நியூஸ் வே



* நயன்தாரா கடந்த ஆறு நாட்களாக சற்குணம் தயாரிக்கும் படத்தில் பகலிலும், ‘இருமுகன்’ படத்திற்காக இரவிலும் ஒரு மணி நேர ஓய்வுடன் நடித்து வருகிறார்.

* மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ சக்கை போடு போட்டது. இதைத் தமிழில் செய்ய சித்திக் முயன்று வருகிறார். பழைய நட்பில் சித்திக் படத்தை விஜய்க்கு நகர்த்தியிருக்கிறார்.



* வரும் ஜூலை மாதத்திலிருந்து ஐதராபாத் நகர டாக்டர்கள் அனைவரும் மருந்து சீட்டுகளில் கேப்பிடல் லெட்டரில் மருந்துகளின் பெயர்களை எழுத வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்யாதவர்களின் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ‘தவறான மருந்துகளை வாங்கி சாப்பிட்டு சுமார் 1 லட்சம் பேர் உடல்நலக் கோளாறுகளால் அவதிப்படுகிறார்கள்’ என ஒரு ஆய்வில் தெரிய வந்ததை அடுத்தே இந்த அதிரடி!

* வெளியூர் ஷூட்டிங் என்றால் இப்போதெல்லாம் அப்பா ரஜினியுடன் சென்று வருகிறார் ஐஸ்வர்யா. நேரத்திற்கு மாத்திரைகள் கொடுப்பது, முக்கியமான வேலைகளை நினைவுபடுத்துவது என அவர் அக்கறையைக் கண்டு யூனிட்டே வியக்கிறது.

* இந்திய விமானப் படையின் போர் விமானங்களில் பயிற்சி விமானிகளாக பெண்கள் நியமிக்கப்படுகிறார்கள். ‘பணியில் சேர்வதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு கர்ப்பம் ஆகக்கூடாது’ என அவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்படுகிறது.

* கிரிக்கெட், கால்பந்து என 8 விளையாட்டுகளுக்கு ஐ.பி.எல் உள்ளிட்ட லீக் போட்டிகள் இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. இவற்றில் விளையாட்டு வீரர்களுக்குத் தரப்படும் சம்பளத்தில் 64 சதவீதம் வெளிநாட்டு வீரர்களுக்கே போகிறது.



* விஜய்சேதுபதியின் நல்ல மனசுக்கு அளவே இல்லை. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை முடித்துவிடும் நிலையில் இருக்கும் செல்வராகவனுக்கு இப்போதே கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதோடு கையில் 11 படங்கள் வைத்திருக்கிறார் சேதுபதி.

* தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறார் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக இந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு ஒரு நேரடி விசிட் அடிக்க உள்ளார் ஜாக்குலின்!

* காவலுக்கு 100, ஆம்புலன்ஸுக்கு 108, தீயணைப்புக்கு 101 என நம்மூரில் ஏகப்பட்ட எமர்ஜென்ஸி நம்பர்கள் உண்டு. ஆனால், எல்லா வித எமர்ஜென்ஸிக்கும் 112 என்ற ஒரே எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது. “அவசரக்காலத்தில் ஒவ்வொரு நொடியும் பொன்னானது. அந்த நேரத்தில் எந்த எண்ணுக்கு கால் செய்ய வேண்டும் என மக்கள் யோசிக்கும் நிலையைத் தடுக்கவே இந்த ஒற்றை எண்’’ என்கிறது ட்ராய். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆக, அமெரிக்காவில் 911 போல, இந்தியாவில் 112 எமர்ஜென்ஸி எண் ஆகலாம். இந்த நம்பரை லாக் செய்யப்பட்ட, பேலன்ஸ் இல்லாத போன்களில் இருந்தும் டயல் செய்ய முடியும்; இலவசமாகப் பேச முடியும்.

* ஈஸ்டர் கொண்டாட்டங்களின்போது அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை குழந்தைகளால் நிறைந்திருக்கும். ‘ஈஸ்டர் எக் ரோல்’ எனப்படும் இந்த நிகழ்வின்போது குழந்தைகளோடு விளையாடுவார்கள் அதிபர் தம்பதியினர். இந்த ஆண்டு ஒபாமாவும் அவர் மனைவி மிச்செல்லியும் குழந்தைகள் புத்தகம் ஒன்றிலிருந்து கதை ஒன்றை நடித்துக் காட்டினர். அவர்களால் எவ்வளவு இயல்பாக குழந்தைகளுடன் கலந்துவிட முடிகிறது!

* வாட்ஸ்அப், வைபர், ஸ்கைப் உள்ளிட்ட ஸ்மார்ட் போன் ஆப்கள் மூலம் நேரடியாக லேண்ட் லைன் போன்களுக்கே கால் போட்டுப் பேசும் வசதி விரைவில் இந்தியாவில் வரப் போகிறது. சமீபத்தில் இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இப்படியொரு வசதி வந்தால் எல்லாவிதமான தொலை அழைப்புகளுக்கான கட்டணங்களும் கண்டபடி குறையும் என்கிறார்கள்!

* ஷீட்டிங் இடையே சில நாள் விடுமுறை கிடைத்த சந்தோஷத்தில் ரிலாக்ஸாக வெளிநாடு சென்று வந்திருக்கிறார் த்ரிஷா. சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவ்வாக இருந்தவர், இப்போது அதற்கு சிறிது காலம் ஓய்வு கொடுக்கப் போகிறார்.

* எல்லாருக்கும் நல்ல மனுஷியா இருக்கறது ரொம்ப கடினமானது. ஆனாலும் ஒவ்வொரு நாளும் அப்படி இருக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன்!’’ - சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் தத்துவம் உதிர்த்திருக்கிறார் சமந்தா.

* லாட்டரி மோகம் நிறைந்த கேரளாவில் தேர்தல் ஆணையமும் அதே ரூட்டில் போகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஓட்டு போடும் அனைவருக்கும் ஒரு ‘நன்றி’ கார்டு வழங்கப்படும். இதில் இருக்கும் நம்பரை வைத்து குலுக்கல் நடத்தி, பரிசுகளையும் வழங்கப் போகிறார்கள். கேரளாவிலேயே இங்கு ஓட்டு சதவீதம் குறைவாக இருப்பதால் இந்தப் போட்டி. ஓட்டு போட கட்சிகள் ஏதாவது கொடுத்தால்தான் தப்பு; தேர்தல் கமிஷன் கொடுத்தால் தப்பில்லை!

* பாரீஸில் பிரெஞ்சு இயக்குநர் ஹென்றி லாங்லுயிஸ் விருது கிடைத்திருக்கிறது கமல்ஹாசனுக்கு. ‘என் குரு அனந்து சார் இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்’ என நெகிழ்ந்து ட்வீட்டியிருக்கிறார் கமல். ‘நினைக்கவே பெருமையா இருக்கு அப்பா’ என ஸ்ருதியும் அதை ரீ-ட்வீட்டி மகிழ்ந்திருக்கிறார்.

* இந்தியாவில் குஜராத் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் வசிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இங்கு 310 சிங்கங்கள் இறந்துள்ளன.