முதல் இன்னிங்ஸ் முடிஞ்சது
மழை அங்கிள் ரமணன்
ஒருவரின் ஓய்வுகூட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது என்றால், அவர் எந்த அளவுக்கு இளைய தலைமுறையிடம் பாப்புலர் என்பது புரியும். யெஸ், ‘மழை அங்கிள்’ ரமணன்தான்! நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆராய்ச்சி மையம். வாசலிலேயே வரவேற்கிறது, ஓய்வுபெறும் ரமணனை வழியனுப்பும் வாழ்த்து பேனர்... ‘முனைவர் எஸ்.ஆர்.ரமணன், சயின்டிஸ்ட் (எஃப்)’! அறைக்கு வெளியே அன்றைய வானிலை குறித்து கருத்து கேட்க மைக்குகள் விழித்திருக்கின்றன... கேமராக்கள் வெறித்திருக்கின்றன. அறையின் டேபிளில் பொன்னாடைகள், பூங்கொத்துகள் என புன்னகை முகமாக ரமணன். சக அலுவலர்கள், சேனல் நிருபர்கள் எனப் பலரும் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழும் வைபவம் அதுபாட்டுக்கு நடக்கிறது. மொத்த மீடியாவுக்கும் வானிலை சொல்லிவிட்டு, தன்னிலை சொல்ல நம் பக்கம் திரும்புகிறார்...

‘‘ஒரே துறையில இருந்து இப்போ ஓய்வு பெற்றிருக்கீங்க... போரடிச்சதில்லையா?’’ ‘‘இல்ல சார். ஒரு இன்னிங்ஸ் முடிஞ்சு, அடுத்த இன்னிங்ஸ் துவங்கப் போகுதுனு நினைச்சுக்க வேண்டியதுதான். 36 வருஷ சர்வீஸ்ல சென்னையிலேயே 14 வருஷம் வொர்க் பண்ணிட்டேன். இந்த வேலையில சந்தோஷமான விஷயங்கள் நிறைய இருக்கறதால, எப்பவும் ஹேப்பியா இருக்கேன். இது அருமையான துறை. அக்கவுன்ட் டிபார்ட்மென்ட்ல இருந்தா, கூட்டல், கழித்தல்னு ஒரே மாதிரி வேலையைப் பார்த்து, வாழ்க்கை போரடிச்சிருக்கும். வானிலைங்கறது தினமும் மாறக் கூடியது. ‘சட்டென்று மாறுது வானிலை’னு பாட்டே இருக்கே. நிறைய மக்களைச் சந்திக்கறதால சந்தோஷமான அனுபவங்கள் நிறைய இருக்கு. என் அறிவிப்புகள் கேட்டு, ‘முன்னெச்சரிக்கையா நடந்துக்கிட்டோம். ரொம்ப நன்றி’னு நிறைய கம்பெனிகள் பாராட்டுவாங்க. சில பேருக்கு அறிவிப்புகளைப் பயன்படுத்திக்கத் தெரியல. 140 கிலோமீட்டர் வேகத்துல காத்து வீசும்னு சொன்னா கோழிப்பண்ணைகள் எல்லாம் எப்படி முன்னெச்சரிகையா இருக்கணும்ங்கிறது தெரிய மாட்டேங்குது. உயிர்ச்சேதம், பொருட்சேதம் எல்லாம் குறைக்கிற டெக்னாலஜி கொஞ்சம் கொஞ்சமா வளரும்னு எதிர்பார்க்கறோம்!’’
‘‘ஆபீஸ்ல நீங்க எப்படி?’’ ‘‘இங்க எல்லாருக்குமே என்னோட சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் பிடிக்கும். பல நேரங்கள்ல பாராட்டியிருக்காங்க. மீடியாக்காரங்க, ‘புயல் இருக்குதா? புயல் இருக்குதா?’னு கேட்பாங்க. ‘புயலுக்கு வாய்ப்பில்லை’னு சொல்லுவேன். மறுபடியும் வேற டாபிக் மாத்தாமல், ‘வேற புயல் இருக்குதா?’னு கேட்பாங்க. ‘உங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’னு சட்னு கேட்டுருவேன். கவுன்ட்டர் குடுக்கறதுல கவுண்டமணி சூப்பர்ல! காமெடி சீன்கள் பார்க்கறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ட்விட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ்புக்னு எதிலும் நான் இல்ல. அதில் இருந்தால், வேலையில் கவனம் சிதறிடும். நகைச்சுவை உணர்வு இருக்கறதாலதான் வேலையை ரசிச்சு செஞ்சிருக்கேன்!’’
‘‘உங்களப் பத்தி நிறைய மீம்ஸ் வருதே... கவனிக்கிறீங்களா?’’ ‘‘ஆமாம் ஆமாம். சென்னை அடைமழை டைம்ல சுத்தி சுத்தி மீம்ஸ் மழைதானே! எல்லாம் பார்ப்பேன். சிலதுதான் நல்லா சிரிக்க வைக்கும். இன்னிக்கு என்னோட நண்பர் ஒருத்தர் ஒரு மீமை லேமினேட் பண்ணி நினைவுப் பரிசா கொடுத்தார்!’’ (மேஜை டிராயரிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்... ‘‘மழைய போட்டோல பாத்துருப்ப, டி.வில பாத்துருப்ப, ஏன் ரோட்டுல கூட பாத்துருப்ப... தமிழ்நாட்டுல பெஞ்சி பாத்துருக்கியா... ரமணன் சொல்லி மழை பெஞ்சா ஒரு மாசம் பெய்யும்டா... பாக்குறியா... பாக்குறியா...’’ என ‘சிங்கம்’ சூர்யா கோலத்தில் ரமணன் கலக்குகிறார் அதில்!)
‘‘மழைக் கவிதைகள் எழுதியிருக்கீங்களா?’’ ‘‘அந்தளவு கற்பனை வளம் இல்ல. ஃபிக்ஷனே படிக்க மாட்டேன். ஆனா, மழையைப் பத்தி நிறைய விஷயங்கள் சொல்லுவேன். திருவாவடுதுறை ஆதீனத்தில் பேசக் கூப்பிட்டிருந்தாங்க. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இருந்து மழையைப் பத்தி ஒரு பாட்டு சொன்னேன். அந்த மாதிரிதான் தேடிப் படிப்பேன்!’’
‘‘குழந்தைகளுக்கு நீங்க டி.வியில வந்தாலே குதூகலம்...’’ ‘‘அது மட்டுமில்ல... என்னை எங்கே பார்த்தாலும் குழந்தைகள் ஆட்டோகிராப் வாங்குறாங்க, போட்டோஸ் எடுத்துக்குறாங்க. அந்தளவு அவங்க அன்பை சம்பாதிச்சு வச்சிருக்கேன். தெரிஞ்ச குழந்தைகள், ‘அங்கிள்! நாளைக்கு லீவு உண்டா?’னு போன்லயே கேட்பாங்க. ‘உங்களுக்கு லீவு விடுறது நான் இல்ல. உங்க மாவட்ட கலெக்டர்தான்’னு சொல்லிப் புரிய வைப்பேன். அந்த விதத்துல எனக்கொரு ஸ்பெஷல் சைல்டு பழக்கம். என்னை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் தினம் என்ன கலர் ஷர்ட் போடுறேன்னு கூட கரெக்ட்டா கவனிச்சுப் பார்ப்பான். ஒருநாள் டி.வி.யில என்னைப் பார்த்துட்டு உடனே போன் பண்ணி, ‘அங்கிள்! இன்னிக்கு ஏன் நீங்க வாட்ச் கட்டிக்கல’னு பாசமா கேட்டான். அசந்துட்டேன்!’’
‘‘ஓய்வில்..?’’ ‘‘எப்படியும் பணி தொடரும் சார். பள்ளி, கல்லூரிகள்ல லெக்சர்ஸ் கொடுக்குற ஐடியாவும் இருக்கு. இப்ப குடும்பத்தோடு கூட கொஞ்சம் நேரத்தை செலவழிக்க முடியுமே! மனைவி வாலன்டரி ரிட்டயர்மென்ட் வாங்கிட்டாங்க. மகளுக்கு திருமணம் ஆகிடுச்சு. மகன் டெல்லியில் இருக்கான். இனிமே ரிலாக்ஸா வாழ்க்கையைக் கொண்டாடப் போறேன். நான் போற இடமெல்லாம் மக்கள் ஆர்வமா வந்து பேசுறாங்க. அதைவிட வேற என்ன சந்தோஷம் வேணும்?’’
‘‘அடுத்து நீங்க அரசியல்ல இறங்கப் போறதா சொல்றாங்களே..?’’ ‘‘அரசியல்ங்கறது சும்மா இல்ல சார். அதுக்கு ஒரு passion வேணும். ஃபீல்டு வொர்க் வேணும். அந்த அனுபவங்கள் எல்லாம் சும்மா வராது. அரசியல்ல ஆர்வம் இல்ல. இப்போ எல்லாருக்கும் நான் நல்லவனா இருக்கேன். இனிமேலும் அப்படியே இருந்துட்டுப் போறேன்!’’
- மை.பாரதிராஜா படங்கள்: புதூர் சரவணன்
|