அரசியலால் தமிழகம் இழந்த மின்சாரம்!
‘‘இந்தியாவின் எல்லா மாநில முதல்வர்களுடனும் என்னால் பேச முடிகிறது. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தியாவுக்குள் ஒரு தனி அரசாங்கமாக தமிழகம் இருக்கிறது’’ என சாடியிருந்தார் மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல். அவர் சொன்ன இன்னொரு விஷயம் முக்கியமானது. ‘‘புதிய மின் திட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் ஆர்வமாகப் பேசுகிறார்கள். பீகாரில் அப்படி ஒரு மோதலுக்குப் பிறகான பத்தே நாளில் முதல்வர் நிதிஷ்குமார், மாநிலத்துக்குத் தேவையான புதிய மின் திட்டங்கள் குறித்துப் பேசினார்’’ என்றார் கோயல். இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்படும் எல்.இ.டி பல்ப் திட்டம் தமிழக எல்லைக்குள் வர முடியவில்லை. இதனால் தமிழகம் இழந்தது நிறைய!

விரைவில் தெரு விளக்குகளும் எல்.இ.டி பல்புகளாக மாற்றப்பட உள்ளன. அதற்கும் மலிவு விலையில் பல்புகளைத் தருகிறது மத்திய அரசு. சென்னை மாநகராட்சி சமீபத்தில் 30 ஆயிரம் சோடியம் பல்புகளை எல்.இ.டி பல்புகளாக மாற்ற 145.67 கோடி ரூபாயை ஒதுக்கியது. இதை வெறும் 37 கோடி ரூபாயில் செய்து தர மத்திய அரசு தயாராக இருந்தும், தமிழகம் அதை நிராகரித்துவிட்டது. கூடுதலாக செலவிடும் 108 கோடி ரூபாய் எங்கே போகிறது என்பது கேள்வி!
குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி. பல்புகளைப் பொருத்தினால், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 43 ஆயிரத்து 750 கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தலாம் எனக் கணக்கிடுகிறது மத்திய அரசு. இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் இருக்கும் அத்தனை பல்புகளையும் எல்.இ.டி பல்புகளாக மாற்றுவதற்காக ‘உஜாலா’ என்ற பெயரில் கடந்த ஆண்டு திட்டம் அறிமுகமானது.
கடந்த ஆண்டு இந்தியாவின் 12 மாநிலங்களில் 120 நகரங்களில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், இந்த ஆண்டில் விரிவடைகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 7.9 கோடி பல்புகள் தரப்பட்டுள்ளன.
குண்டு பல்புகள் அதிகபட்சம் ஆயிரம் மணி நேரம் எரியும். விலை மிகக்குறைவு என்பதால் இந்த பல்புகளைத்தான் பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் சுமார் 77 கோடி குண்டு பல்புகள் பயன்பாட்டில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
எல்.இ.டி. பல்புகள் 3 முதல் 7 ஆண்டுகள் எரிந்து வெளிச்சம் தரும். ஒரு 60 வாட் குண்டு பல்பு தருகிற வெளிச்சத்தை 5 வாட் எல்.இ.டி. பல்பு தந்துவிடும். ஒரு பல்பே 55 வாட்ஸை மிச்சம் பிடிக்கிறது என்றால், இந்தியாவின் 77 கோடி பல்புகளையும் மாற்றினால் எவ்வளவு மின்சாரம் மிச்சம்! இதன்மூலம் மின்வெட்டு பிரச்னையை பெருமளவில் சரிக்கட்டலாம் என்பதால்தான் இந்த முயற்சி.
இந்தியாவில் அத்தனை பல்புகளும் எல்.இ.டி பல்புகளாக மாறினால், ஒவ்வொரு நாளும் மின்சாரத் தேவையில் 10 ஆயிரம் மெகா வாட் குறையும். எனவே கோடையில் பவர் கட் பிரச்னை இருக்காது.
எல்.இ.டி பல்ப் சுற்றுச்சூழலுக்கு இரண்டு விதங்களில் உதவுகிறது. மின்சாரத் தேவையை இது நேரடியாகக் குறைப்பதால், நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்து சூழலைக் கெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்கப்படுகிறது; இன்னொரு பக்கம் இந்த பல்ப் மற்றவற்றைவிட பசுங்குடி வாயுக்களைக் குறைவாகவே வெளியிடுவதால், புவி வெப்பமயமாதல் தவிர்க்கப்படுகிறது. இந்தியா முழுமையாக எல்.இ.டி.க்கு மாறினால், ஆண்டுக்கு 80 மில்லியன் டன் கார்பன் இந்த சூழலில் உமிழப்படுவது தடுக்கப்படும்.
இந்தத் திட்டம் துவங்குவதற்கு முன்பு ஒரு எல்.இ.டி. பல்பு விலை 310 ரூபாய். வாங்குவது அதிகரித்ததால், உற்பத்தி பெருகி, விலையும் குறைந்திருக்கிறது. இப்போது வெளி மார்க்கெட்டில் 130 ரூபாய்க்குக் கிடைக்கிறது. உஜாலா திட்டத்துக்கு மத்திய அரசு ஒரு பல்பை 64.41 ரூபாய்க்கு வாங்குகிறது.
இன்னும் மூன்று ஆண்டுகளில் எல்லா பல்புகளையும் எல்.இ.டி பல்புகளாக மாற்றும் திட்டம் நிறைவேறினால், புதிதாக 44 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டிய தேவையை அது தவிர்க்கும்.
இந்தியாவில் இருக்கும் பெரிய மின்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தையும் எல்.இ.டி. பல்புகள் தயாரிக்கச் சொல்லி ஊக்கம் தருகிறது அரசு. அதே நேரத்தில் குண்டு பல்பு உற்பத்தியும் படிப்படியாக நிறுத்தப்படுகிறது. கடந்த ஆண்டோடு 100 வாட் குண்டு பல்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு 60 வாட் பல்பு உற்பத்தியும், 2017ம் ஆண்டுக்குப் பிறகு 40 வாட் பல்பு உற்பத்தியும் நிறுத்தப்படும்.
இந்தத் திட்டத்தில் பொதுமக்களுக்கு அரசே மலிவு விலையில் எல்.இ.டி. பல்புகளைத் தருகிறது. இந்த பல்புகள் பொதுமக்களுக்கு 10 ரூபாய் கட்டணத்தில் தரப்படும். இதுதவிர மாதா மாதம் மின் கட்டணத்துடன் இதற்காக 10 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். எனவே பல்பின் விலை 130 ரூபாய். ஒரு வீட்டில் ஒரு குண்டு பல்பை எல்.இ.டி. பல்பாக மாற்றுவதால் மின் கட்டணத்தில் ஆண்டுக்கு 162 ரூபாய் சேமிக்கலாம். இந்த சேமிப்பு 3 முதல் 7 ஆண்டுகளுக்குத் தொடரும்.
எல்.இ.டி.க்கு தமிழகம் மாறினால், இரண்டு கூடங்குளம் அணுமின் நிலையங்களை புதிதாக உருவாக்க வேண்டிய தேவை இருக்காது.
- அகஸ்டஸ்
|