னு கேட்டா, ‘அப்படியெல்லாம் முடியாதுப்பா, அடுத்த படத்திற்கு வேற ஆளைத் தேடிட்டுப் போயிடுவாங்க’னு சொல்வான்.

சரி, ‘விசாரணை’ படத்திற்கு விருது கொடுப்பாங்க. வாங்கி வீட்ல வச்சுக்கலாம். ஆனா, எங்க இழப்பிற்கு யார் ஈடு செய்ய முடியும்? காலம் மறக்கடிக்கும்னு சொல்லாதீங்க. அது மனதில் ரணமா இருந்துக்கிட்டேதான் இருக்கும். என்கிட்டே வருமானமே இல்லை. அவனுக்குப் பணம் தர வேண்டியவங்க மனசாட்சிப்படி திருப்பித் தரலாம். தரலைன்னாலும் எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. நாங்க என் பையன் நினைவோட இருந்திடுறோம்!’’ - இடுங்கிய கண்களில் துளி கண்ணீர். ‘‘அவனுக்குப் பணம் தர வேண்டியவங்க மனசாட்சிப்படி திருப்பித் தரலாம். தரலைன்னாலும் எங்களால ஒண்ணும் செய்ய முடியாது!’’

- நா.கதிர்வேலன்
படம்: கதிரவன்