ரகசிய வீதிகள்



சுபா

நெல்லூர் மழை இரவு சம்பவத்துக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து... இன்று... ‘‘ஏய், கைய எடு...’’ ‘‘ஏன்..?’’ ‘‘இது பப்ளிக் ப்ளேஸ்...’’ ‘‘புரியல...’’ ‘‘இது பொது இடம்டா...’’ ‘‘நந்து... நீ பல்லைக் கடிச்சிட்டு கோபமாப் பேசறப்ப எவ்ளோ அழகா இருக்க தெரியுமா..?’’ ‘‘இந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஆம்பளைங்களுக்கு வேணா வெக்கம், மானம், கூச்சம் எதுவும் இருக்காது. கைக்கு எட்டற தூரத்துல ஒரு பொண்ணு கெடைச்சா, தொட்டுத் தடவணும்னு தோணும். ஆனா, பொம்பளை அப்படியில்ல. வெக்கம், கூச்சம்லாம் இருக்கற வரைக்கும்தான் அவளுக்கு மரியாதை!’’

‘‘பைக்லேர்ந்து இறங்கி நடக்கும்போது, தோள்ல தோள்ல இடிச்சது யாரு... நீயா, நானா..?’’ ‘‘இடிச்சேன். ஏன்? வெளிச்சத்துல நீ டிராமா போடற. கிட்ட வந்தா நல்லவன் மாதிரி நாலடி தள்ளிப் போற. இருட்டைப் பார்த்தாதான் உனக்கு தைரியமே வருது...’’ ‘‘எனக்கா... எனக்கா வெளிச்சம் பிடிக்கலன்றே? வெளிச்சமும், இருட்டும், ரெண்டுமே எனக்கு முக்கியம்னு உனக்குத் தெரியாது..?’’ ‘‘ஒனக்கு கேமரா தோள்ல இருந்தா வெளிச்சம் வேணும். பொண்ணு பக்கத்துல இருந்தா, இருட்டு வேணும். ஏய்... கொஞ்சம் விட்டா எங்கெல்லாம் போகுது உன் கை..?’’



‘‘சரி... ஒரு கிஸ் குடு. கைய எடுத்துடறேன்!’’ ‘‘செருப்பு பிஞ்சு போகும்..!’’ ‘‘ரெண்டு செருப்பு இருக்குல்ல? ஸோ, ரெண்டு கிஸ் குடு...’’ ‘‘மாறவே மாட்டியாடா..?’’ ‘‘மொத மொதல்ல என் கிட்ட நீ என்ன ப்ராமிஸ் வாங்கின..? என்னிக்கும் மாறிட மாட்டியே விஜய்னுதான கைல அடிச்சு  சத்தியம் வாங்கின? இப்ப மாறச் சொல்ற..?’’ ‘‘இப்படிப் போனா அப்படி வருவ. அப்படிப் போனா இப்படி வருவ..! சரியான மூர்க்கன்டா நீ!’’ ‘‘சரி, உன்கிட்ட கிஸ் வாங்கணும்னா என்னடி சத்தியம் பண்ணித் தரணும்..?’’

‘‘ஒரு சத்தியமும் பண்ணத் தேவையில்ல. ஆனா, இந்த கிஸ்ஸோட என்னை விட்டுரணும். நினைச்சு நினைச்சு கேக்கக் கூடாது...’’ ‘‘ஆசையைப் பாரு! அப்படில்லாம் எந்தக் கண்டிஷனும் போடக்கூடாது. சரியான அழுத்தக்காரிடி நீ. உனக்கு இதுல கொஞ்சம்கூட இன்ட்ரஸ்ட்டே இல்லாத மாதிரியும், என்னவோ எனக்காகதான் வளைஞ்சு குடுக்கற மாதிரியும்...’’ ‘‘முட்டாள்! இது பொது எடம்னுதான பயப்படறேன்..?’’ ‘‘நைட்டு. இருட்டு. பீச். அந்த நிலாவைத் தவிர நம்பளை வேடிக்கை பார்க்க யாரும் இல்ல... அப்புறம் என்னடீ கூச்சம்..? கேட்டதைக் குடு! எழுந்து போயிட்டே இருக்கலாம்...’’

நந்தினி சற்றே வெட்கச் சிவப்புடன் சில அங்குலங்கள் நகர்ந்து, அவன் முகத்தைப் பிடித்துத் திருப்பினாள். இமைகளை மூடி அவன் இதழ்களை நாடினாள். அவளிடமிருந்து எழும் அந்தப் பிரத்யேக பவுடர் வாசம் அவன் நுரையீரல்களைக் கிறங்கடிக்க... அவளுடைய ஈரமான உதடுகளை அவன் கவ்வ இருந்த அந்த முக்கிய தருணத்தில், அவனுடைய தோள்கள் பிடித்து உலுக்கப்பட... ஒரு திடுக்கிடலுடன் கனவு சட்டென்று அறுந்துபோயிற்று. விஜய் படக்கென்று கண்களைத் திறந்தான். எதிரில் அவனுடைய அம்மா மரகதம் நின்றுகொண்டிருந்தாள்.
‘‘என்னம்மா நீ? நானே எழுந்துப்பேன் இல்ல..?’’

‘‘ஏய், நீதானடா காலைல எம்.டி.யோட மீட்டிங் இருக்கு. சீக்கிரம் எழுப்பிடுன்னு சொன்ன..?’’ ‘‘இன்னும் அஞ்சு நிமிஷம்மா, ப்ளீஸ்...’’ மறுபடி கண்களை மூடிக்கொண்டான். அறுந்த இடத்திலிருந்து கனவு தொடராதா என்று காத்திருந்தான். நினைவு முழுவதும் நந்தினி வியாபித்தாளே தவிர, அறுபட்ட இடத்திலிருந்து கனவு தொடரவில்லை. எழுந்து படக்கென்று அமர்ந்தான். ‘‘போம்மா... முக்கியமான நேரத்துல கனவைக் கலைச்சிட்ட!’’

‘‘அப்படி என்னடா கனவு..?’’ என்று கேட்டபடி, மரகதம் சமையலறை வாசலில் வந்து நின்றாள். ஐம்பது வயது. துலக்கியது போன்ற பளிச் முகம். மெல்லிய தேகம். ஒன்றிரண்டு நரை கலந்துவிட்ட அடர்கூந்தல். பருத்திப் புடவையைக் கட்டுவதிலும் ஒரு நேர்த்தி. ‘‘நம்ம மொட்டை மாடில பக்கத்து வீட்டு மாமரம் எட்டிப் பாக்குதில்ல... ‘அதுலேர்ந்து நாலு மாங்கா பறிச்சுத் தா...’னு நீ கேக்கறே! நான் குட்டிச் சுவத்துல ஏறி எம்பி மாங்காவைப் பிடிக்கற நேரத்துல கால் வழுக்குதா, நீ பதறி என் சட்டையைப் பிடிக்கறியா...’’ ‘‘டேய், நிறுத்துடா! எனக்காக மாங்கா பறிக்க இவரு ஏறுனாராம்... கண்ணு பூரா பொய்யி... நீ என்ன கனவு கண்டேனு எனக்குத் தெரியும்!’’

விஜய் குனிந்து விரல்நுனிகளைக் கிள்ளினான். ‘‘தெரிஞ்சுமாம்மா கலைச்சே..?’’ என்று முணுமுணுத்தான். ‘‘நந்து நந்துனு நீ தலகாணிய எச்சப் பண்ணிக்கிட்டிருக்கறதை எத்தனை நேரம்டா வேடிக்கை பாக்கச் சொல்றே..?’’ விஜய் முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டான். ‘‘ஐயோ, வேற என்னம்மா உளறினேன்..?’’ ‘‘இப்ப நீ எழுந்துக்கறியா... இல்ல, நந்தினிக்கே போன் பண்ணட்டுமா..?’’ ‘‘சரியான ராட்சஸிமா நீ. எங்க ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்ச கையோட தனிக்குடித்தனம் போயிடணும்ப்பா...’’ என்றபடி தன் ஸ்மார்ட் போனை எடுத்தான்.

நந்தினியிடமிருந்து மூன்று வாட்ஸ்அப் மெசேஜ்கள். ‘குட் மார்னிங்டா..’ என்று பூங்கொத்துடன் ஒரு ஸ்மைலி. ‘இன்றைய முக்கியமான நாள் உனக்கு வெற்றிகரமான நாளாக அமையட்டும்..!’ என்று சிகப்பு உதடுகளுடன் ஒரு வாழ்த்து. ‘நீ தீவிரமாக ஆசைப்பட்டால், அது நிறைவேறுவதற்கான வழிமுறையும் தானாக அமையும்..’ என்று பட்டாம்பூச்சி படத்துடன் ஒரு சேதி. இரண்டு கட்டை விரல்களையும் பயன்படுத்தி அவள் குறுஞ்செய்திகளை அனுப்பும் வேகம் கண்டு பிரமித்திருக்கிறான். மரகதம் சட்டென்று கையை நீட்டி போனைப் பறித்தாள்.

‘‘போடா! முக்கியமான மீட்டிங்னு சொன்ன... சீக்கிரம் ரெடியாகு!’’ ‘‘பெட்ஷீட்டை நீ மடிச்சிரும்மா...’’ என்றபடி விஜய் பாத்ரூமுக்குள் பாய, மரகதம் சிரித்துக்கொண்டே சமையலறைக்குத் திரும்பினாள். விஜய் குளித்தான். உடுத்தினான். கடவுளர் படங்களோடு இருந்த அவனுடைய அப்பாவின் படத்துக்கு எதிரில் நின்றான். கண்மூடி கும்பிட்டான். அவன் ஆசைப்பட்டான் என்று எட்டாவது படிக்கும்போதே அவனுக்குக் கேமரா வாங்கிக் கொடுத்தவர். புகைப்படக்கருவி பற்றிய புத்தகங்கள் சேகரித்துக் கொடுத்தவர். அதிகாலையில் ஸ்கூட்டரில் கடற்கரைகள், பூங்காக்கள், பாலங்கள் என்று கூட்டிப் போய் படமெடுக்கத் துணையிருந்தவர். அவன் எடுத்த படங்களை போட்டிகளுக்கு அனுப்பி பரிசு பெற்றுக் கொடுத்து உற்சாகமூட்டியவர். அவன் விரும்பிய கல்லூரிப் படிப்பை  அவனுக்கு வழங்கியவர்.

கல்லூரி இறுதித் தேர்வில் அவனை விட்டுவிட்டுத் திரும்பும் வழியில், ஆளில்லா ரயில் பாதையை அவசரமாகக் கடக்க முனைந்ததுதான் முட்டாள்தனம். வீட்டை விட்டு முழுசாகப் போனவர் மூட்டையாகத் திரும்பினார். ஆறு மாதங்களாயிற்று அவன் அம்மாவின் கண்ணீர் உலர. பல்கலைக்கழகத்தில் முதலாவதாகத் தேர்வாகி, தங்கப்பதக்கம் வாங்கியபோது, கண்டு களிக்க அவர் இல்லை. கே.ஜி. தொலைக்காட்சியில் அவன் ஒளிப்பதிவாளராக வேலைக்குச் சேர்ந்தபோது, ஆசிகள் வழங்கியனுப்ப அவர் இல்லை. ஆனாலும், அவர் அவனோடு ஐக்கியமாகி, எப்போதும் இணைந்திருப்பதாகவே அவன் உணர்ந்தான். போனில் அலாரம் ஒலித்து நேரத்தை நினைவூட்டியது.

“அம்மா, பொங்கல் ரெடியா..?” “பொங்கல்னு யாருடா சொன்னாங்க..?” “நம்ம வீட்ல வாரத்துக்கு ஆறு நாள் வெண்பொங்கல் தானம்மா..?” “வருவா ஒருத்தி.. ஆப்பமும், ரவா தோசையும், பெஸரெட்டும் பண்ணித் தர! அதுவரைக்கும் இந்த பொங்கலைப் பொறுத்துக்க...’’ மரகதம் சாப்பாட்டு மேஜையில் ஹாட்பேக்கில் சிற்றுண்டியை பொட்டென்று வைக்க... அதைத் திறந்து பார்த்துவிட்டு, “ஓ... இன்னிக்கு ரவா இட்லியா..?” என்று தட்டில் எடுத்து வைத்தான், விஜய். “நீயும் எடுத்துக்க..” என்று அதை மரகதத்திடம் நீட்டினான். இன்னொரு தட்டில் தனக்கானதை எடுத்துக்கொண்டான். “நேரத்தோட எழுந்துக்கிட்டா, இப்படி அள்ளி அள்ளிப் போட்டுக்க வேண்டாமில்ல..?” என்று தக்காளி சட்னியை அவனுக்குப் பரிமாறினாள் மரகதம்.

“என்னென்ன திட்டணுமோ, எல்லாத்தையும் எழுதி வெச்சுக்க. நைட்டு வந்து வாங்கிக்கறேன். இப்ப டயமாச்சு...” சாப்பிட்ட வேகத்திலேயே ஹெல்மெட்டை அள்ளிக்கொண்டு, வாசலுக்கு ஓடினான். மோட்டார் சைக்கிளை நிமிர்த்தினான். “வரேம்மா..!” டீசலும், பெட்ரோலும் காற்றைக் கற்பழித்திருந்த பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்தது, அவன் பணிபுரியும் கே.ஜி. தொலைக்காட்சி நிலையம். அதன் அலுவலகத்தைச் சுற்றி, இரண்டாள் உயரத்துக்கு மதில் சுவர். சீருடை அணிந்து வாசலிலேயே மடக்கும் செக்யூரிட்டி ஆட்கள். அவனைப் பார்த்ததும், குறுக்குக் கட்டையை விலக்கி, புன்னகையுடன் அனுமதித்தார் செக்யூரிட்டி. விஜய் மோட்டார் சைக்கிளை பைக் ஸ்டாண்டில் நிறுத்தினான். கார் பார்க்கிங் பகுதிக்குப் பார்வை பாய்ந்தது. நல்லவேளை, இன்னும் எம்.டி.யின் ரோல்ஸ் ராய்ஸ் வரவில்லை. எதிர்ப்பட்ட சக ஊழியர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டே வேகமாக நடந்து, லிஃப்டை அடைந்தான். மூன்றாவது மாடியில் அவனுக்கான கேபினை அடைந்து, தன் பையை வைத்தான். போன் சிணுங்கியது. எடுத்தான்.

கல்யாணி..! “ஹாய் கல்லு... நான் வந்தாச்சு..!” “நீ அஞ்சு நிமிஷம் லேட்டுடா... எம்.டி. கத்தப் போறாரு...” “எம்.டி இன்னும் வரல...” “யார் சொன்னது..?” “பார்க்கிங்ல அவர் கார் இல்ல...” “போடா, புத்திசாலி! அவரை ட்ராப் பண்ணிட்டு, வண்டி சர்வீஸுக்குப் போயிருக்கு. சட்டுனு அவர் ரூமுக்கு ஓடி வா...” பரபரப்பானான். மானிட்டரின் கருப்புத் திரையில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தான். தலைமுடியை சரி செய்துகொண்டான். லிஃப்டுக்காகக் காத்திருக்காமல், படிகளை இரண்டு மூன்றாக இறங்கி, இரண்டாவது தளத்துக்கு வந்து சேர்ந்தான். காரிடாரில் கல்யாணியும், முரளிதரனும் காத்திருந்தார்கள்.

கல்யாணியை சின்னத்திரையில் காணாதவர்கள் குறைவு. குழந்தைத்தனம் மாறாத உருண்டை முகம். பெரிய கருவிழிகள். வடிவான உதடுகள். தெளிவான உச்சரிப்பில் தேன் குரல். உறுத்தாத உயரம். கச்சிதமான உடற்கட்டு. முரளிதரன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். நாற்பத்தைந்து வயதிலேயே பெருவழுக்கை. எப்போதும் கட்டம் போட்ட சட்டையும், கவலையான முகமுமாகத் திரிபவர். ‘‘கம்...’’ என்று வேகமாக முன்னால் நடந்தார். ‘நிர்வாக இயக்குநர்’ என்று பித்தளை அறிவிப்பு வைத்த கதவைத் திறந்ததும், எம்.டி.யின் உதவியாளர் செந்தாமரை தென்பட்டார். பெயருக்குத் தொடர்பில்லாமல், மிக நவீனமாக உடுத்தியிருந்த இளம் எம்.பி.ஏ. கண்களால் வரவேற்று, இன்டர்காமில் பேசி, ‘‘உள்ள போலாம்...’’ என்றார்.

பதினெட்டு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தபின், அந்த அறைக்குள் விஜய் இதுவரை மூன்று முறைதான் நுழைந்திருக்கிறான். ஒவ்வொரு முறையும் சுவரின் வண்ணம் மாறியிருக்கும். சுவரை அலங்கரிக்கும் நிழற்படங்கள் வேறாகியிருக்கும். பூந்தொட்டிகள் புது இடத்துக்கு நகர்ந்திருக்கும். இந்த முறையும் அதே பிரமிப்பு. மாபெரும் மேஜையை அடுத்திருந்த உடல் புதையும் குஷன் சோஃபாக்களில் அமிழ்ந்து அமர்ந்தார்கள். உள்ளறையிலிருந்து கைகளைத் துடைத்துக்கொண்டே நிர்வாக இயக்குநர் கே.கிரிதர் வந்தார். எதிர் இருக்கையில் அமர்ந்தார். வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நான்கு தமிழ்ச் சேனல்களின் ஒட்டுமொத்த முதலாளி என்று நம்ப முடியாத நாற்பது வயது.

எப்போதும் நெருக்கமான, செங்குத்தான கோடுகள் அச்சிட்ட வான் நீலச் சட்டை. கருநீலநிற பேன்ட். லெதர் பெல்ட். விளிம்பில்லா கண்ணாடி. சூழ்ந்திருக்கும் ஒரு சுகந்தமான வாசம். ஊடுருவும் கூர்மையான பார்வை. முகத்தில், செல்வத்தோடு சேர்ந்துவரும் ஒரு பொலிவு. அவரைப் பார்த்ததும் யாவரும் முதுகு சாயாமல் நிமிர்ந்து அமர்ந்தார்கள். ‘‘சொல்லுங்க, முரளி...’’ அதிராத குரல். ‘‘சார்... ஞாயித்துக்கிழமை காலைல, இப்ப வந்திட்டிருக்கற ஆன்மிகம் ப்ரோகிராமுக்குப் புதுசா ஐடியா இருந்தா சொல்லச் சொன்னீங்க, சார்...’’ ‘‘யெஸ்...’’ முரளிதரன் கல்யாணியைப் பார்த்தார். கல்யாணி தெளிவான குரலில் தொடர்ந்தாள். ‘‘நம்ம ப்ரோகிராம்ல பெரும்பாலும் பிரபலமான கோயில்களை கவர் பண்ணி போட்டுட்டிருக்கோம், சார்...’’

‘‘எல்லா சேனலும் அதையே பண்ணுதே..?’’ ‘‘அதான் சார்... நம்ம நாட்டுல எத்தனையோ புராதனமான கோயில்ங்க சீண்டப்படாம, சீரழிஞ்சுட்டிருக்கு. எத்தனையோ கோயில்களுக்குப் பின்னால, நாம தெரிஞ்சுக்காத சரித்திரம் இருக்கு. அந்தக் கோயில்களைப் பத்தி புது கோணத்துல நிகழ்ச்சியைத் தொகுத்துக் குடுத்தா, மக்களுக்கு மத்தியில ஒரு விழிப்புணர்வே கொண்டு வரலாம், சார்!’’ ‘‘உதாரணத்துக்கு..?’’ கிரிதர் அதிக வார்த்தைகளை விரயம் செய்வதில்லை. ‘‘திருக்கோவிலூர் பக்கத்துல அரவமணி நல்லூர்னு ஒரு ஊர். அங்க ஏழு நூற்றாண்டுக்கு முன்னால கட்டப்பட்ட அமிர்தலிங்கேஸ்வரர் கோவில். அங்க இருக்கற பஞ்சலோக நடராஜர் சிலையை பிரிட்டிஷ்காரங்க தூக்கிட்டுப் போகப் பார்த்த ஒரு கதை இருக்கு. குருக்கள் சுவாரசியமா சொல்வாரு. அற்புதமான கோயில் சார். ஆனா, சரியான பராமரிப்பு இல்ல. கோயிலை ஒட்டி, பெண்ணையாறு ஓடுது சார். விஷுவல்ஸ்லாம் சூப்பரா இருக்கும்!’’ அந்தக் கோயிலில் தான் சந்திக்கப் போகும் பேராபத்து பற்றி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கல்யாணி கண்களில் கனவோடு விவரித்துக்கொண்டே போனாள். ஏழு நூற்றாண்டுக்கு முன்னால கட்டப்பட்டது அமிர்தலிங்கேஸ்வரர் கோவில். அங்க  இருக்கற பஞ்சலோக நடராஜர் சிலையை பிரிட்டிஷ்காரங்க தூக்கிட்டுப் போகப்  பார்த்த ஒரு கதை இருக்கு...

(தொடரும்...)

ஓவியம் : அரஸ்