இந்த விருது டானிக்!



தமிழ்நாடு எலெக்‌ஷன் ஃபீவரில் கொதித்துக் கொண்டிருக்க, திரைப்பட தேசிய விருதுகளை அறிவித்து கொஞ்சம் குளிர்படுத்தியிருக்கிறார்கள். போன தடவை மாதிரியில்லாமல் இந்த முறை நமக்கு வாய்ப்புகள் குறைவே. ‘நிச்சயமாக உண்டு’ என எதிர்பார்த்த சில விருதுகள் சரியாக ஏமாற்றியதும் வருத்தமே!

‘பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்ள’ என்ற வரிசையில் சில விருதுகளை வருடந்தோறும் கொடுப்பதுண்டு. அந்த வகையில் ‘விசாரணை’க்கு தமிழின் சிறந்த படம், கிஷோருக்கு சிறந்த எடிட்டிங், சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகர், இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி(!) இசை, ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங்கிற்கு சிறப்புப் பரிசு என களிம்பு தடவி இருக்கிறார்கள். ‘ஐ’யின் மீது தேர்வுக்குழுவினர் ‘கண்’படவேயில்லை. ‘விசாரணை’ மாநிலப் படமாகவே கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது. இப்படியான மனத்தாங்கல்களுக்குப் பிறகு விருது பெற்றவர்களை சந்திக்கப் போனால் அவர்களின் சந்தோஷம் நமக்கு புரிபடுகிறது.



சமுத்திரக்கனியின் அலுவலகம் களையோடு இருக்கிறது. கதவைத் திறந்ததும் இன்னும் வாடாத ‘பொக்கே’கள். ‘‘ஆமா சந்தோஷம்தான். ஊரை விட்டு மெட்ராஸ்க்கு வந்து சினிமான்னே கதியா கிடந்தவனுக்கு இந்த விருது டானிக்தான்!’’ யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்தவர், கை காட்டி உட்காரச் சொல்கிறார். ‘‘சகோதரா... எனக்கு சந்தோஷம்தான். ஆனால், இதுக்கு காரணமானவங்க நிறையப் பேர். இதில் என்னை வச்சு யோசிச்சுப் பார்த்த வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லணும். இந்த விருதை வாங்கிட்டுப் போய் ஒருத்தர்கிட்ட கொடுத்து,
‘ஆசீர்வதிங்க அய்யா’னு கேட்கணும். ஆனால், அந்த கே.பி சார் இப்போ இல்லை. இது பெரிய வருத்தம். ‘நீ சாதிக்கப் பிறந்தவன்டா’னு சொல்லிக்கிட்டே இருந்தார்.

என் வீட்டு மகராசி ஜெயலட்சுமியும், பிள்ளைங்க ஹரி, தியானாவும் என்னை சுதந்திரமா வெளியே விட்டாங்க. இப்பப் போய் இந்த இடைவெளியைக் குறைச்சிட்டு, பசங்களை மடியில் தூக்கிப் போட்டு கொஞ்சிக்கிட்டுக் கிடக்கிறேன். என் முன்னோடிகள் மகேந்திரன், பாரதிராஜா, பாலா, அமீர்னு அலைபேசியில் உரிமையோடு பாராட்டினாங்க. மகேந்திரன் சார் ஒவ்வொரு காட்சியா சொல்லி, ‘இதெல்லாம் அவ்வளவு ஈஸியில்லை’னு பாராட்டினது காலாகாலத்திற்கு மனசில் நிற்கும். அப்படியே அதே வைப்ரேஷனோடு ‘அப்பா’வை கம்ப்ளீட் பண்றேன்!’’ சந்தோஷமாகப் பேசுகிறார் கனி.

‘‘பெரிய சந்தோஷம் என்னன்னா, அது எடிட்டர் கிஷோருக்கு கிடைச்சது. ‘விசாரணை’ பத்தி எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தபோதுதான் அவர் கீழே சரிந்து விழுந்தார். கடைசி வரைக்கும் நினைவே திரும்பாமல் போச்சு. அவர் நினைவில் கடைசியா இருந்தது ‘விசாரணை’தான். அந்த வகையில் அந்த விருது எனக்கு ரொம்பவே எமோஷனல். சமுத்திரக்கனியைப் பொறுத்தவரை அந்த கேரக்டர் ரொம்ப ட்ரிக்கி. நல்லவனா, கெட்டவனானு சொல்லவே முடியாது. அது அவருக்குக்கூட தெரியாது. அப்படியொரு கேரக்டரை செய்ததுக்கு... அருமையா உணர வச்சதுக்கு கிடைச்ச பரிசுதான் விருது. நான் ஹேப்பி!’’ - அமைதியாகப் பேசுகிறார் வெற்றிமாறன்.

ரித்திகா சிங்கிடம் அலைபேசினால் உற்சாகம் கொட்டிக் கிடக்கிறது குரலில். ‘‘எனக்கு இந்தச் செய்தியைச் சொன்னதே டைரக்டர் சுதா மேடம்தான். நம்பவும் முடியல; நம்பாம இருக்கவும் முடியல. கண்ணீரும், பெருமையும், மகிழ்ச்சியும், அழுகையுமா வீட்டுக்குள்ள டான்ஸ் ஆடினேன். முதன்முதலா நடிக்க ஆரம்பிச்ச எனக்கு இந்த விருது கிடைச்சதெல்லாம் பெரிய விஷயம் இல்லையா!’’ சிலிர்க்கிறார் ரித்திகா. இளையராஜாவின் ரீயாக்‌ஷன் என்னவென அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தால்... ‘‘ஒண்ணும் சொல்லலையே பிரதர். நிறையப் பேர் அவரோட கருத்து, நேர்காணல் வேணும்னு கேட்டாங்க. அவரா ஏதாவது சொன்னால்தான் நாங்க சொல்ல முடியும்!’’ என்கிறார்கள். ஆனாலும் அந்த விருதால் கம்பீரமாக எழுந்து நிற்கிறார் அவர்.

- நா.கதிர்வேலன்